புத்துயிர் பெறுமா பிரேசில்?

புத்துயிர் பெறுமா பிரேசில்?
Updated on
3 min read

தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நாடான பிரேசிலின் 39 ஆவது அதிபராகத் தேர்வாகியிருக்கிறார் (50.10% வாக்குகள்) தொழிலாளர்கள் கட்சியின் தலைவரான லூயிஸ் இனாசியோ ‘லூலா’ டி சில்வா (சுருக்கமாக லூலா). அதிதீவிர வலதுசாரியான தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனாரோவை (49.10% வாக்குகள்) வென்று, மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குத் திரும்பும் இடதுசாரியான லூலாவின் இந்த வெற்றி, லத்தீன் அமெரிக்காவின் சமகால அரசியலில் அசாத்தியமான மீள்வருகையாகப் பார்க்கப்படுகிறது.

சா பாலோவின் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எளிய பின்புலத்திலிருந்து வந்த லூலா, ஒரு தொழிற்சங்கவாதியாக வாழ்க்கையைத் தொடங்கினார். பிரேசிலில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, 1978 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்நின்றுநடத்திய லூலா, 1980இல் இடதுசாரிப் பின்புலம் கொண்ட தொழிலாளர்கள் கட்சிதொடங்கப்படுவதிலும் முக்கியப் பங்குவகித்தார். பிரேசிலில் மக்களாட்சியை வலியுறுத்திய முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் தீவிரமாகச் செயல்பட்டுவந்த லூலா, 1986 தேர்தலில் நாட்டிலேயே மிக அதிக வாக்குகளுடன் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார்.பிறகு, 1989இல் அதிபர் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்; தொடர்ந்து 1994, 1998 அதிபர் தேர்தல்களிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும் அவருக்கான ஆதரவு வலுப்பெற்றுவந்தது.

லூலாவின் ஆட்சி: பிரேசிலின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்துக்கொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில்தான், 2002 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட லூலா 61.27% வாக்குகள் பெற்று முதன்முறையாக ஆட்சிக்குவந்தார். ‘ஃபோம் ஜீரோ’, ‘போல்சா ஃபேமிலியா’ போன்ற சிறப்புவாய்ந்த மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்திய லூலா, 2006 அதிபர் தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்த லூலா, முடங்கிக் கிடந்த பிரேசிலின் பொருளாதாரத்தைச் சீர்தூக்கி நிறுத்தினார்; 2 கோடி பிரேசிலியர்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தார்; குறைந்தபட்சக் கூலி, சராசரி வருவாய் விகிதம் உயர்ந்தது; மனிதவளக் குறியீடுகளில் பிரேசில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. பிராந்திய, உலகளாவிய வர்த்தக-சுற்றுச்சூழல் விவகாரங்களில் பிரேசிலின் அயலுறவுக் கொள்கையை லூலா முன்னகர்த்தினார். பிரேசிலில்அவருக்கான மக்கள் ஆதரவு உச்சத்தைத் தொட்டது;உலக அளவிலும் பிரபலமான தலைவராக லூலா பரிணமித்தார்.

பிரேசிலில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராகத் தொடர முடியாது. இந்தப் பின்னணியில், லூலாவின் தலைமை அமைச்சரான தில்மா ரூஸெஃப், 2010 அதிபர் தேர்தலில் வென்று பிரேசிலில் முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்றார்; ஆனால், நிர்வாக கிரிமினல் குற்றச்சாட்டின் பேரில் 2014இல் இவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிபராகப் பொறுப்பேற்றவர் மைகெல் டெமெர்.

‘கார் வாஷ்’ ஊழல்: பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி, நாட்டின்பொருளாதாரத்தை நிலைத் தன்மைக்குக் கொண்டு வந்திருந்தாலும் லூலாவின் அரசியல் வாழ்க்கையைக் கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டுவந்தது ஓர் ஊழல் குற்றச்சாட்டு: ‘ஆபரேஷன் கார் வாஷ்’. பிரேசிலின் அரசுத் துறை பெட்ரோலிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோபிராஸில் (Petrobras) நடந்தஊழலில் லூலா நேரடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்பட்ட இந்த வழக்கில், லூலாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டு வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் லூலா மீதான குற்றச்சாட்டை ரத்துசெய்தது; 2021 நவம்பர் 8 அன்று லூலா விடுவிக்கப்பட்டார்.

