பூவுலகைக் காப்பாற்றுமா ‘காப் 27’?

பூவுலகைக் காப்பாற்றுமா ‘காப் 27’?
Updated on
3 min read

எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பத்தில் செங்கடலின் கரையில் அமைந்திருக்கிறது ஷார்ம் எல்-ஷேக். விடுமுறைக் கால நகரமான இங்கு உலக நாடுகளின் தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், பெருந்தொழிலதிபர்கள் என உலக இயக்கத்தைத் தீர்மானிக்கும் பிரிவினர் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முகாமிடுகிறார்கள். அன்றாட அரசியல் நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு விடுமுறையைக் கழிப்பதற்காக அங்கு முகாமிட்டிருக்கவில்லை. மாறாக, காலநிலை மாற்றத்தின் பின்னணியில் புவியின்எதிர்காலத்தையும் மனிதகுலத்தை உள்ளடக்கிய உயிரினங்களின் இருப்பையும் தீர்மானிக்கவிருக்கும் ‘தீர்க்கமான அரசியல் முடிவு’களை எட்டுவதற்காகக் கூடியிருக்கிறார்கள்.

அறிவியல் உண்மை: புதைபடிவ எரிபொருட்களை முதன்மையாகக் கொண்ட நவீன பொருளாதார அமைப்பின் (Fossil capital) விளைவாக, மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் தீவிரமடைந்துவருகிறது. இந்த அறிவியல் உண்மை 1990-களில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளும் உருப்பெறத் தொடங்கின. அதன்படி, உலக நாடுகள் இணைந்து இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில், ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை (UNFCCC) 1992இல் உருவாக்கப்பட்டது. இந்தப் பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 197 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் Conference of Parties (சுருக்கமாக COP; ‘Parties’ என்பது நாடுகள்) என்ற மாநாட்டைக் கூட்டி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்துவருகின்றன. அந்த வகையில், 27ஆவது ஆண்டுக் கூட்டமான ‘COP 27’, நவம்பர் 6 தொடங்கி 18 வரை ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெறுகிறது.

காலநிலை மாற்றம் ஓர் அறிவியல் உண்மை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் சேர்க்கை அதிகரித்து, புவியின் சராசரி வெப்பநிலை துரிதமடையத் தொடங்கியது ஒரு வரலாற்று முரண். கடந்த 25 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட தட்பவெப்ப நிகழ்வுகள் தீவிரமடைந்தன. ‘காலநிலை அவசரநிலை’யை அறிவிக்கும் நெருக்கடிக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டன. இயற்கைப் பேரிடர் என்பதைத் தாண்டி பொருளாதாரம், சுகாதாரம், மனநலம், சமூக ஏற்றத்தாழ்வு எனப் பல தளங்களில் இதன் பாதிப்பு எதிரொலிக்கத் தொடங்கியது. வரலாற்றுரீதியாகக் காலநிலை மாற்றத்துக்கு முதன்மைப் பங்களித்த மேற்குல நாடுகளின் அரசியல் சொல்லாடல்களில் தவிர்க்க முடியாத அங்கமாகக் காலநிலை மாற்றம் மாறியது. இதை எதிர்கொள்வது குறித்த செயல்திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன.

2021-க்குப் பிறகு...: பாகிஸ்தான் பெருவெள்ளம், ‘ஆப்பிரிக்கக் கண்டத்தின் கொம்பு’ பகுதியில் தீவிரமடைந்துவரும் 40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி, அமெரிக்காவில் இயான், ஐடா சூறாவளிகள், கலிஃபோர்னியக் காட்டுத்தீ, ஐரோப்பா, வட இந்தியாவில் வெப்ப அலைகள், வங்கதேசத்தில் சித்ரங் புயல், சீனாவில் வெள்ளமும் வறட்சியும் போன்றவை காப் 26-க்குப் பிந்தைய ஓராண்டில் மட்டும் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களில் சில. இந்த ஆண்டில் செப்டம்பர் வரையிலான உலகளாவிய இயற்கைப் பேரிடர்களால் மட்டும் சுமார் 22,700 கோடி அமெரிக்க டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஏயான் (Aon) அறிக்கை கூறுகிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை மட்டுப்படுத்த புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது, ஐ.நா.வின் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (IPCC), 2018இல் வெளியிட்ட ‘1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை’யின் முதன்மை எச்சரிக்கை. ஆனால், 2022 அக்டோபர் 27 அன்று வெளியான ‘உமிழ்வு இடைவெளி அறிக்கை 2022’, 1.5 டிகிரி செல்சியஸை எட்டுவதற்கான ‘சாத்தியமுள்ள வழிகள் (இப்போது) இல்லை’ எனக் கைவிரித்துவிட்டது; அதை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் ‘போதுமானதாக’ இல்லை என்று கவலை தெரிவித்திருக்கிறது. புவியின் சராசரி வெப்பநிலை இப்போது 1.1 டிகிரி செல்சியஸுக்கு உயர்ந்துவிட்டதாகக் கணிப்புகள் கூறுகின்றன.

