

ஒரு கல்வெட்டு இவ்வளவு வரலாற்றுச் செய்திகளைத் தர முடியுமா என்று வியப்பூட்டும் அளவுக்கு விரிவாகவும் தெளிவாகவும் பேசும் கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோயில்கள் பல கொண்டுள்ளன. பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் ஒரு கோயிலின் வாழ்க்கை எப்படியிருந்தது என்றறிய விழைவாருக்கு முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எடுப்பித்த இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் கைப்பிடித்து வழிகாட்டும்.
இராஜராஜீசுவரத்தில் இராஜராஜரும் இராஜேந்திரரும் பிறரும் வழங்கியிருக்கும் வரலாற்றுப் பதிவுகள் அனைத்துமே அந்நாளைய சமுதாயம் காட்டும் கண்ணாடிகள் என்றாலும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகத் தளிச்சேரிக் கல்வெட்டுக்குள் கண் வைப்போம். தமிழ்நாட்டில் மட்டுமன்று, இந்தியத் திருநாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் இதுவொத்த கல்வெட்டுகள் பதிவாகவில்லை என்பது இதன் பெருமை. இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுக் கோயிலின் வடசுற்றுச் சுவரின் புறத்தே காணப்படுகிறது.
பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் கல்வெட்டு: கல்வெட்டின் முதற்பகுதி, இக்கோயிலில் ஆடல் நிகழ்த்தத் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 102 தளிச்சேரிகளிலிருந்து முதல் இராஜராஜர் தெரிந்தெடுத்து வரவழைத்த 400 ஆடற்பெண்களின் பெயர்களையும் கோயில் வளாகத்தில் அவர்களுக்கு ஆளுக்கொரு வீடு அளிக்கப்பட்ட தகவலையும் கொண்டுள்ளது. அதென்ன தளிச்சேரி? ஆடற்கலை வளர்த்த உறைவிடப்பள்ளிகளே சோழர் காலத்தில் தளிச்சேரிகளாக அறியப்பட்டன. கோயில் சார்ந்தும் ஊர்களிலும் பரவியிருந்த இத்தகு தளிச்சேரிகளில் பயின்றவர்கள் கூத்தப்பிள்ளைகளாகவும் தளிச்சேரிப் பெண்டுகளாகவும் அறிமுகமாயினர். ‘இத்தளிக் கூத்தப்பிள்ளை’ என்று தளியிலாடிய பெண்களைப் பெருமையோடு சுட்டுகிறது பழுவூர்க் கல்வெட்டு.
இராஜராஜீசுவரத்தின் 400 தளிச்சேரிப் பெண்டுகளும் அவரவர் பெயருக்கு முன் ‘நக்கன்’ எனும் முன்னொட்டுக் கொண்டிருந்தனர். சிவபெருமானைச் சுட்டும் இந்த நக்கன் என்ற பெயர் பதிகங்களிலும் பழங் கல்வெட்டுகளிலும் பரவலாகப் பழகி வந்துள்ளது. இப்பெண்கள் ஆடல் பயின்ற இடங்களின் பெயராய்வும் இவர்களுக்கு இடப்பட்டிருந்த இயற்பெயர்களும் அரிய தரவுகளை முன்வைக்கின்றன. பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் நிலவிய பெயரிடு முறைகளை அறியத் தளிச்சேரிக் கல்வெட்டுப் பெருந்துணையாகிறது.
இப்பெண்களின் மிகச் சிறிய பெயர்கள் காமி, உமை என ஈரெழுத்துப் பெயர்களாக அமைய, நீளமான பெயராக, ‘நீறணிபவழக்குன்று’ கண்சிமிட்டுகிறது. இந்த 400 பெண்களுள் 40 விழுக்காட்டினர் ஊர், கோயில், தெய்வம், அரசமரபுகள் சார்ந்த பெயர்களைக் கொண்டிருக்க, 60 விழுக்காட்டினர் பொதுப் பெயரினர். சண்டை, மண்டை, குப்பை எனவும் சிலர் பெயர் கொண்டிருந்தனர். இவர்களில் 20 விழுக்காட்டினர் நான்கெழுத்துப் பெயர்களையும் 15 விழுக்காட்டினர் மூன்றெழுத்துப் பெயர்களையும் பெற்றிருந்தனர். 50 விழுக்காட்டுப் பெயர்கள் இகர ஈற்றின. ஒரே பெயருடையவர்களை இனங்காண உயரம், நிறம் தொடர்புடைய முன்னொட்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
கந்தருவர்களும் வாத்தியக்காரர்களும்: இறைவன் திருமுன் ஆடல் போதுமா, இசை-பாடல் வேண்டாமா என்று நினைப்பாருக்கு விடை கூறுமாறு போலவே இக்கல்வெட்டின் இரண்டாம் பிரிவு இங்கு பணியிலிருந்த 138 கலைஞர்களை வரிசைப்படுத்துகிறது. இவர்களில் 13 பேர் வேளைக்காரப்படைகளிலும் சிலர் குதிரை, யானைப்படைப் பிரிவுகளிலும் ஒருவர் வாள்படையிலும் வீரர்களாக விளங்கியவர்கள். இசைப் பணியேற்ற இவர்கள் கந்தருவர்களாகவும் பக்க வாத்தியக்காரர்களாகவும் வங்கியம், முத்திரைச்சங்கு இயக்கியவர்களாகவும் திறன் காட்டியுள்ளனர்.
