மரபணு மாற்றக் கடுகு: ஆபத்தை உணர்ந்திருக்கிறோமா?

மரபணு மாற்றக் கடுகு: ஆபத்தை உணர்ந்திருக்கிறோமா?
Updated on
3 min read

‘இயற்கைவழி வேளாண்மை நமது கடமை’ - 75ஆம் விடுதலைத் திருநாள் உரையில் பிரதமர் நரேந்திர மோடி.

‘மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது’ - நடைமுறையில் உள்ள இயற்கைவழி வேளாண்மை அல்லது உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழ் பெறவோ விற்பனை செய்யவோ உள்ள தகுதிக்கான வழிகாட்டு நெறிமுறையில் உள்ள பிரிவு 8.7; உயிர்மமுறை உற்பத்திக்கான தேசியத் திட்டம், இந்தியவணிகம் மற்றும் தொழில் அமைச்சகம், டெல்லி.

‘இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மரபணு மாற்றமில்லா சான்றளிப்புக் கட்டாயம் தேவை’ -(FSSAI).

என நமக்கு முன்பாக மூன்று செய்திகள் உள்ளன.

முதலில், விடுதலை நாள் உரையில் பிரதமர் இயற்கைவழி வேளாண்மையே நமது கடமை என்றும், அதன் மூலம் சிறு-குறுஉழவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இரண்டாவது, நம்முடைய அரசின் ஏற்றுமதிக்கு அனுமதி தரும் நிறுவனம், எந்த விதமான மரபணு மாற்றப்பட்ட பொருட்களும் இயற்கை வேளாண்மை அல்லது உயிர்ம வேளாண்மைக்குள் வரவே கூடாது என்று கட்டளையிடுகிறது. மூன்றாவது, மக்களின் உடல்நலம் காக்க முனைப்புடன் உள்ள உணவுப் பாதுகாப்பு – தரக் கட்டுப்பாட்டு ஆணையம், இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மரபணு மாற்றம் இல்லை என்ற சான்று பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது. இந்த மூன்று செய்திகளும் உணவில் ‘மரபணு மாற்றம்’ என்ற செயல்பாடு நாட்டு நலனுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, மக்கள் உடல்நலத்துக்கும் எதிரானது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன.

பி.டி. பருத்தி தந்த வலி: மரபணு மாற்றம் என்பது என்ன? இது அறிவியல் கண்டுபிடிப்பு என்கின்றனர் அறிவியலாளர்கள் சிலர். குறிப்பிட்ட உயிரி ஒன்றின் உடலில் ஒரு குறிப்பிட்ட தன்மையைப் பெற்றுள்ள மரபணுவைப் (Gene) பிரித்தெடுத்து, வேறொரு உயிரியின் உடலில் செலுத்தி குறிப்பிட்ட தன்மையைப் பெறும் செயல். இது அறிவியல் கண்டுபிடிப்பல்ல, தொழில்நுட்பக் கையாட்டம் (technological manipulation). எடுத்துக்காட்டாக, பருத்தியில் நடந்த கதை. பாசில்லஸ் துரிஞ்சியன்ஸ் (பி.டி) என்கிற நுண்ணுயிரில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மரபணு, பருத்தியைத் தாக்கும் அமெரிக்கக் காய்ப்புழுவைக் கொல்லும் திறன் கொண்டது எனக் கருதி, நுண்ணுயிரியின் மரபணுப் பருத்திச் செடிக்குள் செலுத்தப்பட்டது. இதன் மூலம் விளைச்சல் அதிகரிக்காது, பூச்சிக்கொல்லிப் பயன்பாடு குறையும் என்பதே அவர்கள் சொன்னது. விளைவோ, காய்ப்புழுக்கள் தாங்குதிறன் பெற்றதுதான் மிச்சம். பூச்சிக்கொல்லித் தெளிப்பும் குறையவில்லை. 2002இல் நுழைந்த பி.டி. பருத்தியால் பெரிய விளைச்சல் உயர்வை எட்ட முடியவில்லை. ஆனால், விதைச் சந்தையிலிருந்து மரபணு மாற்றமில்லாத விதைகள் அனைத்தையும் அது விரட்டியடித்துவிட்டது.

