நவம்பர் 12: பொதுச் சேவை ஒலிபரப்பு நாள் | அகில இந்திய வானொலியும் காந்தியும்!

நவம்பர் 12: பொதுச் சேவை ஒலிபரப்பு நாள் | அகில இந்திய வானொலியும் காந்தியும்!
Updated on
2 min read

நவம்பர் 12, 1947. மதியம் 3 மணிக்கு காந்தி டெல்லி வானொலி நிலையத்துக்குச் சென்றார். அது ஒரு தீபாவளி நாள். “இது ஒரு அதிசயமான ஆற்றல். இதில் நான் சக்தியைக் காண்கிறேன்...” என்று அப்போது வானொலியைப் பற்றி காந்தி வியந்துரைத்த சொற்கள் பின்னாளில் புகழ்பெற்றன. 1936இல் டெல்லியில் தொடங்கி, செயல்பட்டுவந்த வானொலி நிலையத்துக்குள் காந்தி, தன் வாழ்நாளில் அடியெடுத்து வைத்தது அந்த ஒரே ஒருமுறைதான்.

முதலும் கடைசியுமாக நிகழ்ந்த இதுவும் காந்தி விரும்பித் திட்டமிட்ட விஜயம் அல்ல. நாட்டுப் பிரிவினையின் விளைவாகப் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி டெல்லிக்கு அருகில் உள்ள குருச்சேத்திரம் முகாமில் தங்கியிருந்த அகதிகளைப் பார்த்து ஆறுதல் கூறிப் பேச விரும்பினார். திட்டப்படிச் செல்ல இயலாதுபோனதால் மாற்று ஏற்பாடாக வானொலி வழியாகப் பேச ஒப்புக்கொண்டார். பொதுச் சேவையின் நிமித்தம் காந்தியின் எதிர்பாராத நிலைய வருகை நிகழ்ந்த நவம்பர் 12ஐ அகில இந்திய வானொலி, ‘பொதுச் சேவை ஒலிபரப்பு நாள்’ (Public Service Broadcast Day) என்று பிரகடனப்படுத்தியது. பொதுச் சேவையை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் 2000ஆம் ஆண்டில் காலப் பொருத்தம் வாய்ந்த அந்த அறிவிப்பு செய்யப்பட்டது. 2001 முதல் அந்த நாளில் ‘காந்தியத் தத்துவம், பொதுச் சேவை ஒலிபரப்பு’ சார்ந்த சிறந்த ஒலிபரப்புக்கு ஒரு விருதையும் அறிவித்து ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

நிலையத்துக்கு வந்து நிகழ்த்தியது என்ற வகையில் 1947 நவம்பர் 12 ஒலிபரப்புக்கு ஒரு சிறப்பு இருப்பினும், அதற்கு முன் காந்தியின் பேச்சு வானொலியில் ஒலிபரப்பாகாமல் இல்லை. டெல்லியில் 1947 ஏப்ரலில் ஆசிய உறவுகள் மாநாட்டில் காந்தி ஆற்றிய உரை ஒலிபரப்பாகியுள்ளது. அநேகமாக அதுவே காந்தியின் முதல் வானொலி உரை. 1947 மே மாதம் காந்தியின் மேற்கு வங்காளப் பிரார்த்தனைக் கூட்ட உரைகளையும் கல்கத்தா வானொலி நிலையம் ஒலிப்பதிவு செய்தது. சோதேபூர் ஆசிரமத்தின் பிரார்த்தனை உரைகள் ஒலிபரப்பான விவரம் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள நூலில் குறிப்பிடப்பட்டும் உள்ளது. அதேபோல 1947 செப்டம்பர் முதல் டெல்லியில் பிர்லா மாளிகையில் காந்தி நிகழ்த்திய பிரார்த்தனைக் கூட்டங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. இதை வானொலியின் வரலாற்றை எழுதிய எச்.ஆர்.லூத்ரா பதிவுசெய்துள்ளார். விடுதலைக்குப் பிறகான வானொலிக்கும் தேசத் தந்தைக்குமான உறவு என்பது ஒரு புதிய தேசம் தனக்கான வழிகாட்டும் சக்தியை உருவாக்கிக்கொள்ளும் முயற்சி எனலாம். அந்த எண்ணத்துடன் காந்தியைச் சகல மரியாதைகளுடன் தக்கவைக்கவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதே திருவுருவுடன் அவரைக் கடத்துவதுமான செயல்கள் நடந்தன, இன்று வரையிலும் நடந்துவருகின்றன. நாளை நடப்பதை யார் அறிவார்?

கடவுளின் அதிசய ஆற்றல் என்று வானொலியைப் பற்றி காந்திக்கு உயர்வான கருத்து இருந்தது; எனினும் விடுதலைக்கு முந்தைய காலத்தில் வானொலியை அவர் பயன்படுத்திக்கொண்டதாகத் தெரியவில்லை. காங்கிரஸைச் சேர்ந்த இளம்பெண் உஷா மேத்தா காங்கிரஸுக்கென ஒரு தலைமறைவு ரேடியோவை நடத்தினார். ‘ஆசாத் ரேடியோ’ என்று அழைக்கப்பட்ட அது, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது மூன்று மாத காலம் மட்டும் மும்பையில் செயல்பட்டது. ராம் மனோகர் லோகியா அந்த வானொலியுடன் தொடர்பிலிருந்தார். காந்தி இந்தத் தலைமறைவு ரேடியோவில் பேசியிருக்க வாய்ப்பில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய விடுதலைக்கு முந்தைய அகில இந்திய வானொலியிலும் காந்தி பேச மறுத்துவிட்டார்.

இந்திய அரசின் வானொலியை நடத்த பிபிசியிலிருந்து உற்சாகமாக வந்த அதிகாரி லயனல் ஃபீல்டன், அரச கட்டளைகளையும் மீறி காந்தியைப் பேசவைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், காந்தி கடைசி வரை பிடிகொடுக்கவே இல்லை. ‘என் அன்புள்ள ஃபீல்டன். நான் ரேடியோவில் பேசினால் ஒரே இரவில் நான்கிலிருந்து ஐந்து லட்சம் நேயர்கள் உங்களுக்கு அதிகரிப்பார்கள் என்று எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும். நீங்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பீர்கள் என்று தெரிந்தால் நான் அதைச் செய்வேன். அப்படியில்லாதபோது, என் எதிரிகளின் எண்ணிக்கையை வெறுமனே அதிகரித்துக்கொள்வதாகிவிடும்’ என்று எழுதி உறுதியாக மறுத்துவிட்டார் காந்தி (பக்கம் 196, தி நேச்சுரல் பென்ட், லயனல் ஃபீல்டன், 1960). லயனல் ஃபீல்டனும் காந்தியின் பேச்சை ஒலிப்பதிவு செய்யாமலேயே லண்டன் திரும்பிவிட்டார். அற்புதமான சக்தியே ஆனாலும் எதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என அரசியல்வாதி காந்திக்குத் தெரிந்திருந்தது என்பது வானொலியை அவர் நடத்திய விதத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. - பழ.அதியமான் உதவி இயக்குநர் (ஓய்வு), அகில இந்திய வானொலி - சென்னை, தொடர்புக்கு: athiy61@yahoo.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in