போல்சனாரோவின் வருகை...: ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அதிபர் தேர்தலில் போட்டியிட லூலாவுக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், 2018 அதிபர் தேர்தலில் இடதுசாரிகளின் பிடி தளரவே வலதுசாரியான ஜெயீர் போல்சனாரோ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் ராணுவ அதிகாரியான போல்சனாரோ, வலதுசாரி பழமைவாதக் கருத்துகளைத் தூக்கிப்பிடிப்பவராக இருந்தார்; முந்தைய ராணுவ ஆட்சியின் நினைவேக்கம் இவரிடம் ஆழம் கொண்டிருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறுதலித்த இவரது கொள்கைகள், அமேசான் மழைக்காடுகளின் பாதுகாப்பை ரத்துசெய்து திரும்பப்பெற சாத்தியமற்ற அழிவுக்கு வழிவகுத்தன, அறிவியலுக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குமான நிதி ஒதுக்கீடுகள் பெருமளவு குறைக்கப்பட்டன, நிலங்கள் மீதான பூர்வகுடிகளின் உரிமைகள் நசுக்கப்பட்டன, பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியது, உலகெங்கிலும் மேலெழுந்துவரும் வலதுசாரித்துவத்தின் அசல் பிரதிநிதியாக அரசியலர்கள் இவரை அடையாளப்படுத்தினர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, போல்சனாரோ அரசாங்கம் கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்ட விதத்துக்குப் பிரேசிலியர்கள் கொடுத்த விலை அளவிட முடியாதது. 3 கோடிக்குமேற்பட்ட தொற்றுகளுடன், கரோனா உயிரிழப்புகள் (சுமார் 7 லட்சம் பேர்) அதிகம் பதிவான உலகின் இரண்டாவது நாடு (முதல் நாடு அமெரிக்கா) என்ற வரலாற்றுத் துயருக்கு பிரேசில் உள்ளானது. நிர்வாகத் திறனற்ற போல்சனாரோவின் கரோனா குறித்த மறுதலிப்பு பொருளாதாரம் உட்பட அனைத்துத் தளங்களிலும் பிரேசிலுக்குப் பின்னடைவைக் கொண்டுவந்தது. வறுமையும் பட்டினியும் சுமார் 3 கோடி மக்களைப் பாதித்தன. போல்சனாரோவின் ஆட்சி பிரேசிலின் சமகால வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகவே அமைந்துவிட்டது.

மீண்டும் லூலா: போல்சனாரோவின் ஆட்சி பிரேசிலுக்கு மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தின் பின்னணியில் அமேசான் மழைக்காடுகளின் பாதுகாப்பு குறித்த அவரது கொள்கைகள் உலகுக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிட்ட சூழலில் 2022 அதிபர் தேர்தல் உலகளவில் கவனிக்கப்பட்டது. அதிதீவிர தேசியவாதம், பழமைவாதம், சுதந்திரச் சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த போல்சனாரோவை, நூலிழை வாக்கு வித்தியாசத்தில் (1.8%) வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறார் லூலா.

லூலா தன் முந்தைய ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய நலத்திட்டங்கள் இன்று காணாமல் போய்விட்டன. பிரேசிலின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, அதன் பொருளாதாரம் இன்றிருக்கும் நிலையில் பிரேசிலுக்குக் கைகொடுக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆக, பிரேசிலின் வருங்காலம் எல்லா வகையிலும் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அதிபராக அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டாலும் நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் பெரும்பான்மை வகிப்பது லூலாவுக்குப் பெரும் நெருக்கடியாகவே அமையும்.

பிரேசிலுக்கு முன்னதாக கியூபா (2019), பொலிவியா (2020), ஹோண்டுராஸ் (2021), நிகராகுவா (2021), பெரூ (2021), சீலே (2021), கொலம்பியா (2022) ஆகிய நாடுகளில் ‘இடதுசாரிகள்’ ஆட்சியைப் பிடித்திருப்பதால், லத்தீன் அமெரிக்காவில் ‘இளஞ்சிவப்பு அலை’ வீசுவதாகப் பொதுவான ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் பெருமையுடன் பகிரப்பட்டுவருகிறது. எனினும் லூலா-போல்சனாரோவுக்குப் பதிவான வாக்குகளின் மிகக் குறுகிய வேறுபாடு உள்ளிட்ட பல நுண்ணிய அம்சங்களால் அது கேள்விக்குட்படுத்தப்படுவதும் கவனத்துக்குரியது. - சு.அருண் பிரசாத், தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in