

தமிழ்நாட்டின் கவிஞர்கள் குறித்த நகைச்சுவை ஒன்று உண்டு: ஏழு கோடி தமிழ் மக்கள், ஆனால் 14 கோடி தமிழ்க் கவிஞர்கள் என்று. அது எப்படிச் சாத்தியம்? நான்கைந்து புனைந்துகொண்ட பெயர்களில் ஒருவரே வாக்கியங்களை மடக்கி மடக்கி ‘கவிதை‘களை ஜனிக்கச் செய்வார் என்பதால், மக்கள்தொகையில் ஏழில் ஒருவர் கவிதை எழுதினாலும்கூட இந்த எண்ணிக்கை சாத்தியப்படும்தானே.
கவிதை மீதான கட்டுப்படுத்த முடியாத இந்த ஆர்வம் இன்றைக்குச் சற்றே தணிந்திருக்கிறது. எந்தப் பெரிய காரணமும் இல்லாமல், சமூக ஊடகம் பலரையும் பிரபலமாக உணரவைப்பது இதற்கு ஒரு காரணம். அதே நேரம், கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னால் நிறைய சிறார் எழுத்தாளர்கள் படைபோல் புறப்பட்டிருக்கிறார்கள். காரணம், லட்சக்கணக்கானோரில் ஒருவராக கவிஞர் அடையாளம் பெறப் போராடுவதைவிட, போட்டிக்கு ஆட்கள் குறைவாக உள்ள சிறார் எழுத்தாளர் களத்தில் உடனடிப் பிரபலம் சாத்தியம் என்பதும் ஒரு காரணம்.
உடனடிப் பிரபலம் தேடி…
‘எமக்குத் தொழில் கவிதை’ என்று முழங்கிய பாரதி உள்ளிட்ட நமக்குப் பாதை சமைத்த முன்னோடிகளின் வழியில் சொல்வதானால், எழுத்து ஒரு கூர்மையான ஆயுதம். தேர்ந்த வாசிப்பு என்பது மனித குல விடுதலைக்கான சாவி. ஆனால், சிறார் எழுத்தின் ஆழ, அகலம் உணராத பலரும் இயந்திர வார்ப்புபோல் சிறார் எழுத்தை உற்பத்திசெய்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். நவீன வசதிகளின் பெருக்கம் காரணமாக எளிதான இணையப் பிரசுரம், பி.ஓ.டி. அச்சாக்கம், சமூக ஊடகப் பாராட்டு போன்றவை ‘எழுத்தாளர்’ அந்தஸ்தை எளிதாக அடைய அவர்களுக்கு உதவுகின்றன.
இன்றைக்குச் சிறாருக்குக் கதை எழுத, கதை சொல்ல வரும் பலரும் தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாறு, அண்டை மாநிலச் சிறார் எழுத்து, உலகெங்கும் விரிந்திருக்கும் சிறார் எழுத்தின் வீச்சு ஆகியவற்றைக் குறித்த ஆழமான பரிச்சயத்தைக் கொண்டிருப்பதுபோல் உணர முடியவில்லை. காட்சி ஊடகங்கள், பல்வகை ஊடக வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், கற்பனை வளம் குன்றிய சொத்தையான கதைகளையே பெரும்பாலும் எழுதியும் சொல்லியும் வருகிறார்கள். குழந்தைகளைக் குதூகலிக்க-உற்சாகப்படுத்தக்கூடிய, சிந்தனையைத் தூண்டக்கூடிய, கேள்வி கேட்க வைக்கிற கதைகள் அவர்களிடம் இருந்து அதிகம் வரவில்லை. கருத்துப் பிழைகள், எழுத்து-வாக்கியப் பிழைகள், வரலாற்று-அறிவியல் பிழைகள் எனப் பல்வேறு வகைப்பட்ட பிழைகள், தவறான புரிதல்களுடன் கதைகள் படைக்கப்படுகின்றன.
தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் விமர்சனம் என்கிற அம்சம் அருகிவரும் உயிரினமாகிவிட்டது. இன்றைக்குச் சமூக ஊடகங்களில் ஊதிப் பெருக்கப்படுகிற பல சிறார் படைப்புகள் வாசிக்கப்படுவதற்கு முன்பே பாராட்டப்படுகின்றன. இலக்கு வாசகர்கள் எவ்வளவு பேரைச் சென்றடைந்திருக்கிறது என்பதற்கான எந்தக் கணக்கும் இல்லாமலேயே ஒரு புத்தகம் வெற்றியடைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. ஒரு படைப்பு குறித்துப் பெருமளவு குழந்தைகளின் கருத்து என்ன என்பது தெரியாமலேயே, ஆஹா.. ஒஹோ எனக் கொண்டாடுவது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்?