400 பெண்களுக்கும் நிகழ்வுகள் அமைத்துத் தரவும் மேற்பயிற்சிகள் அளிக்கவும் 7 நட்டுவர்களும் பாடல் பயிற்சியளிக்க 4 பாணர்களும் இருந்தனர். சங்க, சமகால இலக்கியங்களில் சுட்டப்பெறாத பாடவியம், மெராவியம் எனும் இசைக்கருவிகளை இயக்கியவர்கள் உயர் ஊதியப் பிரிவிலிருக்க, வீணை, வங்கியம், முத்திரைச்சங்கு, உடுக்கை, கொட்டிமத்தளம் இசைத்தவர்கள் சற்றே குறைவான ஊதியத்தில் பணியாற்றினர்.
கொட்டாட்டுப் பாட்டு, தமிழ்ப் பாட்டு, ஆரியப் பாட்டு எனப் பல்வகைப் பாடல்கள் பாடவும் காண பாடவும் உரிய ஊதியங்களில் கலைஞர்கள் இருந்த இக்கலைக்கோயிலில் சகடைக்கொட்டிகளாக 5 குழுக்களும் தடிமாறியவர்களாகச் சிலரும் பணியாற்றினர். இக்கலைஞர்களின் பணிகளை மேற்பார்வையிடவும் ஒழுங்கு செய்யவும் நாயகம் செய்வாராக இருவர் இருந்தனர். இராஜராஜீசுவரத்தில் 19 வகைத் தொழில்கள் சார்ந்த 79 பணியாளர்கள் தளிச்சேரிக் கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் பணியாற்றியுள்ளனர். பானை வனைவோர், நீரால் தூய்மை செய்வோர், விளக்கேற்றுவோர், முடிதிருத்துவோர், காலம் கணிப்போர், உடைவெளுப்போர், கணக்கர்கள், பெருந்தச்சர்கள், திருவாய்க்கேள்விகள், தையல்கலைஞர்கள், கன்னார்பெருமக்கள் எனப் பல்வகைத் தொழிலாளர்களாய் அவர்கள் விளங்கினர். அவர்களை மேற்பார்வையிடக் கண்காணித் தட்டாண்மை பொறுப்பிலிருந்தார்.
கலைஞர்களுக்கும் தொழில்வல்லாருக்கும் ஊதியமாக நிலவிளைவே அமைந்தது. ஒரு வேலி நிலத்தில் 100 கலம் நெல்விளைவு இருந்ததால், ஆடற்பெண்களுக்கு ஆளுக்கு ஒரு வேலி நிலவிளைவும் கலைஞர்களுக்கும் தொழிலர்களுக்கும் அவரவர் பணிக்கேற்றாற்போல் இரு வேலி தொடங்கி அரைவேலி அதனினும் குறைவு என நெல்விளைவுகளும் ஊதியமாயின. இந்நெல் ஆடவல்லான் எனும் பெயருடைய அளவு நிர்ணயம் செய்யப்பட்ட மரக்காலால் அளந்து தரப்பட்டது.
நெறிமுறை சொல்லும் பாங்கு: தளிச்சேரிக் கல்வெட்டின் மிகச் சிறந்த பகுதி, அது சுட்டும் பணி ஒப்பந்த நெறிகளே. பணியாளருள் யாரேனும் இறந்தாலோ, வெளிநாடு சென்றுவிட்டாலோ அவர்தம் நெருங்கிய உறவினர் அப்பணிக்குரிய தகுதி பெற்றிருப்பின் தாமே பணியிலமர்ந்து ஊதியம் பெறலாம். பணித்தகுதி இல்லாத உறவினர் தாமறிந்த பணிவல்லாரைப் பொறுப்பிலமர்த்தி ஊதியம் கொள்ளலாம். பணி நீங்கியவருக்கு நெருங்கிய உறவினரே இல்லையெனில், அதே பணிசெய்யும் யாரும் தாம் அறிந்த பணித் திறனாளரைப் பொறுப்பிலமர்த்தலாம். இவ்விதிமுறைகள் ஒழுங்குறப் பின்பற்றப்பட்டமைக்குத் தளிச்சேரிக் கல்வெட்டிலேயே மூன்று சான்றுகள் உள்ளன.
பணிவகைமை, பணியாளர், பணிஊதியம், ஒப்பந்தநெறிகள் பேசும் இத்தளிச்சேரிக் கல்வெட்டு அந்நாளைய கோயில்கள், நாடு-ஊர்கள், ஆடற்கலைப் பள்ளிகள், படையமைப்புகள், இசைக்கருவிகள் குறித்து அள்ளித்தரும் வரலாற்றுத் தரவுகள் அளப்பரியன. இந்த ஒரு கல்வெட்டே இத்தனை வழங்குமானால் தமிழ்நாட்டுக் கோயில்களில் பராமரிப்பின்றி அழிந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் எத்தகு வரலாற்றை மீட்டுருவாக்கத் துணைநிற்கும் என்பதை ஒரு நொடி நினைத்துப் பார்த்துக் கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம். அவைதாம் நம் தலைப்பெழுத்துகள்.