Last Updated : 29 Nov, 2016 10:03 AM

 

Published : 29 Nov 2016 10:03 AM
Last Updated : 29 Nov 2016 10:03 AM

எலியனின் நண்பர் ஃபிடல் இறந்து விட்டார்

லியன் கொன்ஸாலீஸ் தனது நண்பரை இழந்துவிட்டான். "கியூபா ஒரு நரகம். யாரால் இங்கே இருக்க முடியும்? நாம் அமெரிக்காவுக்குப் போய்விடுவோம்" என்று ஆண் நண்பரோடும் ஆறு வயது மகன் எலியனோடும் கள்ளத் தோணியில் ஏறினார் விவாகரத்தான எலிசபெத். அந்த அலுமினியப் படகின் ஓட்டை இன்ஜினால் 10 பேரைத் தாங்க முடியவில்லை. நடுக் கடலில் கவிழ்ந்த அதன் மேல் உட்கார்ந்துகொண்டு எலியன் தப்பினான். கடற்படையினர் மீட்டு அமெரிக்காவில் வசித்த தாத்தா - பாட்டியிடம் அவனைச் சேர்த்தனர். 16 வருடங்களுக்கு முன் நடந்தது இது. அமெரிக்க - கியூப உறவுகளின் கவுரவப் பிரச்சினையாகவும் மாறியது இது.

ஒற்றைச் சிறுவனுக்காக ஒட்டுமொத்த கியூபாவும் எழுந்து நின்று இரு கைவிரித்து அழைத்தது. அவனது அப்பா ஜூவான் மிகுவல் கியூபாவில் ஒரு உணவக ஊழியர். அப்பா சம்மதித்தால் எலியன் அமெரிக்கக் குடிமகனாக முடியும். அமெரிக்க நீதிமன்றங்கள் தலையிட்டன. வழக்கு பல படிகளில் ஏறியது. எலியன் அப்பா அமெரிக்கா போனார். "என் மகன் எனக்குப் போதும்.. அமெரிக்கா வேண்டாம்" என்றார். அமெரிக்காவில் செட்டில் ஆவதே மோட்சம் என்போருக்குப் புரியாத மொழி அது.

அழுகிறான் எலியன்

நாடு திரும்பிய எலியன், ஃபிடலின் நண்பர் ஆனான். அவனது எல்லா பிறந்த நாட்களிலும் அவனைத் தேடி வந்தார் அவர். வருகிற டிசம்பர் 6-ம் தேதி அவனுக்குப் பிறந்தநாள். அவர் வர மாட்டார். 23 வயது எலியன் தொலைக்காட்சியில் அழுகிறான். "அவர் எனது அப்பா போன்றவர்".

இது அரசியல் மாண்டிசோரி நிலை. ஒவ்வொரு மாணவர் மீதும் கவனம் செலுத்திய அந்த ஆசிரியை போல, ஃபிடல் கியூபர்கள் மீது கவனம் செலுத்தினார். அதுதான் அமெரிக்காவை எதிர்க்கும் தன்னம்பிக்கையை அவருக்குத் தந்தது.

கல்வியும் மருத்துவமும்

அமெரிக்காவிலிருந்து கூப்பிடு தூரம்தான் கியூபா. 150 கி.மீ தூரம். அமெரிக்கக் கண்டத்தின் முதல் கம்யூனிஸ்ட் விதை அங்கே விழுந்தது.. துளிர்த்தது. முளையிலேயே அதைக் கருக்கிவிட நினைத்தது அமெரிக்கா.

உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபா. கரும்பு மட்டுமே விளையும் பூமி. முதலில் அது முழுமையாக சோவியத் யூனியனை அண்டி யிருந்தது. அந்த ஒரே உயிராதாரம் 1990-களில் தகர்ந்தது. மரணத்தின் வாசல்வரை சென்று திரும்பியது கியூபா. அந்தக் காலகட்டத்தில் கியூபர்கள் உடல் மெலிந்தார்கள். தமிழகத்தி லிருந்தும் நாம் அரிசி அனுப்பினோம்.

உயிரியல் தொழில்நுட்பம், சுற்றுலா, மருத்துவம் என தகவமைத்துக்கொண்டார்கள் கியூபர்கள். கியூபாவில் 170 வீடுகளுக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். உலகிலேயே இத்தாலிக்கு அடுத்தபடியாக கியூபாவில்தான் அதிக மருத்துவர்கள் இருக்கிறார்கள். 2014-ல் ஆப்பிரிக்காவில் 500 மருத்துவர்கள் உட்பட 1,500 பேர் எபோலோ நோய்க்கு எதிரான மருத்துவ சேவைகளில் ஈடுபட்டனர்.

