

எழுத்தாளர் விழி பா.இதயவேந்தன் (60) நவம்பர் 7 அன்று காலமானார். தமிழ் நவீன இலக்கியத்தில் 1990-களுக்குப் பிறகு ஏற்பட்ட மறுமலர்ச்சி எழுத்துகளில் ஒன்று அவருடையது. நடுத்தர வர்க்கத்தின் பிரதிபலிப்பாக இருந்துவந்த இந்திய / தமிழ் நவீன இலக்கியம் புதிய கருப்பொருளைக் கண்டடைந்த தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இதயவேந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நந்தனார் தெரு’ வெளியாகிக் கவனம்பெற்றது.
பேராசிரியர் பிரபா கல்விமணி (கல்யாணி) வழியாக மார்க்சிய, இலக்கிய அறிமுகம் பெற்ற இதயவேந்தன், கல்யாணியின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட மக்கள் கலை இலக்கிய அமைப்பான ‘நெம்புகோல்’ அமைப்பின் செயல்பாட்டாளராக இருந்தார். இலக்கியம், அரசியல் எனக் கருத்தாழமிக்க ‘நெம்புகோல்’ விவாதங்கள், இதயவேந்தன் என்ற ஆளுமையை உருவாக்கின. ‘நெம்புகோல்’ கையெழுத்துப் பத்திரிகையில் கவிதைகள் எழுதி இலக்கியத்துக்குள் நுழைந்தார். எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் கதைகளை வாசித்த உத்வேகத்தில் கதைகளும் எழுதத் தொடங்கினார். இதயவேந்தனின் முதல் கதை ‘சங்கடம்’ ‘கணையாழி’யில் 1984இல் வெளிவந்தது. ‘மனஓசை’, ‘தோழமை’ ஆகிய இடதுசாரி இயக்க இதழ்களில் இணைந்து இயங்கிய அனுபவம் இவருக்கு உண்டு.
இதயவேந்தனின் கதைகள் வர்க்க, சாதிய நிலையில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டவை. அந்த மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாகச் சித்தரிப்பது அவரது கதைகளின் விசேஷமான பண்பு. ‘கறியும் சோறும்’ கதையில் வர்க்க, சாதி நிலைகளில் பின்தங்கிய ஒரு குடும்பத்தின் அன்றாடத்தைச் சொல்லியிருப்பார். அவரது புகழ்பெற்ற கதைகளில் ஒன்றான ‘பள்ளத்தெரு’வில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையைச் சொல்லியிருப்பார். பொதுச் சமூகம் அவர்களை நடத்தும் விதத்தையும் அதை எதிர்கொள்ளும் ‘பள்ளத்தெரு’ மக்களின் இரு தலைமுறைகளின் இயல்பையும் காட்சிப்படுத்தியிருப்பார். சட்டமும் அமைப்பும் அதிகார, ஆதிக்க வர்க்கத்துக்கு ஆதரவாக இருப்பதையும் இந்தக் கதையில் திருத்தமாகக் கூறியிருப்பார். ஒற்றுமையை வலியுறுத்தி இந்தக் கதை நிறைவடையும்.
இதயவேந்தனின் கவிதைகளும் கதைகளைப் போல் ஆர்ப்பாட்டமில்லாத மொழியில் அமைந்தவை. அனுபவத்தில் வேர்விட்டவை. ‘மூச்சு முட்டமுட்ட உன் குரல்கள் நெரிக்கப்பட்டிருந்தன/கதறக் கதற/நீ கற்பழிக்கப்பட்டிருக்கிறாய்/அடையாளம் தெரியாதவாறு/உன் எலும்புகள்/நொறுக்கப்பட்டிருக்கிறது/செல்லும் இடங்களிலெல்லாம் உன்னைப் பற்றிய/செய்திகள்கூட எரிக்கப்பட்டிருக்கிறது’ என்ற உரத்த கவிதை இதயவேந்தனின் உணர்வெழுச்சியும், ‘சேற்றிலும் துர்நாற்றத்திலும் ஊறிப்போன/அம்மா நெட்டி முறித்து/அழகு பார்ப்பாள் என்னை/திரும்பத் திரும்ப’ என்ற கவிதையில் வெளிப்படும் இதயவேந்தனின் வேதனையும் இருவேறு நிலைகளில் இயல்பானவை. அவரே சொல்வதுபோல் இந்த வேதனைகளை, உணர்வுகளை இலக்கியத்தின்வழி எதிர்கொண்டவர் இதயவேந்தன். அந்த வகையில் அவரது பங்கு தமிழ் இலக்கியத்தில் கவனம்கொள்ளத்தக்கது. - jeyakumar.r@hindutamil.co.in