மற்றொருபுறம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் விநியோகச் சங்கிலியின் (supply chain) சுழற்சியைக் குலைத்து, பணவீக்கத்திலும் உணவுப் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்திவருகிறது. தன் மீதான பொருளாதாரத் தடையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகித்துவந்த எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்திவிட்டது. எரிவாயுப் பயன்பாட்டுக்கு ரஷ்யாவையே முதன்மையாக நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள், பற்றாக்குறையைச் சமாளிக்கும் நோக்கில் மீண்டும் நிலக்கரிப் பயன்பாட்டுக்குத் திரும்பியுள்ளன. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் ‘பூஜ்ய கரிம உமிழ்வு’ இலக்குகளை இது தகர்த்திருக்கிறது. கரோனா பெருந்தொற்று உலக நாடுகளின் பொது சுகாதாரத் துறையைப் புரட்டிப் போட்ட நிலையில், காலநிலை மாற்றத்தின் விளைவால் ஏற்படும் உடல்நல, சுகாதாரப் பிரச்சினைகளும் கூடுதல் நெருக்கடியைக் கொண்டுவருகின்றன. அத்துடன் உலகின் இரண்டு மிகப் பெரிய மாசுபாட்டாளர்களான அமெரிக்கா, சீனா இடையேயான மோதல் போக்கு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.

‘பன்நெருக்கடிகள்’: இயற்கைப் பேரிடர்களும் புவி அரசியலுமாகப் பின்னிப்பிணைந்த உலகின் தற்காலப் பிரச்சினைகள் ‘பன்நெருக்கடிகள்’ (Polycrises) என்ற புதிய பதத்தைத் தோற்றுவித்திருக்கின்றன. இந்தப் பன்நெருக்கடிகளின் பின்னணியில்தான் காலநிலை மாற்றத்துக்குத் தீர்வு காண, உலக நாடுகளின் தலைவர்கள் ஷார்ம் எல்-ஷேக்கில் கூடியிருக்கின்றனர்.

காலநிலை மாற்றத்துக்கு மீச்சிறு பங்களித்த ஆப்பிரிக்கக் கண்டம்தான், அதன் மோசமான விளைவுகளுக்கு முதன்மையாக முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், எகிப்து போன்ற ஒரு நாட்டின் தலைமை, பின்தங்கிய-வளர்ந்துவரும் நாடுகளுக்கான ‘காலநிலை நீதி’யைக் கோருவதில் முக்கியப் பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் பேச்சுவார்த்தையிலிருந்து திட்டமிடலுக்கும் நடைமுறைப்படுத்துதலுக்கும் நகர்வதற்கான ஒரு வாய்ப்பாக காப் 27 பார்க்கப்படுகிறது. வளர்ந்துவரும் நாடுகள் புதைபடிவ எரிபொருளில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதற்கான 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதாரத்தை 2020-2025காலகட்டத்துக்குள் வளர்ந்த நாடுகள் திரட்டித் தர வேண்டும் என்று 2009இல் முடிவுசெய்யப்பட்டது. காப் 27இல் அது தீவிரமாக வலியுறுத்தப்படலாம்.

நீண்டகால நோக்கில், 2070இல் ‘பூஜ்ய உமிழ்வு’ என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம், 500 கிகா வாட் ஆற்றல் உற்பத்தியை 2030க்குள் இந்தியா எட்டும் என காப் 26 மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்தார். அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய மாசுபாட்டாளராக இந்தியா இருக்கும் நிலையில், காப் 27இல் இந்தியா முக்கியப் பங்குவகிக்கும் என்று நம்பப்படுகிறது. ஷார்ம் எல்-ஷேக் மாநாட்டையும் காலநிலை மாற்றத்தையும் உலக நாடுகளின் தலைவர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டார்களா அல்லது அதை ஒரு விடுமுறைக் காலப் பயணங்களில் ஒன்றாக மாற்றிக்கொண்டுவிட்டார்களா என்பது இன்னும் இரண்டு வாரங்களில் தெளிவாகிவிடும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in