

ரஷ்யா - உக்ரைன் போர் முற்றுப்பெறாத நிலையில், பக்கவிளைவாய் வேறொரு யுத்தம் மறைமுகமாக நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் கொண்டுள்ள பற்றுதல் தனக்கு ஆபத்து என்று ரஷ்யா கருதுகிறது. அதை உறுதிசெய்வதுபோலவே உக்ரைனின் நடவடிக்கைகளும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளும் உள்ளன. உக்ரைன் மீது போர்தொடுத்து எளிதில் வென்றுவிடலாம் என்ற ரஷ்யாவின் திட்டம், உக்ரைனுக்கு அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் ஆயுத உதவிகள் செய்வதால் தவிடுபொடியாகிவிட்டது. இந்நிலையில் போரின் போக்கு வேறு திசைக்குச் செல்கிறது.
ஜெர்மனியின் மானியம்: ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி. இதன் இயற்கை எரிவாயுத் தேவையின் பெரும் பகுதி ஏறத்தாழ 52% ரஷ்யாவிலிருந்து பெறப்படுகிறது. தற்போது அதனை ரஷ்யா அதிரடியாக நிறுத்திவிட்டது. இதன் விளைவாகப் பெரும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, தொழிற்சாலைகளும் குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் மின்கட்டணம் 10 மடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் சலுகை விலையில் மின்சாரம் அளிக்க ஜெர்மனி 200 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் கோடி) ஒதுக்கியுள்ளது. தன் நாட்டுமக்களும் உற்பத்தியாளர்களும் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்ற ஜெர்மனியின் இத்திட்டம் சரியானதாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற 26 நாடுகளுக்குப் பெரும் தலைவலியாகவும் பேரிடியாகவும் அமையும் என்பது உறுதி. இந்த நிதி உதவியால், ஜெர்மன் தொழிற்சாலைகளில் பொருட்களின் உற்பத்திச் செலவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், மற்ற 26 நாடுகளில் மானியம் வழங்க முடியாது என்பதால், அவர்களது உற்பத்தி விலை கூடுதலாக இருக்கும். ஜெர்மன் நாட்டுப் பொருட்கள் மலிவு விலையில் சந்தையில் குவியும். விளைவாக, பிற நாடுகளின் பொருளாதாரம் புதைகுழிக்குள் செல்லும் அபாயம் உள்ளது. மானிய அறிவிப்பு வெளியானதுமே மற்ற ஐரோப்பிய நாடுகள் பதற ஆரம்பித்துள்ளன. ஜெர்மனியைப் போல் பொருளாதாரத்தில் பலமான சில நாடுகள் மானியம் வழங்கித் தப்பித்துக் கொள்ளலாம். நிதி வளமற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க இறக்குமதி வரி விதிக்கலாம். ஆனால் அது எளிதல்ல. காரணம், ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் அடித்தளமே நாடுகளுக்குள் வணிகம் எளிதாக எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி நடைபெற வேண்டும் என்பதே. இதற்காகவே யூரோவைப் பொதுப் பணமாகப் பரிவர்த்தனைக்கு உருவாக்கிக் கொண்டனர்.
அமெரிக்கா உதவுமா?: ஐரோப்பிய நாடுகள் பலவற்றை ஆட்டுவிக்கும் அமெரிக்கா இக்கட்டான இந்நேரத்தில், உதவ முன்வருமா என்பது முக்கியக் கேள்வி. காரணம், இந்நாடுகளின் தற்போதைய தேவை மின்சாரம், இயற்கை எரிவாயு. அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்களோ அணு ஆயுதங்களோ அல்ல. அமெரிக்கா டாலராக அள்ளிக் கொடுத்தாலும் பயனில்லை. காரணம், இயற்கை எரிவாயு உலகச் சந்தையில் கிடைக்க வேண்டுமே. அமெரிக்கா தன்னிடம் உள்ள உபரி இயற்கை எரிவாயுவினை அளிக்கத் தற்போது சாத்தியமில்லை. இவ்வாண்டு குளிர் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளில் வெப்பமூட்டிகள் செயல்படுவதற்குக் கூடுதல் மின்சாரம் தேவைப்படும். அத்தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை தங்களுக்கு மிஞ்சியதே தானம்.குளிர்காலம் தொடங்கிவிட்டால் ஐரோப்பியநாடுகள் பலவற்றில் மின் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடியாது. மக்களிடையே கொந்தளிப்பு எழ வாய்ப்புகள்அதிகம். அன்றாடத் தேவையை, வாழ்வாதாரத்தைப் பூர்த்திசெய்யாமல் உக்ரைனுக்கு என்ன ஆதரவு என்ற எதிர்க்குரல்கள் எழும்.
தீர்வு என்ன?: ஜெர்மனி தனது மானியத்தால் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் பாதகம் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, உற்பத்திப் பொருட்களை மற்ற நாட்டுச் சந்தையில், அவர்களது உள்நாட்டு உற்பத்தி விலையைவிடக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் அடுத்த நான்கு மாதங்களுக்குத் தங்குதடையின்றி இயற்கை எரிவாயு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில், ஐரோப்பிய ஒன்றியம் உடையும் சூழல் ஏற்படும். ஜெர்மனியின் மானியத் திட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே பிரான்ஸ், இத்தாலி, போலந்து ஆகிய நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. இக்கட்டான இச்சூழ்நிலையில், நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே ரஷ்யாவை எதிர்கொள்ள முடியும். அதற்குப் பங்கம் விளைவிக்கும் இந்த மானியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலுவான கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.
ஜெர்மனி, தனது மக்களின் நலனா ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையா என்னும் இக்கட்டில் உள்ளது. தன்னுடைய அதிரடி நடவடிக்கை, மேலைநாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள வைக்காதா என ரஷ்யா ஆவலோடு எதிர்நோக்கி உள்ளது. ஒன்று மட்டுமே இப்போது தெரிகிறது, குளிர் தொடங்குவதற்கு முன்பே ஐரோப்பா நடுங்கத் தொடங்கிவிட்டது. - கோ.ஒளிவண்ணன் பதிப்பாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: olivannang@gmail.com