

தான் வாழ்ந்த கோவில்பட்டி வட்டாரக் கரிசல் காட்டு வாழ்க்கையையும் அந்த மக்களின் மொழியில் பதிவுசெய்தார் எழுத்தாளார் கி.ராஜநாராயணன். அந்த வகையில் தமிழில் கரிசல் இலக்கியம் தனித்துவம் வாய்ந்தது. இலக்கியம் என்பதைத் தாண்டி மானுடவியல் துறையிலும் இந்தக் கரிசல் வாழ்க்கை குறித்த பதிவு முக்கியமானது; ஆய்வுக்குரியது. இன்றைய காலகட்டத்தில் கரிசல் வாழ்க்கை ஆராயப்பட வேண்டிய முக்கியத்துவம் மிக்கது.
2021-ம் ஆண்டு மே 17-ம் தேதி மறைந்த கி.ரா.வின் உடல் அவரது சொந்த ஊரான இடைசெவலில் உள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கி.ரா.வுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 45 சென்ட் இடத்தில் ரூ.150.75 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் நினைவரங்கம், சிலை, நூலகம் ஆகியவை கட்டும் பணி நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இத்துடன் கி.ராவின் நினைவாக கரிசல் ஆய்வு மையத்தையும் அரசு தொடங்கினால் அது தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்துக்குச் செய்யக்கூடிய மிகப் பெரிய சேவையாக இருக்கும் என எழுத்தாளர் உதயசங்கர் தெரிவிக்கிறார்.
கோவில்பட்டி பகுதியில் மட்டும் எழுத்தாளர்கள் இவ்வளவு பேர் உருவாகக் காரணம், இங்கு செயல்பட்ட விவசாயிகளின், தொழிலாளர்களின் இயக்கம் எனலாம். மற்ற பகுதிகளெல்லாம் கொஞ்சம் பின்தங்கியிருந்த காலத்திலேயே, இங்கே நவீனத்துவம் சீக்கிரமாகவே வந்துவிட்டது. இந்த நவீனத்துவம் தான் உலகெங்கும் இருக்கும் தத்துவப் போக்குகளை அறிமுகப்படுத்தியது. அதன் வழியாக எழுத்தாளர்கள் பலர் உருவானார்கள். இது ஆய்வு செய்யப்பட வேண்டிய பொருளே.
கரிசல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் அதன் வழியாகப் புதிய ஆய்வாளர்களை உருவாக்க முடியும். ஆய்வு மாணவர்களுக்கு அது உதவியாக இருக்கும். புதிய எழுத்தாளர்களுக்கான சிந்தனைக் கிடங்காக அந்த ஆய்வு மையத்தை திகழவைக்க வேண்டும். ஒரு சமூகம் வட்டார மொழியை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்க்கையை, பண்பாட்டை இழக்கின்றனர். எனவே, கரிசல் வட்டார ஆய்வு மையம் மிகவும் அவசியம்.