பணம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காகப் பதிப்பகங்களுக்குக் காசு கொடுத்துப் புத்தகம் போடுவது அல்லது பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களை ஆசிரியரே வாங்கிப் பல இடங்களுக்கு வலிந்து அனுப்புவது தற்போது பெருகிவருகிறது. படைப்புகள் அவை ஏற்படுத்தும் தாக்கத்துக்காக, வீரியத்துக்காக மதிக்கப்பட்ட நிலை மாறிவருகிறது. சில சிறார் எழுத்தாளர்கள் அரசு, தனியார் விருதுகளைக் குறிவைத்தும் எழுதிவருகிறார்கள்.
இந்தப் பின்னணியில் தற்காலச் சிறார் எழுத்தில் நிறைய பிரச்சினைகள் நிலவுகின்றன. அவற்றில் சில:
குழந்தையைவிடத் தனக்கு வயதும் படிப்பும் அதிகம். இதனால் தாங்கள் நினைத்ததையெல்லாம், நினைத்தபடியெல்லாம் குழந்தைகளிடம் கொட்டிவிடும் மனோபாவம் அதிகம் காணப்படுகிறது. இதை ‘ஆசிரிய மனோபாவம்’ எனலாம்.
பழைமை, மரபு, பூர்விகம் போன்றவற்றை ‘ரொமான்டிசைஸ்’ செய்யும் தன்மை பெருகியிருக்கிறது. ஆகிவந்த விஷயங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, கண்மூடித்தனமான போற்றுதல் வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் எதிரி.
அறிவியல், சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறையை, மனப்பான்மையை வளர்ப்பதற்கு முயலாமல் மேம்போக்கான, ஆழமற்ற, புரிதலற்ற கதைகள், படைப்புகளை முன்வைக்கும் போக்கு.
குழந்தைகளுக்கான கதையும் எழுத்தும் வாசிக்கும்போது களிப்பூட்டுவதாகவும், பிற்காலத்தில் ஏதோ ஒரு கணத்தில் சிந்திக்கத் தூண்டுவதாகவும், கேள்வி கேட்பதை ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டும்.
கருத்து மட்டுமின்றி, அதை முன்வைக்கும் எழுத்துப் பாணியும் மிக முக்கியமானது. மொழி, எழுத்து ஆகியவற்றைப் பற்றிய புரிதலோ-கையாள்வதில் தேர்ச்சியோ பெரும்பாலோரிடம் இல்லை. ஒருமை-பன்மை வேறுபாடு, அடிப்படை இலக்கணம், சொற்களின் பயன்பாட்டு முறை போன்றவை சார்ந்த தவறுகள், குழப்பங்கள் குழந்தைகளைச் சென்றடையும்போது அவர்களுடைய மொழி வளமும் குன்றுகிறது.
முன்னோடிகளின் கனவு
தமிழ்ச் சிறார் இலக்கியத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திவிட வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் சிந்தனையாகக் கொண்டிருந்த அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் நேரம் இது. தமிழ்ச் சிறார் இலக்கியத்தை வளர்ப்பதற்குக் கூட்டுச் செயல்பாட்டின் அவசியத்தை உணர்ந்து நாடு விடுதலை பெற்ற மூன்று ஆண்டுகளில் ‘குழந்தை எழுத்தாளர் சங்க’த்துக்கு வித்திட்டவர் அவர்.
1960-கள் தொடங்கி 80-கள் வரை அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா, ‘கண்ணன்’ ஆசிரியர் ஆர்.வி. உள்ளிட்டோர் திரைப்படக் கதாநாயகர்களைப் போன்ற புகழுடன் தங்களைப் பின்தொடரும் சிறார் வாசகர் கூட்டத்தைக் கொண்டிருந்தார்கள். சிறார் இதழ்களும் நூல்களும் அந்த அளவுக்கு அன்றைய குழந்தைகளைத் தங்கள் வசம் பிடித்து வைத்திருந்தன. இன்றைக்கு அப்படிப்பட்ட சிறார் வாசகர்கள் இல்லை என்பதுதான் நிஜம். அன்றைக்கு எழுத்து மட்டுமே குழந்தைகளைச் சென்றடையும் ஒரே ஊடகமாக இருந்தது.
மற்ற ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் அவற்றிலிருந்து வேறுபட்டு, தனித்து அடையாளம் பெறுவதற்கு தமிழ்ச் சிறார் எழுத்து போராடிக்கொண்டிருக்கிறது. ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளின் சிறார் எழுத்து இவ்வளவு தீவிரமான சிக்கல்களைச் சந்திக்கவில்லை. அதற்குக் காரணம், அந்த மொழிகளின் படைப்பாளிகள் சிறார் இலக்கியத்தைத் தொடர்ந்து புதுப்பித்தும், மறுகண்டுபிடிப்பு செய்தும் படைப்புகளை உருவாக்கிவருகிறார்கள். தமிழ்ச் சிறார் இலக்கிய உலகும் இந்த அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு செயல்பட வேண்டும். அதுவே தமிழ் மொழிக்கும் சிறாரின் எதிர்காலத்துக்கும் வளம் சேர்ப்பதாக அமையும்.
அழ.வள்ளியப்பா நூற்றாண்டு நிறைவு: நவ. 7