திருமுறைகண்ட சோழ ஓவியம்

திருமுறைகண்ட சோழ ஓவியத்தின் தோற்றம் | படங்கள்: ந.தியாகராஜன் |
திருமுறைகண்ட சோழ ஓவியத்தின் தோற்றம் | படங்கள்: ந.தியாகராஜன் |
Updated on
3 min read

சிவபாதசேகரன் என்ற பட்டப் பெயருக்கு எல்லா வகையிலும் தகுதியுள்ள சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜன். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய முதல் மூன்று சைவக் குரவர்களின் திருப்பதிகங்களை மீட்டு, நம்பியாண்டார் நம்பியின் மூலம் அவற்றை திருமுறைகளாகத் தொகுத்ததால் திருமுறைகண்ட சோழன் என்றும் அவர் அறியப்படுகிறார். 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் இயற்றியதாகக் கருதப்படும் ‘திருமுறைகண்ட புராணம்’ மேற்கண்ட நிகழ்வை விவரிக்கிறது. ஆயினும், நூலின் ஆசிரியர் திருமுறை மீட்ட சோழ மன்னரைத் தொடக்கத்தில் ‘ராசராச மன்னன் அபயகுலசேகரன்’ என்றும், இடையே ‘ராசராச மன்னன்’ என்றும், ‘குலசேகரன்’, ‘மன்னன்’ என்றும் பல பெயர்களால் குறிப்பிடுகிறார். நம்பியாண்டார் நம்பியின் காலத்தையும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனினும், திருப்பதிகங்களை மீட்டது முதலாம் ராஜராஜனே (985-1014), தொகுத்தது நம்பியாண்டார் நம்பியே என்ற கருத்து ஒரு சில அறிஞர்களைத் தவிர, அனைவராலும் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

‘திருமுறைகண்ட புராணம்’ தவிர, முதலாம் ராஜராஜன் திருப்பதிகங்களை மீட்டது குறித்துக் கல்வெட்டுச் சான்று போன்ற நம்பத்தகுந்த வரலாற்றுத் தரவுகள் ஏதும் இதுவரை இல்லை. இதுவே முடிவா? இல்லை.

பெருவுடையார் கோயில் ஓவியம்: தஞ்சை இராஜராஜீசுவரம் (பெருவுடையார் கோயில்) கருவறையின் திருச்சுற்றில் தீட்டப்பட்டிருக்கும் சோழர் காலச் சுவரோவியங்களை செப்டம்பர் 14இல் முனைவர் வேதாசலம், டி.எஸ்.சுப்ரமணியம் ஆகியோரோடு மீண்டும் ஆய்வு செய்தபோது, தில்லை ஆடவல்லானை ராஜராஜன் தனது மூன்று மனைவியருடன் வழிபடும் சுவரோவியத்தில் சுவடிகளை மீட்ட நிகழ்ச்சியை உறுதிசெய்யும் தரவுகளைக் கண்டேன். இச்சுவரோவியம், கருவறை திருச்சுற்றின் ஒன்பதாம் பிரிவில் மேற்குச் சுவரில் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில், பொன்வேய்ந்த சாலக் கூரையுடைய, பெரிய மரத்தூண்கனைத் தாங்கியிருக்கும் ஒரு மண்டபத்தில், கங்கை அமர்ந்திருக்கும் விரிசடை ஆடவல்லான் முயலகன் மீது ஆனந்தத் தாண்டவமாடுகிறார். சுற்றிலும், நந்தியின் மீது சாய்ந்து நிற்கும் உமை, சவத்தின் மீது நடனமாடும் காளி, காரைக்கால் அம்மையார் ஆகியோரோடு நடனத்தை வியந்து நோக்கும் பூதகணங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். முன்பிருக்கும் மண்டபத்தில், மிகவும் எளிமையான தோற்றத்துடன் இருக்கும் ராஜராஜன் தனது மூன்று மனைவியருடன் ஆடவல்லானை வழிபடுகின்றார். கிடைத்த அனைத்து ஓவியங்களிலும் ராஜராஜன் எளிமையான தோற்றத்திலேயே காண்பிக்கப்பட்டுள்ளார் என்பது சிறப்பு.