அவர்களின் மருத்துவச் சாதனைகள் அரசின் இலவசக் கல்வி முறையிலிருந்து விளைந் தவை. வயது வந்த கியூபர்கள் அனைவரும் படித்தவர்கள் என்கிறது யுனிசெப். எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட அம்மாவிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவாமல் தடுத்த உலக சாதனையைக் கடந்த ஆண்டில் கியூபா சாதித்துள்ளது. உலகில் எச்.ஐ.வி. தொற்று உள்ள பெண்களில் ஒவ்வொரு ஆண்டும் 14 லட்சம் பேர் கர்ப்பமடைகின்றனர். இப்போது புரியுமே அந்தச் சாதனையின் முக்கியத்துவம்! கியூபாவைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது உலக நலவாழ்வு நிறுவனம்.

ஃபிடலின் காதல்

கியூபாவை விட அமெரிக்கா 20 மடங்கு அதிகமாக ஒரு தனிநபருக்கு மருத்துவச் செலவு செய்கிறது (8,553 டாலர்கள்). ஆனால், கியூபாவில் பிரசவகால மரணங்கள் அமெரிக்கா வைவிடக் குறைவு என்கிறது உலக வங்கி. கியூபாவில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 81 வயது. ஆண்களுக்கு 77. உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 11.1% மருத்துவத்துக்கு ஒதுக்குகிறது கியூபா.

நுரையீரல் புற்றுநோய்க்கு 'சிமாவாக்ஸ்' (Cimavax) எனும் தடுப்பூசி கியூபாவில் உண்டு. அது வாழ்நாளை அதிகப்படுத்துகிறது. கியூபாவின் மருத்துவச் சாதனைகள் பல நாடுகளிலிருந்து நோயாளிகளை 'மருத்துவச் சுற்றுலா'வுக்கு வரவழைக்கின்றன.

கட்டாந்தரையில் புல் முளைக்க வைப்பது போன்ற சாகசங்கள் காதலால் மட்டுமே சாத்தியம். மனித சமூகத்தின் மீதான ஃபிடலின் காதல்தான் அவரது கம்யூனிஸ உணர்வாக வெளிப்பட்டது.

தடைகளை மீறிய வளர்ச்சி

"ஃபிடலை அவரது தம்பி ராவுல் காஸ்ட்ரோ, நண்பர் சே குவேரா, அமெரிக்க நாடு ஆகிய மூன்று பேர் கம்யூனிஸ்ட் ஆக்கினார்கள்" என்கிறார் அவரது வரலாற்றை எழுதிய எழுத்தாளர் ஸ்கியர்கா. "சோஷலிஸம் அல்லது மரணம்" என்றார் ஃபிடல். "சோஷலிஸம் தோற்று விட்டதா சரி, எங்கெல்லாம் முதலாளித்துவம் வெற்றிபெற்றது?" எதிரிகளைக் கிண்டல் செய்தார் அவர். "அமெரிக்க அதிபர் ரீகன் உங்களைச் சர்வாதிகாரி என்கிறாரே" என்றார் பிளேபாய் இதழின் நிருபர். "அவசரச் சட்டம் இயற்றி, அதன் மூலம் ஆட்சி செய்பவர்கள் சர்வாதிகாரி என்றால் போப் ஆண்டவரும் சர்வாதிகாரிதான்" என்று விளையாடினார் அவர். "அணு ஆயுதப் போருக்கு உத்தரவிடக்கூடிய கொடூரமான அதிகாரங்களைப் படைத்த அமெரிக்க அதிபரா, அல்லது நானா யார் பெரிய சர்வாதிகாரி?" என்று கேட்டார் அவர்.

கியூபாவுக்குள் ஒரு குண்டூசி நுழையவும் கூடாது. வெளியே வரவும் கூடாது என்று 50 ஆண்டுகளாக அமெரிக்கா தடுத்து வைத் துள்ளது. கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை இன்று 191 நாடுகள் எதிர்க்கின்றன. அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டும்தான் தடைகளை ஆதரிக்கின்றன. தடைகளை மீறி கியூபா வளரவே செய்துள்ளது. ஆனாலும், அது பணக்கார நாடு இல்லை. ரேஷன் கடைகள் இருக்கின்றன. பால் உள்ளிட்ட அவசியப் பொருட்கள் அதில் கிடைக்கின்றன. அவர்களது அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகவில்லைதான். ஆனால், மனித வளம் உள்ளிட்ட தனது நாட்டு வளங்களைப் புதுமை படைக்கும் மனதோடு பயன்படுத்தும் இளைய தலைமுறை அங்கே உருவாகியுள்ளது.

ஆயுதப் போராளியாக இருந்த காலத்தில், திருமண உறவுக்கு வெளியே ஃபிடலுக்கு பிறந்த மகள் அலினா பெர்னாண்டஸ். அமெரிக்கா விலிருந்து கொண்டு அப்பாவை சர்வாதிகாரி என்று விமர்சிப்பது உண்மைதான். ஆனாலும், தொலைக்காட்சியில் அழும் எலியன் போன்ற இளைஞர்கள் ஃபிடலின் கனவைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வரை ஃபிடலின் ஆவி கியூபாவை விட்டுப் போகாது!

- த.நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x