திராவிடமா, சம்ஸ்கிருதமா?

திராவிடமா, சம்ஸ்கிருதமா?
Updated on
3 min read

இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சம்ஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழிகள் என்ற தவறான கருத்து ஒரு காலத்தில் நிலவியிருந்தபோது, 1816ஆம் ஆண்டு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் போன்றோர் தென்னிந்திய மொழிகள், சம்ஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை அல்ல என்ற கருத்தை நிறுவினர். இதன் தொடர்ச்சியாக திராவிட மொழிகளின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் (1814-1894), தனது ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலில் திராவிட மொழிகள், சம்ஸ்கிருத மொழியிலிருந்து தனித்து நிற்கும் ஒரு மொழிக்குடும்பம் என்பதை நிறுவினார். மேலும், திராவிடம் என்னும் சொல்லை ஒரு மொழிக்குடும்பத்தின் பெயராக நிலைநிறுத்தியதும் கால்டுவெல்தான்.

பர்ரோ, எமனோ ஆகிய இரண்டு திராவிட ஒப்பிலக்கண மொழியியல் அறிஞர்கள் ஒருங்கிணைந்து, முதன்முதலில் 1961இல் உருவாக்கிய திராவிட மொழிகளின் சொற்பிறப்பியல் அகராதியில் (Dravidian Etymological Dictionary - DED) திராவிட மொழிகளில் உள்ள இன மொழிச் சொற்களில் உள்ள பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வகராதியும் இவ்வகராதிக்குப் பின்னர் வந்த அகராதிகளும் மூல திராவிட மொழிச் சொற்களை (Proto Dravidian Words) மீட்டுருவாக்கம் செய்ய உதவுகின்றன.

கண்டம் தாண்டியும்...: திராவிட மொழிகளைப் பேசும் மக்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் பன்னெடுங் காலமாக வாழ்ந்துவருகின்றனர். 1921ஆம் ஆண்டில் இந்திய மொழிகள் அளவாய்வை (Linguistic Survey of India) நிகழ்த்திய ஆபிரகாம் கிரியர்சன், திராவிட மொழிகளைப் பற்றியும் அவற்றைப் பேசும் மக்களைப் பற்றியும் கூறிய கருத்துகள் கவனிக்கத்தக்கவை: திராவிட மொழிகள், ஒருகாலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்துள்ளன. ஆனால், அவர்களில் பலர், இப்போது திராவிட மொழிகளைப் பேசவில்லை. வட இந்தியாவில் வாழ்ந்த திராவிடர்கள் பெரும்பாலும் திராவிட இனத்துக்கே உரிய இனக்கூறுகளைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலும் இந்தோ ஆரிய மொழிகளைப் பேசுபவர்களாக மாற்றம் அடைந்துவிட்டனர். உடற்கூறுகளால் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று மானிடவியல் அறிஞர்களால் பகுக்கப்பட்ட மத்திய, தென் இந்தியாவில் வாழும் பல பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள், மொழியால் இருவேறு கூட்டத்தினராக, அதாவது திராவிட மொழி பேசுபவர்களாகவும் முண்டா மொழி பேசுபவர்களாகவும் மாற்றமடைந்துள்ளனர்!

இந்தியாவுக்கு மேற்கே உள்ள பலுசிஸ்தான் பகுதிகளில் திராவிட மொழி பேசும் பிராஹூயி பழங்குடியின மக்கள் வாழ்வதை ஆதாரமாகக் காட்டி திராவிட மொழிகள் பேசும் மக்கள், வேறு ஒரு இடத்திலிருந்து வடமேற்குப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும் என்று கால்டுவெல் போன்ற திராவிட மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