இவ்விரு மண்டபங்களின் அமைப்பும் கூரையின் வடிவமும் தில்லை ஆடவல்லான் கோயிலின் பொன்வேய்ந்த சிற்சபை, கனகசபைகளின் இன்றிருக்கும் வடிவ அமைப்பினை ஒத்திருக்கின்றன. ஆகையால், தில்லைக் கோயிலையே ஓவியத்தில் காட்டியுள்ளனர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவ்விரு மண்டபங்களைச் சுற்றியுள்ள பரப்பில், சில அந்தணர்கள் இடப்பக்கத்திலும், உயரதிகாரிகள் வலப்புறத்திலும் ஆண்டவனுக்கும் அரசனுக்கும் இணையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேற்புறப் பரப்பில், சிவனடியார்கள் இணையாக அமர்ந்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டும், அரசகுலப் பெண்டிர் எண்மர் தம்முள் வியந்தும் இருப்பது தெரிகிறது.

முன் பரப்பில் இணையாக இருவர், அவர் பின் குள்ளமாக ஒருவர், உயரம் குறைந்த இரு உருவங்களின் நடுவில் உயரமான ஒருவர், உயர்குலப் பெண்டிர் ஐவர் எனப் பலர் அரசருக்குக் கீழ் ஒரு வரிசையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரு வரிசைகளில் இருபதுக்கும் மேற்பட்டோர் திருவாயிலின் இரு பக்கங்களிலும் ஆடவல்லானின் அற்புத நடனத்தை வியந்து கையினை மேல்கூப்பி வணங்கியபடி குழுமியுள்ளனர். தொடர்ச்சியாக இருக்கும் இருபுற சிறு மடிப்புச் சுவரில், தில்லைக் கோயிலின் மதில் சுவர் காட்டப்பட்டுள்ளது. இடப்புறம் இருக்கும் பட்டைச் சுவரில், உன்னதமாக அலங்கரிக்கப்பட்ட அரசரது பட்டத்துக் குதிரையும், அதனைப் பராமரிக்கும் சேவகனும் கீழே உள்ளார்கள். நடுவில், தாழ் அடைக்கப்பட்ட கோயிலின் நுழைவாயிலும், அரசு சேவகர்களும் காணப்படுகின்றனர்.

மும்மூர்த்திகளின் திருமேனிகள், மற்றும் பலர்
மும்மூர்த்திகளின் திருமேனிகள், மற்றும் பலர்

உயரத்தில் பூமாலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அழகான மண்டபம் தீட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்குள், ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பொருட்களைக் கவனமாக வெண்பட்டுத் துணியினால் முழுவதுமாக மூடியுள்ளதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. குடுவைகளில் மங்கலப் பொருட்கள் கீழே வைக்கப்பட்டுள்ளன. இதனால், பீடத்தின் மீது உள்ளவை முக்கியம் வாய்ந்த புனிதப் பொருட்களாக இருக்க வேண்டும். வலப்புறம் உள்ள பட்டைச் சுவரில், அரசரின் பட்டத்து யானைகள் உள்ளன. அவற்றின் மீது பாகன்கள் அமர்ந்து வியப்புடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், பலர் வாத்திய இசையினை முழங்கி மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தவாறு காணப்படுகின்றனர். இவ்வனைத்து நிகழ்வுகளையும், ஆடவல்லானின் நடனத்தையும் வானத்திலிருந்து தேவர்களும் இருடிகளும் கண்டுகளிக்கின்றனர்.

ஓவியமும் புராண நிகழ்வுகளும்: இனி, இந்த ஓவியத்தில் திருமுறைகண்ட புராணத்தில் வரும் நிகழ்வுகளை உறுதிசெய்யும் காரணிகள் உள்ளனவா எனப் பார்ப்போம். இந்த ஓவியத்தில், தில்லை ஆடவல்லானுக்கு முன் ராஜராஜன் மலர்கொண்டு வழிபடுகிறான். இரு சபைகளின் மாறாத அமைப்பே இதற்குச் சான்று. மேலும், இந்த ஓவியத்தில் மன்னர் தனது மனைவியர், அதிகாரிகள், பரிவாரங்கள், பட்டத்து யானை, அரசரின் குதிரை, நடன - மங்கல வாத்தியங்கள் முழங்க வந்துள்ளது திருமுறைகண்ட புராணத்திலும் புனையப்பட்டுள்ளது. ஆடவல்லானின் வலப்புறம் இருக்கும் அந்தணர்கள், தில்லைவாழ் அந்தணர்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

