Published : 08 Nov 2022 06:51 AM
Last Updated : 08 Nov 2022 06:51 AM

சிலருக்கு மட்டும் ஏன் தீவிரவாத சிந்தனை?

புதுமடம் ஜாபர் அலி

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகான மிகப் பெரிய அரசியல் படுகொலைகள் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் படுகொலைகளாகும். இந்தத் தலைவர்களைக் கொன்ற கொலையாளிகளின் சமூகம்-மதம் சார்ந்து எந்த வெறுப்புணர்வும் காட்டப்படவில்லை. காந்தியைக் கொன்ற கொலையாளி கோட்ஸே பின்பற்றிய சித்தாந்தத்தையே இந்தியா எதிர்த்தது. மாறாக, கோட்ஸேசார்ந்திருந்த சமூகத்தின்மீது யாரும் வெறுப்புக்கொள்ளவில்லை; இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும் ராஜிவ் கொலையுண்டபோது தமிழர்கள்மீது வடஇந்தியர்களுக்கு எழுந்த வெறுப்பும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

சுதந்திரத்துக்குப் பின் முஸ்லிம்களின் கோரிக்கை, வளர்ச்சி, சமூக முன்னேற்றம் குறித்து முஸ்லிம் லீக் தவிர வேறெந்த அமைப்பும் கவலை கொண்டிருக்கவில்லை; காங்கிரஸின் மிகப் பெரிய ஓட்டு வங்கியாக மட்டுமே முஸ்லிம்கள் இருந்தனர். 1992இல் பாபர் மசூதி இடிப்பைத் தவிர்க்க காங்கிரஸ் தவறிவிட்டது. இந்தப் புள்ளியில் இருந்துதான் முஸ்லிம்கள் மத்தியில் மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டது. நாடு தழுவிய அரசியலாக இதைக் கையாளத் தவறியது. பாபர் மசூதி இடிப்புக்குப் போதுமான எதிர்வினை இல்லை என்கிற குற்றச்சாட்டில் முஸ்லிம் லீக் மீதான நம்பிக்கை குறைந்துபோயிற்று. இதையடுத்து, இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் தோன்றின. முஸ்லிம் சமூகம் அதுவரை மதிப்புமிக்கதாகவே இந்தியச் சமூகத்தில் கருதப்பட்டுவந்தது.

மும்பையும் கோவையும்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் இந்தியாவில் அரங்கேறத் தொடங்கின; அவை தமிழகத்திலும் எதிரொலித்தன. கோவையில் தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது, 1997 டிசம்பர் கலவரத்துக்குக் காரணமானது. இதில் 19-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நியாயம் கேட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட, ஒரு குழு பிப்ரவரி 14ல் தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அதன் ரணங்கள் இன்னும் ஆறவில்லை. கோவை முஸ்லிம்களின் பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது. தமிழக முஸ்லிம்கள் காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்; அப்பாவிகளும் சேர்ந்து சிறைவாசிகள் ஆகும் நிலை ஏற்பட்டது.

