சொல்… பொருள்… தெளிவு | டிஜிட்டல் ரூபாய்
டிஜிட்டல் ரூபாய் (e₹) என்றால் என்ன?: நவம்பர் 1அன்று இந்திய ரிசர்வ் வங்கி மொத்த விற்பனைத் துறைக்கான இந்தியாவின் முதல் டிஜிட்டல் ரூபாய் முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் ரூபாய் (e₹), சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) என்றும் அழைக்கப்படுகிறது. அடிப்படையில், டிஜிட்டல் ரூபாய் என்பது பணம் செலுத்தும் ஒரு முறை. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய இது காகித வடிவத்தில் அல்லாமல், மின்னணு வடிவத்தில் இருக்கும். அதாவது, இது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் ரூபாய் நோட்டுகளின் டிஜிட்டல் வடிவம். இது மற்ற டிஜிட்டல் கரன்சிகளின் அனைத்துப் பரிவர்த்தனை வசதிகளையும் கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் ரூபாய், எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும் திறன் மிகுந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய், தற்போது பயன்பாட்டில் உள்ள நிதிப் பரிவர்த்தனை வடிவங்களை முழுமையாக்குமே தவிர, அவற்றை முற்றிலும் பயனற்றதாக மாற்றாது. அதாவது, டிஜிட்டல் ரூபாய் பொது நாணயப் பயன்பாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மொத்தம் - சில்லறைப் பரிவர்த்தனைகள் என டிஜிட்டல் ரூபாயின் அறிமுகம் இரண்டு கட்டங்களைக் கொண்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மொத்தப் பரிவர்த்தனைகளுக்கான முன்னோடித் திட்டம்.
டிஜிட்டல் ரூபாயும் கிரிப்டோ நாணயமும்: ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாயும் கிரிப்டோ நாணயமும் (Cryptocurrency) ஒன்றல்ல. கிரிப்டோகரன்சிகளைப் போல, டிஜிட்டல் ரூபாய் என்பது ஒரு உடைமையோ, பண்டமோ, மெய்நிகர் சொத்தோ கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், டிஜிட்டல் நாணயம் என்பது பணம்; டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி காகித வடிவில் வெளியிடும் ரூபாய் நோட்டுகளுக்குச் சமமான பணமாக மாற்ற முடியும். முக்கியமாக, இது ரூபாய் நோட்டுகள்/நாணயங்களின் அதே செயல்பாட்டைக் கொண்டிருக்கும். கிரிப்டோகரன்சியை அப்படிக் கருத முடியாது. டிஜிட்டல் ரூபாயும் கிரிப்டோகரன்சியும் இணையப் பரிவர்த்தனை முறைகளை உள்ளடக்கியிருந்தாலும், இரண்டுக்கும் வேறுபாடு உண்டு: டிஜிட்டல் ரூபாய் என்பது ஒரு நாட்டுப் பொருளாதாரத்தின் டிஜிட்டல் வடிவத்தைக் குறிக்கிறது; கிரிப்டோகரன்சி என்பது தனித்துவமான அல்காரிதத்துடன் பண மதிப்பின் மாற்று வடிவமாக உள்ளது. டிஜிட்டல் ரூபாய் ஒரு நாட்டின் அரசாங்கத்தால் வழங்கப்படும் டிஜிட்டல் பணம் (Fiat) என்றால், கிரிப்டோகரன்சி என்பது உலக அளவில் பரவலாக்கப்பட்ட வலைப்பின்னல் கொண்ட டிஜிட்டல் சொத்து.
டிஜிட்டல் ரூபாயின் மதிப்பு முற்றிலும் ரிசர்வ் வங்கியாலும், அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் கிரிப்டோகரன்சியின் மதிப்போ, ரிசர்வ் வங்கியின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாக உள்ளது. இதில் கிரிப்டோகரன்சியை வாங்குவதில் தொடங்கி, அதன் மதிப்பை ஈட்டி, பிறருக்கும் மாற்றுவது வரையிலான நடைமுறை மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். கிரிப்டோகரன்சிகளைப் போல இந்த டிஜிட்டல் ரூபாய் உலகளாவிய வலைப்பின்னலாகப் பரவலாக்கப்படாது. இதன் பரவல் இந்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.
அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம்: கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு மேலும்மேலும் பிரபலமடைந்துவரும் சூழலில், மெய்நிகர் நாணயங்களுக்கான போட்டியில் இந்தியாவை முன்னோக்கித் தள்ளுவதே டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்துவதன் முதன்மையான நோக்கம். டிஜிட்டல் ரூபாய் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால், அதன் செயல்திறன் அதிகரிக்கும், பரிவர்த்தனையின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும். முக்கியமாக, அது லெட்ஜர் பராமரிப்பையும் நிகழ்நேரக் கண்காணிப்பையும் சாத்தியப்படுத்தும். டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்துவது, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை விரைவுபடுத்துவதோடு, காலப்போக்கில் வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான தேவையையும் நீக்கும்.
வணிகத்தில் டிஜிட்டல் ரூபாயின் தாக்கம்: மொத்த விற்பனைத் துறைக்கான டிஜிட்டல் ரூபாய், வணிகப் பரிவர்த்தனைகளுக்கான தீர்வு முறைகளை மாற்றியமைத்திருக்கிறது. பயனர்களுக்கு அது சாத்தியப்படுத்தும் கூடுதல் ஆற்றல், நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும். நாட்டுக்கு அதிக நிதி உள்ளடக்கத்தை அது கொண்டுவரும். இந்த மாதத்திலேயே ரிசர்வ் வங்கி சில்லறை விற்பனைத் துறைக்கும் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்த உள்ளது.
பங்கேற்கும் வங்கிகள்: டிஜிட்டல் ரூபாயின் மொத்த விற்பனை முன்னோடித் திட்டத்தில் பங்கேற்பதற்காகப் பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்எஸ்பிசி ஆகிய ஒன்பது வங்கிகளை ரிசர்வ் வங்கி தேர்வுசெய்துள்ளது.
டிஜிட்டல் ரூபாயின் மீது வரிவிதிக்கப்படுமா?: பிட்காயின், எத்தேரியம், லைட்காயின் உள்ளிட்ட அனைத்து கிரிப்டோகரன்சிகளும் 30% வரிவிதிப்புக்கு உட்பட்டவை. ஆனால், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்க்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
உலக அளவில் டிஜிட்டல் ரூபாய்: பஹாமஸ், நைஜீரியா, டொமினிகா, மான்செராட், ஆண்டிகுவா & பார்படாஸ், செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், செயின்ட் வின்சென்ட் & கிரெனடா ஆகிய நாடுகள் ஏற்கெனவே டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தியுள்ளன. டிஜிட்டல் ரூபிளின் ஆரம்ப சோதனைகளை ரஷ்யா நிறைவு செய்துள்ளது. eCNY அல்லது டிஜிட்டல் யுவானை 2022-க்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. தொகுப்பு: முகமது ஹுசைன்