ஏமாற்று வித்தை: கடந்த பத்தாண்டுகளில் சிறிததளவு உயர்ந்துள்ள பருத்தி விளைச்சல் அளவும்கூட உற்பத்தித் திறனால் எட்டப்பட்டது அல்ல, அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்ததால் கிடைத்ததே. அதாவது, 2011இல் 33.9 மில்லியன் பொதிகள் விளைந்தன. அது 2021இல் 37.1 மில்லியன் பொதிகளாக உயர்ந்தன. அதேவேளை 2011இல், 121.78 லட்சம் ஹெக்டேர் சாகுபடியான பரப்பு, 2021இல் 132.85 ஹெக்டேர் பரப்பளவாக உயர்ந்தது. ஆகவே, பி.டி.யின் வருகையால் எந்த உயர்வும் பெரிதாக எட்டப்படவில்லை என்பது அப்பட்டமான உண்மை. அத்துடன் சாகுபடிச் செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தத் தோல்விக் கதை இப்படி இருக்கும்போது, உணவுப் பொருட்களில் மரபணு மாற்றம் வரவே வராது என்று அடித்துச் சொன்னவர்கள், இப்போது நேரடி உணவுப் பொருளான கடுகில் கைவைத்திருக்கிறார்கள் (ஆனால், தமிழ்நாட்டில் பருத்தி நீண்ட காலமாகவே ஒரு உணவுப் பயிர்தான். மனிதர்கள் அருந்தும் பருத்திப்பால், மாட்டுக்குப் பருத்திக் கொட்டை அரைத்துக் கொடுப்பது வழக்கம்).

பெயரை மாற்றினால் போதுமா?: 2017இல் உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்குப் பின்னர் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் அதே மரபணு மாற்றக் கடுகு விதையை அனுமதித்துள்ளது, மரபணுப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு (GEAC). இந்தக் கடுகுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர், தாரா கலப்பினக் கடுகு (DMH11). மரபணு மாற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் மக்களிடம் எதிர்ப்பு வரும் என்று குயுத்தியாகப் பெயரை மாற்றிக் கூறுகின்றனர்.

மரபணு மாற்றக் கடுகு அதிகமான விளைச்சல் தரும், இது ‘நமது’ அறிவியலாளர்களே கண்டறிந்த சுதேசி நுட்பம் என்ற முழக்கங்களை முன்வைக்கின்றனர். முதலில் அவர்கள் கூறும் 30% விளைச்சல் உயர்வு எப்படி வரும் என்று விளக்கவில்லை. உலக சராசரி ஏக்கருக்கு 2,200 கிலோ, நாம் ஏக்கருக்கு 1,200 கிலோ எடுக்கிறோம் என்பதே நிலைமை. ஆனால், எந்த நாட்டிலும் தாரா கடுகை ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சாகுபடி செய்துபார்க்கவில்லை. இது சுதேசி என்பதும் தவறான வாதம். இதன் அடிப்படைத் தொழில்நுட்பமான ‘பர்னசே பார்ஸ்டார்’ என்பது (மகரந்தத் தூளில் மாற்றம் நிகழ்த்துவது), பேயர் என்ற பன்னாட்டு நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள நுட்பம்.

இந்த விதைகளைப் பயன்படுத்தும்போது, அதிகளவு பேயர் நிறுவனத்தின் களைக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். அந்தக் களைக்கொல்லிகள் மண்ணில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குளுஃபோசனைட் (Glufosinate) என்பது மிக மோசமான உடல்நலக் கேடுகளை குறிப்பாக நரம்பு மண்டலம், உணவு மண்டலம் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் களைக்கொல்லியை பேயர் நிறுவனமே கொடுக்கிறது. எனவே, மறைமுகமாகப் பன்னாட்டு நிறுவனத்துக்கு உதவும் வேலையைத் தவிர, இதில் புதிதாக வேறு என்ன இருக்கிறது?

