

தமிழக மெய்யியல் தொடர்பாகக் கவனம்கொள்ளத்தக்க ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் க.நெடுஞ்செழியன் (79), நவம்பர் 4 அன்று காலமானார். தமிழியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு நவீன இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டபோது, மேற்குலகச் சிந்தனை என விமர்சிக்கப்பட்டது. கருத்துமுதல்வாதமே இந்தியச் சிந்தனை மரபு என முன்மொழியப்பட்டபோது, தத்துவவியலாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்றோர் பொருள்முதல்வாதத்தின் இந்தியப் பின்னணியை எழுதினர். இந்த மரபில் பொருள்முதல்வாதம் தமிழகத்தில் தோன்றிய தத்துவம் என எடுத்துரைக்க முயன்றவர் நெடுஞ்செழியன்.
பெளத்த, சமண மதங்கள்போல் ஆசீவகமும் வடக்கிலிருந்து வந்த மதம் என்ற கருத்தை மறுத்து, அதன் தமிழ் வேர்களைத் தன் ஆய்வுகள்வழி நெடுஞ்செழியன் கண்டறிய முயன்றார்; இந்த ஆய்வு அவரது அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தியவியல் அறிஞரான ஏ.எல்.பசாமின் ஆசீவகம் குறித்த ஆய்வுகளை நெடுஞ்செழியன் இதற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டார். தமிழ் இலக்கியங்கள் வழிதான் பசாம் ஆசீவகத்தை ஆராய்ந்தார். இந்த அடிப்படையில் நெடுஞ்செழியன் ஆசீவகம் ஒரு தமிழ் மதம் என்ற துணிபுக்கு வந்தார். அதற்கான சான்றுகளைக் கல்வெட்டு, இலக்கியங்கள் வழியாக அவர் தேடிச் சேகரித்துள்ளார். ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் சாத்தன், ஐயனார் என இன்றும் வணங்கப்படும் திருவுரு அவர்தான் என்றும் நெடுஞ்செழியன் மொழிந்துள்ளார்.
தமிழகத்தில் பொ.ஆ 14ஆம் நூற்றாண்டுவரை ஆசீவகம் பின்பற்றப்பட்டதைப் பசாம் நிறுவியிருந்தாலும் அது தமிழ் நிலத்தில் தோன்றிய மதம் என்ற முடிவுக்கு அவர் வரவில்லை. நெடுஞ்செழியன் அதைத் தன் ஆய்வுகள்வழி ஆராய்ந்து நிறுவ முயன்றுள்ளார். அந்த வழியில் சித்தன்னவாசல் ஓவியங்கள், சிற்பங்கள் முதலியன சமண மதத்துக்கு உரியவையாகக் கருதப்பட்ட நிலையில், அவை தமிழ் மதமான ஆசீவகத்துக்குரியவை என்ற கருத்தை நெடுஞ்செழியன் உரைத்தார். இதற்குச் சித்தன்னவாசல் மலையடிவாரத்தில் உள்ள மூன்று ஐயனார் கோயில்களை அவர் சான்றாக முன்வைத்தார். ஆசீவகக் கொள்கைப்படி நல்வெள்ளை நிலையை (ஒளி நிலையை) அடைந்தவர்களான மற்கலி கோசாலர், கிசசாங்கிசா, நந்தவாச்சா ஆகிய மூவரையும் இத்துடன் அவர் ஒப்பிட்டார். இதில் மாங்குளம் கல்வெட்டில் குறிப்பிடப்படும் நந்தாசிரியனே, நந்தவாச்சா என்றும் நற்றிணைப் புலவர்களில் ஒருவராகிய மதுரை ஓலைக் கடையத்தனாரே கிசசாங்கிசா எனவும் கண்டறிந்துள்ளார் பேராசிரியர். தேவிபிரசாத்தின் பொருள்முதல்வாதச் சித்தாந்தக் கட்டுரைகள்தாம் ஆசீவகம் பற்றிய ஆய்வுகளுக்குத் தூண்டுகோல் என்று நெடுஞ்செழியன் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பொருள்முதல்வாதச் சித்தாந்தத்தை ஆசீவகம் தனது முறையாகக் கொண்டதன்வழி அந்தச் சித்தாந்தத்தின் தமிழ்த் தோற்றுவாயை நெடுஞ்செழியன் தன் எழுத்துகள்வழி கண்டடைந்துள்ளார். அவரது இந்த ஆய்வுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்ற விமர்சனத்துக்கும் உள்ளாகின.
‘சமூக நீதி’ என்னும் சிறந்த நூலை இயற்றியுள்ளார். தன் தமிழ்ப் பிடிப்பால் இருமுறை சிறை சென்றவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகவும் பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றியவர். இவரது தமிழ்ப் பங்களிப்புக்காகத் தமிழக அரசு ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கிக் கெளரவித்தது. க.நெடுஞ்செழியனின் ஆய்வுகள், தமிழ் மெய்யியல் ஆய்வுப் புலத்தில் நினைவுகூரத்தக்கவை.