மும்மூர்த்திகளின் திருமேனிகள்: ஆடவல்லானின் பாதங்களுக்கு மிக அருகில், மன்னருக்குக் கீழ் இணையாக இருவரும், அவர்கள் பின் உயரம் குறைந்த ஒருவர் நின்றிருக்க, பின் மூன்று உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மன்னர் முதல் அனைவரும் ஒரு சமனான நிலத்தின் மீது நின்றிருப்பதுபோல் காண்பிக்கப்பட, அனைத்து உருவங்களிலிருந்து வேறுபட்டு, பல வர்க்கங்களைக் கொண்ட ஒரு பீடத்தின் மீது இம்மூவரும் நிற்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஓவியம் சிதைந்திருந்தாலும், பீடத்தின் ஒரு பகுதி தெளிவாகத் தெரிகிறது. திருமேனிகளுக்கே பீடம் கொடுப்பது சிற்ப சாத்திர வழக்கம். எனவே, இவர்கள் மற்றவர்களைப் போன்று சாதாரண மானுடர்கள் அல்ல, சைவ மும்மூர்த்திகளின் திருமேனிகளே என வேறுபடுத்திக்காட்ட பீடம் கொடுக்கப்பட்டுள்ளது. திருமுறைகண்ட புராணத்திலும் மூவரின் திருமேனிகளை மன்னர் வீதிஉலா எடுப்பித்து, கோயிலினுள் தருவித்து, அறையினைத் திறக்க அனுமதி கோருகிறார் என்றே விவரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ராஜராஜன் மும்மூர்த்திகளின் திருமேனிகளை அதிகாரமாகக் காண்பித்து, திருப்பதிக ஓலைச் சுவடிகள் இருந்த அறையினைத் திறந்தார் என உணர்த்தவே இங்கு மும்மூர்த்திகளின் திருமேனிகளை, வேறெங்கும் இல்லாமல் ஆடவல்லானின் முன்பு ஓவியர் தீட்டியுள்ளார்.

திருப்பதிக ஓலைச்சுவடிகள் அறை: தில்லைக் கோயிலின் மதில் சுவர் வெளியே, மலர்மாலைகளினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மண்டபம் தீட்டப்பட்டுள்ளது என முன் விவரிக்கப்பட்டது. ஓவியத்தின் வடிவமைப்பினைக் கொண்டு நோக்குங்கால், இவ்வறை தில்லைக் கோயிலின் சுற்றுச்சுவருக்கு வெளியே கட்டப்பட்டுள்ளது. அவ்வறை மலர்மாலைகளினால் அலங்கரிக்கப்பட்டதிலிருந்து, ஒரு புனிதமான அறை என அறியலாம். இவ்வறையினுள், ஒரு பீடத்தில், ஒரு குவியலான பொருள் மிகவும் பத்திரமாக வெண்பட்டினால் மூடப்பட்டுள்ளது. முன்பிருக்கும் மங்கலப் பொருட்களும் அதன் புனிதத்தன்மையினை உறுதிசெய்கிறது. இந்தக் குறியீடுகள் அனைத்தையும் கொண்டு நோக்குங்கால், இந்த அறையே திருப்பதிக ஓலைச் சுவடிகள் இருந்த அறை என்றும் பீடத்தின் மீது வெண்பட்டினால் மூடப்பட்டிருப்பது திருப்பதிக ஓலைச் சுவடிகளே என்று உணர்தலே சாலச் சிறந்ததாகும்! ஆகவே, மேற்கூறிய அனைத்துக் காரணிகளும் தரவுகளும் இந்த ஓவியத்தில் காணப்படுவதால், ராஜராஜன், திருப்பதிகங்களை மீட்ட நிகழ்ச்சியினை ஆவணப்படுத்தவே தான் எழுப்பிய மகத்தான கோயிலில் மிகவும் பாதுகாப்பான கருவறையின் திருச்சுற்று வழியில், இந்த ