ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 04: தமிழர்களின் தொல் சமயம்

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 04: தமிழர்களின் தொல் சமயம்
Updated on
2 min read

‘பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்படமாக வந்த பின் ராஜராஜனது சமயம் எது என்பது குறித்த விவாதம் தமிழ்ச் சமூகத்தில் தோன்றியுள்ளது. அவர் சைவரா இந்துவா என்பது விவாதப் பொருளாக மாறிவிட்டது. இடைக்காலத் தமிழகத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய இவ்விவாதம் பின்னோக்கிப் பயணித்துப் பல்லவர் காலத்தின் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், முதலாழ்வார்கள் என்போரைக் கடந்து, சங்க காலத்தில் காலூன்றிவிட்டது. இப்போது சைவம், இந்து என்ற கருப்பொருளுடன் தமிழர்தம் சமய வாழ்வு ஒற்றைத்தன்மை கொண்டதா... பன்முகத்தன்மை வாய்ந்ததா என்கிற ஆய்வுக்குள் நுழைந்தாயிற்று.

வைதீகச் சமயமரபு - அவைதீகச் சமயமரபு குறித்த சான்றுகள் சங்க இலக்கியத்தில் பரவலாகஇடம்பெற்றுள்ள நிலையில், அவரவர் கருத்துநிலைக்கேற்ப விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் இவ்விரு சமயநெறிகளுக்கும் முற்பட்ட சமயநெறி ஒன்று தமிழரிடம் செல்வாக்குப் பெற்றிருந்தமை இரு தரப்பினராலும் கண்டுகொள்ளப்படவில்லை.

தொல் சமயம்: உலகச் சமய வரலாற்றில் தொல்சமயம் அல்லது புராதனச் சமயம் (Primitive religion) என்ற பெயரிலான சமயநெறி இருந்தது. பெரும்பாலான உலகச் சமயங்கள் இதிலிருந்தே கிளைத்து வந்துள்ளன. அத்துடன் அதன் எச்சங்களையும் தம்முள் கொண்டுள்ளன. தொல் சமயத்தின் முக்கியக் கூறுகளாக 1.இயற்கைப்பொருள் வழிபாடு, 2.ஆவியம் (அனிமிசம்), 3.குலக்குறியம் (டோட்டமிசம்) என்ற மூன்றைக் குறிப்பிடலாம். இவை ஒவ்வொன்றும் சில உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. கடவுள், புனிதநூல், முறைப்படுத்தப்பட்ட சடங்குகள் - வழிபாட்டு முறை என்பன நிறுவனச் சமயத்தின் முக்கிய அடையாளங்கள். நிறுவனச் சமயம் நிலைபெற்றவுடன் தொல் சமயம் மெல்லமெல்லத் தன் செல்வாக்கை இழந்துவிடும். ஆயினும் அதன் தாக்கம் நிறுவனச் சமயங்களில் வெளிப்படுவதும் உண்டு. இதை அச்சமயத்தின் பெயரால் வெகுசனச் சமயம் (popular religion) என்று கூறுவர். சங்க இலக்கியங்கள் தொல் சமயம், சைவம், வைணவம் என்ற மூன்று சமய நெறிகளைக் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளன. மற்றொரு பக்கம், வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வைதீகச் சமயத்தின் பரவலும் நிகழ்ந்துள்ளது. வேதம், வேள்வி, வேள்வித்தூண் என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.

முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் யாகசாலைகள் பலவற்றை அமைத்து ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்று அழைக்கப்பட்டுள்ளான். வேள்வியின் அடையாளமாக வேள்வித்தூண்கள் நடப்பட்டமை குறித்த செய்திகளும் உள்ளன. இம்மை, மறுமை, ஊழ் குறித்தகருத்துகள் அறிமுகமாகிவிட்டன. பிரம்மா, பலராமன்ஆகிய வைதீகச் செந்நெறிக் கடவுளர்கள் அறிமுகமாகிவிட்டனர். அத்துடன் வைதீகச் சமயநெறிக்கு எதிராக வடபுலத்தில் தோன்றிய சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயநெறிகளும் இங்கு அறிமுகமாகிவிட்டன. இவற்றை அவைதீகச் சமயங்கள் என்பர். இறைமறுப்பாளர்களும்கூட பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். ஐம்பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம் என்று மொழிந்தமையால் பூதவாதி என்று இறைமறுப்பாளனை ‘மணிமேகலை’ குறிப்பிடும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கும் புறப்பாடல் சமணம் அல்லது ஆசீவகச் சமயத்தின் தத்துவத்தை எடுத்தியம்புவது. இப்பாடலில் இடம்பெறும் ஊழ் பற்றிய கருத்து சமணர்களின் ஊழ் குறித்தகருத்துடன் பொருந்திவருவது என்று சிலரும் ஆசீவகர்களின் நூல்கண்டு கோட்பாட்டுடன் (thread theory) பொருந்திவருவது என்று சிலரும் கருத்துரைப்பர். இத்தொடரில் இடம்பெறும் ‘யாவரும் கேளிர்’ (யாவரும் உறவினர்) என்ற சொல்லாட்சியின் அடிப்படையில், வைதீக நெறியின் வருணக் கோட்பாட்டுக்கு எதிரானது என்பது வெளிப்படை.வைதீகம் என்ற அடையாளம் காலப்போக்கில் இந்து என்று மாறியது. சங்க இலக்கியத்திலும் பதினெண்கீழ்க்கணக்கிலும் ஐம்பெரும் காப்பியங்களிலும் இச்சொல்லாட்சி இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இறந்தோர் வழிபாடு: சங்க இலக்கியங்களும் தொல்தமிழ்க் கல்வெட்டுகளும் நடுகல் வழிபாடு குறித்துக் குறிப்பிட்டுள்ளன. இவை ஆவி வழிபாடு, இறந்தோர் வழிபாடு என்பன நடைமுறையில் இருந்ததை உணர்த்துகின்றன. கண்ணகியின் ஆவி அவளது உயிர்த் தோழி தேவந்தியின் மீதும் அரட்டன் செட்டியின் இரு மகள்கள் மீதும் இறங்கிப் பேசுகிறது. இறந்தோர் வழிபாட்டில் வெறும் கல்லாகவும் அல்லது புடைப்புச் சிற்பமாகவும் காட்சியளித்த நினைவுக்கற்கள், கண்ணகி வழிபாட்டில் உருவச் சிலையாக வளர்ச்சி பெற்றுள்ளன. தஞ்சை பெரிய கோயிலின் வெளிச்சுற்றில் காணப்படும் சிவலிங்கங்கள் இறந்தோர் நினைவாக நடப்பட்டவை என்கிறார் தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி.

வேலனாட்டம்: முருகக் கடவுளைத் தன்மீது இறங்கவைத்து அவருடன் உரையாடும் வேலன் என்றுஅழைக்கப்படும் பூசாரியைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. இந்நிகழ்வு வேலனாட்டம் என்று அழைக்கப்பட்டது. வேலனாட்டத்தில் ஆடு பலி கொடுக்கப்பட்டது. விலங்கு உயிர்ப்பலி ஏற்கும் முருகனை அவனது புகழ்பாடும் திருமுருகாற்றுப்படையில் சந்திக்கிறோம். வேப்பமரத்தடியில் கொழுத்த பசுவைப் பலியேற்கும் கொற்றவையை ‘அகநானூறு’ அறிமுகம் செய்கிறது. படையல் பொருட்களுள் விலங்குகளும் இடம்பெறுகின்றன. இது வைதீக மரபுக்கு எதிரானது.

நாட்டார் சமயம்: தொல் சமயக்கூறுகளை உள்வாங்கிய நாட்டார் சமயங்கள் உயிர்ப்பலி, வெறியாட்டு (சாமியாட்டம்), மது, இறைச்சி, சுருட்டுஎன்பனவற்றைப் படையல் பொருட்களாகப் படைத்தல்ஆகிய கூறுகளை உள்ளடக்கியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாகப் பட்டியல் சாதியினரையும் பல்வேறு இடைநிலைச் சாதியினரையும் பூசகர்களாகக் கொண்டுள்ளன. மொத்தத்தில், தமிழர்தம் சமய நெறியை ஒற்றை அடையாளத்துக்குள் அடக்கிவிட முடியாது. - ஆ.சிவசுப்பிரமணியன் பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், தொடர்புக்கு: sivasubramanian @sivasubramanian.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in