

கிறிஸ்துவ மதபோதகர் தேவசகாயம் ஜானின் மகளாக மாயவரத்தில் 30 ஏப்ரல் 1832 அன்று அன்னம்மாள் ஆரோக்கியம் பிறந்தார். இங்கிலாந்து தேவாலயம் நியமித்த முதல் தென்னிந்தியப் போதகர் இவர். தஞ்சையிலும் அதைத் தொடர்ந்து நெல்லையிலும் போதகராகப் பணியாற்றிவந்த தேவசகாயம் ஜான், தன் மகள் அன்னம்மாள் மேல் மிகுந்த அன்புகொண்டிருந்தார். ஊழியத்துக்குச் செல்லும்போதும் வாசிக்கும்போதும் பயணிக்கும்போதும் அவரது வழித்துணையாக மகளை அருகே வைத்துக்கொண்டார்.
14 வயது முதலே கிறிஸ்துவ மறை பரப்புப் பணியில் அன்னம்மாள் ஈடுபடத் தொடங்கினார். பெண்கள் பள்ளி ஒன்றில் படித்துவந்த பெண்களின் உடல், உள்ளத் தேவைகளைக் கவனித்து உதவிவந்தார். குழந்தைகள் மேல் அன்னம்மாளுக்குப் பெரும் ஈடுபாடு இருந்ததால் அவரால் குழந்தைகளுடன் ஒன்ற முடிந்தது. ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், ஏழைக் குழந்தைகள்மேல் தனி வாஞ்சை கொண்டிருந்தார் அன்னம்மாள். நெல்லை மிஷனின் கீழ் இயங்கிவந்த கடாட்சபுரம் சேகரத்தின் ‘சின்னம்மாள்’ என்றே அன்னம்மாள் அறியப்பட்டார். 1837ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிளாக்பர்ன் என்ற மிஷனரியின் மனைவி கடாட்சபுரத்தில் ‘நார்மல் பள்ளி’ ஒன்றைத் திறந்து பெண்களுக்குக் கல்வி கற்றுத்தந்தார். 1841ம் ஆண்டு அவர் இங்கிலாந்து திரும்பிய பின் இந்த நார்மல் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த சேகரத்தின் போதகரான தேவசகாயம் ஜானுக்குக் கிடைத்தது. இந்தப் பள்ளியில்தான் அன்னம்மாள் பயின்றார்.
1849ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்னம்மாளுக்கும் புதிதாக மதம் மாறிய வில்லியம் தாமஸ் சத்தியநாதன் என்ற மறைப்பணி மாணவருக்கும் திருமணம் நடந்தேறியது. செல்ல மகளாகத் தந்தையிடம் வளர்ந்த பெண், கணவரின் சொற்ப ஊதியத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். தம்பதிக்கு ஐந்து பெண்கள். இரண்டு ஆண்கள் என ஏழு குழந்தைகள் பிறந்தனர். 1857ம் ஆண்டு சென்னை டவ்டன் கல்லூரியில் படிப்பைத் தொடர சத்தியநாதன் சென்றபோது, அன்னம்மாளும் அவருடன் சென்றார். ஈராண்டுப் படிப்பை அவர் முடித்ததும் அவரை நெல்லைப் பகுதியில் மறைபரப்புப் பணிக்கு சி.எம்.எஸ். மிஷன் அனுப்பியது. 1859ம் ஆண்டு வடநெல்லை திருவில்லிபுத்தூர் சேகரத்தில் மறைபணியாற்றிவந்த ராக்லாந்தின் உதவியாளராக சத்தியநாதன் நியமிக்கப்பட்டார். கணவருக்கு உதவியாகத் தான் வசித்த வீட்டிலேயே அப்பகுதியில் வசித்த சிறுமிகளுக்கு அன்னம்மாள் கல்வி கற்பித்துவந்தார்.
1862இல் அன்னம்மாள் குழந்தை வளர்ப்புக்கு வழிகாட்டும் ‘நல்ல தாய்’ என்ற நூலை எழுதினார். பெண் ஒருவர் தமிழில் எழுதி அச்சிட்ட முதல் நூல் இதுவாக இருக்கலாம். இந்த நூலின் நான்காம் பதிப்பைத் திருத்தி அவரது மகள் அன்னம்மாள் கிளார்க் 1896ம் ஆண்டு நவம்பர் 16 அன்று வெளியிட்டார். 1878ம் ஆண்டு சத்தியநாதன் தம்பதி இங்கிலாந்து வருமாறு வெளிநாட்டு மிஷன் கமிட்டி அழைப்பு விடுத்தது. தன் இங்கிலாந்து பயணத்தைப் பற்றி ‘இங்கிலாந்து தேசத்தில் ஆறு மாத சஞ்சாரம்’ எனப் பயண அனுபவ நூலாக அன்னம்மாள் எழுதியிருக்கிறார். இங்கிலாந்திலிருந்து திரும்பியது முதலே உடல்நலமின்றி அன்னம்மாள் தவித்தார். மூன்றாண்டு அவதியுற்றவர், 24 அக்டோபர் 1894 அன்று இறந்தார். இம்மண்ணின் முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்கியவர், அச்சேறிய முதல் தமிழ் நூல் எழுதிய பெண் எனப் பல பரிமாணங்களில் அன்னம்மாள் சத்தியநாதனின் புகழ், இம்மண்ணுள்ள மட்டும் நிலைத்திருக்கும்.