

மகாத்மா காந்தி தனது வாழ்நாளில், அகில இந்திய வானொலி நிலையத்துக்கு ஒரே ஒருமுறைதான் சென்றுள்ளார். வெவ்வேறு இடங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது உரைகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில், அகில இந்திய வானொலி ஒலிபரப்பினாலும், நேரடியாக அவர் வானொலி நிலையத்துக்கு வந்தது ஒருமுறைதான்; அதுவும் மக்களுக்காக. வானொலி எனும் ஊடகத்தை அற்புதமான சக்தியாக காந்தி பார்த்தார். “துன்பத்தில் இருக்கும் என் சகோதர, சகோதரிகளே! நீங்கள் மட்டும் கேட்கிறீர்களா அல்லது வேறு சிலரும் இந்த வானொலி ஒலிபரப்பினைக் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை…” என 1947 நவம்பர் 12 அன்று டெல்லி வானொலி நிலையத்திலிருந்து அவர் ஆற்றிய உரையின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 அன்று ‘பொதுச் சேவை ஒலிபரப்பு நா’ளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்றும் இன்றும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் முதல் ஊடகமாக வானொலியே இருக்கிறது. ஈழப் போரின்போது தமிழ் மக்களுக்குக் களநிலவரங்களை எடுத்துச்சொன்னது வானொலியே; பிலிப்பைன்சிலின் வேரித்தாஸ் வானொலி, பிபிசி தமிழோசை ஆகியவற்றை மறக்க முடியாது. இன்று, உக்ரைன் போரில் நவீனத் தகவல்தொடர்புச் சாதனங்கள் முடங்கிவிட்ட நிலையில், மக்களைச் சென்றடையும் ஒரே ஊடகமாக வானொலி, தொலைதூர நாடுகளுக்கு ஒலிபரப்ப வழிசெய்யும் சிற்றலை (Short Wave) மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் சிற்றலை ஒலிபரப்பில் இருந்து டிஜிட்டல், பண்பலை ஒலிபரப்புக்கு மாறிவிட்டன.
ஆனால், எல்லை தாண்டிப் பயணிக்கும் ஆற்றல் சிற்றலைக்கு மட்டுமே உண்டு. 500 கிலோ வாட் சக்தி கொண்ட ஒலிபரப்பி ஒன்று, 10,000 கி.மீ. தாண்டியும் பயணிக்கும். இதனால் இங்கிலாந்து, ரஷ்யா, உக்ரைன் நாடுகள் மீண்டும் சிற்றலை ஒலிபரப்பிகளை நிறுவி, அதன் மூலம் மக்களுக்குக் களநிலவரத்தைச் சொல்லிவருகின்றன. போர், இயற்கைப் பேரிடர் காலங்களில் சிற்றலையின் தேவை முக்கியமானது. பண்பலையோ News On Air போன்ற கைபேசிச் செயலிகளோ இதுபோன்ற பேரிடர் காலங்களில் கைகொடுக்காது. முக்கியமான தகவல்கள் இந்திய மக்கள் அனைவரையும் சென்றடைய ‘சிற்றலை’ ஒலிபரப்பு மிக அவசியம். இதைத் தகவல் - ஒலிபரப்பு அமைச்சகம் முழுமையாக உணர்ந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தியாவில் பெரும்பான்மையான சிற்றலை ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. தமிழகத்துக்கென சென்னையிலிருந்த ஒரே ஒரு சிற்றலை ஒலிபரப்பும் கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. பேரிடர் ஏற்பட்டால், தமிழக மக்கள் அனைவரையும் ஒருசேரச் சென்று சேர்வதற்கான ஒரு ஊடகம் இல்லை என்பதே நிதர்சன உண்மை. - தங்க.ஜெய்சக்திவேல் இதழியல் - தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: jaisakthivel@unom.ac.in