

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, ஓவியர் வான்கா பற்றி அகிரா குரோசேவா இயக்கிய ‘டிரீம்ஸ்’ படத்தைச் சில ஆண்டுகளுக்கு முன் வகுப்பில் திரையிட்டேன். வான்காவாகப் பயணித்து படத்தில் மெய்மறந்து போனவர்களின் முகத்தில் படர்ந்த ஓவியத்தன்மையைக் கண்டு மகிழ்ந்தேன். தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா பற்றி அவர்களிடம் விரிவாக உரையாடினேன். உலகத் திரைப்பட இயக்கத்துக்கு ஈரான் திரைப்படங்கள் எப்படி உதவுக்கூடும் என்று, ‘தி கலர் ஆஃப் பாரடைஸ்’ மூலம் விளக்கினேன். பெருந்தொற்றுக் காலம் முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களுக்குக் கல்வியின் அவசியம் குறித்து நான் திரையிட்ட படம்தான் சமீரா மக்மல்பஃப்பின் ‘பிளாக்போர்ட்ஸ்’. நேரம் கிடைத்தபோதெல்லாம் திரையிட்டுக்கொண்டிருந்தேன்; இப்போது ‘திரைப்பட மன்றம்’ எங்களது பெருங்கனவைத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நனவாக்கியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் திரையிடல் நடக்கிறது என்பதே நம்ப முடியாத நனவுதான். எனது பள்ளியில் ‘தி ரெட் பலூன்’ திரையிடப்பட்ட செய்தி மெல்ல மற்ற ஆசிரிய நண்பர்களுக்கும் கல்வித் துறைக்கும் பரவத் தொடங்கியது. தமிழகப் பள்ளிக் கல்வித் துறை முதன்முறையாகத் திரைப்பட மன்றம் தொடங்க எங்கள் பள்ளியே ஏதுவாக அமைந்தது. சில தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால், வேறு பள்ளியில் முதல் திரைப்பட மன்றம் அரசால் தொடங்கப்பட்டாலும், அதற்கான திட்டம் எங்கள் பள்ளியின் முயற்சியில் இருந்து பிறந்ததை நினைத்து மகிழ்ச்சிதான். திரைப்பட ரசனை அடிப்படையில் அமைந்த கேள்விக்கான பதில்களைச் சொல்லும் மாணவர்களை உலகப் பயணத்துக்கு அழைத்துச்செல்லும் திட்டம் வரவேற்புக்குரியதும்கூட. பெரியவர்கள் சிறார் படம் குறித்து எழுதுவதைவிட, சிறார்களே எழுதும்போது அப்படத்தின்மீது ஆத்மார்த்தம் கூடிவிடுகிறது.
திரைப்படம் ஒரு பள்ளியை என்ன செய்துவிடும்? படக் காட்சிகளைத் தீட்டும் ஓர் ஓவியனை உருவாக்க முடியும்; நடிகனாக மாற்றும். இறுதிக் காட்சியை வேறொன்றாக மாற்றி எழுதும் கதாசிரியனாக மாற்றும். வசனங்களைத் தமிழாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளனாக்கும். படத்தில் இந்தப் பகுதி தேவையில்லை என்று கூறும் விமர்சகனைத் தோற்றுவிக்கும். ஒரு கதையைக் கலைடோஸ்கோப் போல வெவ்வேறு கதைகளாக மாற்றும் கதைசொல்லியை அடையாளப்படுத்தும். நகரமெங்கும் கண்ணில்படும் அதிசயக் காட்சிகளை ஒரு திறன்பேசியைக் கொண்டு ஆவணப்படமாக உருவாக்க வழிசெய்யும். அவன் கண்களில் ஆனந்தத்தின் பரவசம் ஒளிர அன்புள்ளவனாக்கும். நாம் திரைப்படம் பார்த்துவிட்டுச் செல்லும்போது, அவன் திரையைப் பார்க்கிறான். அது வெண்மையாக இருக்கிறது. அவனுக்குள் அந்த வெள்ளை நிறம் ஏதோ சொல்கிறது. அது நமக்குப் புரிவதில்லை. ஆனால், அவன் இதழ்களில் அன்பின் குறுநகை ஒளிர்ந்துகொண்டு இருக்கிறது. - ரா.தாமோதரன்
சத்யஜித் ரே திரைப்பட மன்றம், அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி, கும்பேகாணம்., தொடர்புக்கு: raa.damodaran@gmail.com