வளை நா ஒலி எனும் தனித்தன்மை: இந்தியாவில் இரு மொழியம் அல்லது பன்மொழியம் என்பது இயல்பான ஒன்று. ஒருவர் இன்னொரு மொழி பேசும் சமூகத்தினரை அடுத்து வாழும்போது, அந்தச் சமூகத்தினரது மொழிஅமைப்பில் உள்ள மொழிக்கூறுகள் சில, தமது தாய்மொழியில் வந்து சேர்ந்து நிலைத்துவிடுவது இந்தியாவில் காணப்படும் இயல்பான மொழியியல் தன்மை. அதாவது, ஒரு குடும்பத்து மொழியின் மொழிக்கூறுகள் இன்னொரு குடும்பத்து மொழிக்குச் சென்றடைவது, இந்தியாவில் காணக்கூடிய ஒன்று. இந்தோ ஆரிய மொழிக் குடும்ப மொழிகளுக்கிடையேயும் திராவிட மொழிக் குடும்ப மொழிகளுக்கிடையேயும் மொழிப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக சம்ஸ்கிருத மொழியில் உள்ள ரிக் வேதத்தில் காணப்படும் கடன் சொற்களான உலூகளா - ‘உரல்’, குண்ட - ‘குழி’, கள - ‘நெல் தாள்கள் அடிக்கப்படும் களம்’, காண - ‘ஒற்றைக்கண் மனிதன்’, மயூறா - ‘மயில்’ போன்றவற்றில் உள்ள வளை நாஒலி (retroflex sound), திராவிட மொழிகளின் தாக்கத்தால் பெற்றதாகும். பழைய சம்ஸ்கிருதத்தில் வளை நா ஒலி என்பது இல்லை!

சம்ஸ்கிருதத்தின் உச்சரிப்பில் அதுநாள் வரையிலும் இடம்பெறாமல் இருந்துவந்த (‘ள, ண’ போன்றவற்றில் உள்ள) ‘வளை நாவொலி’ புதிய வரவாகக் குடிபுகுந்துள்ளது! திராவிட மொழிகள் பேசும் மக்களும் இந்தோ ஆரிய மொழிகள் பேசும் மக்களும் இந்திய-கங்கைச் சமவெளியில் ஒருமித்து ஒரே சமூகமாக நிலைபெற்றிருந்த காலகட்டத்தில் இந்த மொழிப்பரவல் நிகழ்ந்திருக்கக்கூடும். ஆனால், திராவிட மொழி மாத்திரம் பேசும் தனித்த மொழிச் சமூகங்கள் இந்தச் சமவெளியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள தென்னிந்தியப் பகுதிக்கும் பிராஹூயி மொழி பேசும் சமூகம் வடமேற்குப் பகுதிக்கும் குடுஃ,-மால்டோ மொழிகள் பேசும் சமூகங்கள் கிழக்குப் பகுதிக்கும் கோண்ட்-குயி போன்ற மொழிகள் பேசும் சமூகங்கள் கிழக்கு-மத்திய இந்தியப் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

திராவிட மொழிகளைச் சித்தியன் மொழி, ஆப்பிரிக்க மொழி, எலமைட் மொழி, ஜப்பானிய மொழி ஆகியவற்றோடு ஒப்பிட்டு ஆய்வுகள் பல நடந்துள்ளன. சுசுமு ஓனோ என்னும் ஜப்பானிய மொழி அறிஞர், பேரசிரியர் பொன்.கோதண்டராமனுடன் (பொற்கோ) இணைந்து திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய தமிழை, ஜப்பானிய மொழியோடும் அதன் பண்பாட்டுக் கூறுகளுடனும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.சிந்துவெளி நாகரிக மக்களின் மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்தை பின்லாந்து அகழாய்வு அறிஞர் அஸ்கா பர்போலா உட்படப் பல ஆய்வாளர்கள் ஆதரிக்கிறார்கள். சிந்துவெளி மக்களின் மொழி, முண்டா மொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயல்கின்றனர். இந்து தேசியவாதிகள் பலர் இது குறித்துத் தீவிர கருத்துகளைக் கொண்டிருப்பதால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், மொழியியல் எல்லையைத் தாண்டி அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவையாகவும் மாறிவருகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in