தற்போது அக்டோபர் 23 அதிகாலை கோவையில் கார் வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. கோவையில் நிம்மதி மீண்டும் கெடும் நிலை இந்த செயலால் ஏற்பட்டுள்ளது. இதில் சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தப் பகுதி ஜமாத்துடனும் தொடர்பில் இல்லாதவர்கள். கார் வெடிப்பில் ஈடுபட்டு இறந்துபோன ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்யக்கூட ஜமாத் முன்வரவில்லை. காவல் துறையின் தலையீட்டுக்குப் பிறகே ஜமாத்தார் தங்கள் அடக்க ஸ்தலத்தில் இடம்கொடுத்தனர். ஒரு உடலை அடக்கம்செய்யத் தேவையான ஆட்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் சமூகத்துக்காகப் பாடுபடுவதாகச் சொல்லி, அரங்கேற்ற முயன்ற ஒரு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து, முஸ்லிம் சமூகம் இக்காரியத்தில் ஈடுபட்டவர்களை முழுமையாக வெறுக்கிறது. முஸ்லிம்களுக்கு இன்று மிகப்பெரிய சவாலாக இருப்பவை சமூக வலைதளங்கள். சமூகத்தை மேம்படுத்துவதாகச் சொல்லி இளைஞர்களால் வெளிப்படுத்தப்படும் புரட்சிகரமான பேச்சுகளும் கருத்துகளும் அந்தச் சமூகத்துக்கு எதிராகவே செல்கின்றன. இருந்தபோதும் சமூக வலைதளங்களில் பயணிக்கும் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இளைஞர்களின் திசை மாற்றம்: ஜனநாயக முறையில் இயங்கும் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை என அதிருப்தியடையும் முஸ்லிம் இளைஞர்கள் சிலர், சர்வதேசத் தீவிரவாதக் குழுக்கள் பற்றி இணையதளங்களில் தேட முற்படுகின்றனர். உலகில் எங்கோ ஒரு மூலையில் இயங்கும் சில தீவிரவாதக் குழுக்களுடனான இணையதளத் தொடர்பில் அவற்றின் தவறான கோட்பாடுகள், வழிகாட்டுதலால் உந்தப்பட்டு, தவறான நடவடிக்கைகளில் முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபடுகிறார்களோ என்கிற சந்தேகம் முஸ்லிம் தலைவர்கள், ஜமாத்தார் மத்தியில் எழுந்துள்ளது. அரசின் விசாரணையும் இந்தக் கோணத்தில் செல்வது கவனத்துக்குரியது. இது போன்ற தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மக்கள் விரோதக் கும்பல்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோவை முஸ்லிம் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி உள்ளது. முஸ்லிம்களின் கல்வியைத் தொலைநோக்குடன் திட்டமிட்டுச் செயல்படுத்துவது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு, போட்டித் தேர்வுக்கான பயிற்சி போன்றவற்றில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் மதச் சொற்பொழிவாளர்கள், இந்தியாவின் மீதான எதிர்மறைப்பேச்சுகளைக் குறைத்து, இந்தியாவில் வாழும் அனைவரும்நம் சகோதரர்கள் என்பது உள்ளிட்ட நேர்மறை அம்சங்களை அழுத்தமாகப் பேசிவர வேண்டும்.

நியாயமா?: பன்முகத்தன்மைக்கும் மத நல்லிணக்கத்துக்கும் நீண்ட காலமாக அறியப்பட்ட இந்த நாட்டில், குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிரான வெறுப்பு துரதிர்ஷ்டவசமானதுதான். இதை முறியடிப்பதற்குச் சரியான அரசியல் வியூகங்களை மதச்சார்பற்ற அணியினர் மேற்கொள்ள வேண்டும். மதவெறியை எதிர்க்க வேண்டிய பொறுப்பை மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் கட்டுவது மதச்சார்பற்ற சக்திகளே. எல்லாருக்கும் பொதுவாகவே ஓர் அரசு செயல்பட வேண்டும்; எல்லா மதமும் எங்களுக்கு சமம்தான் என்ற கொள்கையோடு எதிர்க் கட்சிகளும் செயல்பட வேண்டும். எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் எந்த அரசியல் கட்சியோ இயக்கமோ செயல்படக் கூடது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராகவோ, ஆதரவாகவோ தன்னைக் காட்டிக்கொள்வது இந்தியாவின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எதிரானதாகவே அமையும். உலக மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 170 கோடி. இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா (சுமார் 20 கோடி பேர்). இதில் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம்தான். இதில் இருநூறுக்கும் குறைவானவர்களே தீவிரவாதச் சிந்தனை உடையோராகக் கண்காணிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் இதுதான் நிலை.

கோவையில் நடந்த கார் வெடிப்பு போன்ற சம்பவங்களைத் தமக்கான அரசியல் லாபமாக, இரண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தும் உத்தியாக, வருங்காலத்தில் தங்களுக்கான வாக்காக மாற்றிட எந்தவொரு அரசியல் கட்சியுமே முன்வரக் கூடாது. தீவிரவாதச் செயலில் சிறுபான்மை, பெரும்பான்மை அணுகுமுறையும் தேவையில்லாதது. நடந்த நிகழ்வை மனிதகுலத்தை அழிக்கும் வகையிலான சட்டவிரோதச் செயலாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நாட்டில் அனைத்து சமூகத்தினரும் அமைதியையும் வளர்ச்சியையும் அனுபவிக்கும்போது முஸ்லிம்கள் மட்டும் பலவீனத்தால் அரசியல் சூழ்ச்சிகளில் சிக்குண்டு குற்றஉணர்வால் சிக்கித் தவிக்கும் நிலை சரிதானா? குடிமைச் சமூகம் சிந்திக்க வேண்டும்! - புதுமடம் ஜாபர் அலி, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

To Read in English: Why do some people have extremist thoughts?


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x