யாருக்கான தொழில்நுட்பம்?: அறிவியல் வேறு, தொழில்நுட்பம் வேறு; இரண்டையும் நமது அறிவியலாளர்கள் குழப்பிக்கொள்கின்றனர். சூழலியல் பாதுகாப்பு குறித்துப் பேசுவோரையும் இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர்களையும் அறிவியலுக்கு எதிரானவர்கள் என்று திரித்துக் கூறுகின்றனர். நாம் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்ல, அறிவியல் பொதுவானது. ஆனால், தொழில்நுட்பம் எல்லாருக்கும் பொதுவானதாக இருப்பதில்லை. ஆகவே, இந்தியாவில் வாழும் இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள உழவர்களுக்கான தொழில்நுட்பமே தேவை. பன்னாட்டு நிறுவனங்களின் பைகளை நிரப்பும் தொழில்நுட்பம் தேவையில்லை. யூரியாவைப் பயன்படுத்தும் நுட்பத்தைவிட, சாணத்தையும், கோமியத்தையும் எப்படி எளிமையாக, சிறப்பாக, சுத்தமாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். சமூகவியல், பொருளியல் சிக்கல்களை, தொழில்நுட்பச் சிக்கல்களாகக் குறுக்கிப் பார்க்கும் பார்வையே இதில் வெளிப்படுகிறது. விளைச்சல் அதிகமானால் உழவர்கள் பயன்பெறுவார்கள் என்ற சொத்தை வாதம் வருத்தமளிக்கிறது. சந்தை என்ற மோசமான பூதம் நம் முன்னே உள்ளது. ஒரு பொருள் அதிகமாக விளையும்போது விலை சரிந்துவிடும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களை என்னவென்பது.

புற்றுநோய்க் காரணி: இந்திய நிலங்களில் எந்த வரைமுறையும் இல்லாமல் கொட்டப்படும் களைக்கொல்லிகள் பற்றிய பெரிய ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வப்போது வரும் பகுதி சார்ந்த ஆய்வுகள் அச்சமூட்டுபவையாக உள்ளன. முதலில் கிளைபோசைட் களைக்கொல்லி புற்றுநோய்க் காரணி இல்லை என்றார்கள், இப்போது அதுவும் புற்றுநோய்க் காரணி என்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் குளுஃபோசைட்டும் இருந்தால் என்ன செய்வது. ஒரு கட்டத்தில் சூழலில் நஞ்சு பரவியதோடு, ‘சூப்பர் களைகள்’ என்று சொல்லப்படும், கொல்ல முடியாத களைகள் உருவாகும்போது இந்திய வேளாண்மைத் துறையே ஆபத்தில் சிக்கிவிடும் அல்லவா?

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு முறை இப்படிக் கூறினார், “பணியில் இருக்கும்போது மரபணு மாற்றப் பயிர்களை ஆதரிக்கும் விஞ்ஞானிகள், ஓய்வுக்குப் பின்னர் சூழலியல் பாதுகாப்புப் பணியில் முனைப்புக் காட்டுகிறார்கள்”. அவர் கூற்று உண்மையானால், அறிவியல் அறிஞர்களுக்குப் புற அழுத்தம் உள்ளதோ என்ற ஐயம் தோன்றுகிறது. மீண்டும் முதல் பத்திக்கு வருவோம், ‘இந்தியாவை இயற்கை வேளாண்மைக்கான நாடாக மாற்ற வேண்டும்’ என்ற பிரதமரின் விருப்பம் உண்மையிலேயே நிறைவேற வேண்டுமானால், நம் நாட்டின் வேளாண் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமானால், நமது உணவில் தீங்கான மரபணுக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மரபணு மாற்றப்பட்ட கடுகை எந்த வகையிலும் அனுதிக்கக் கூடாது. - பாமயன்
இயற்கை வேளாண் வல்லுநர், எழுத்தாளர், தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in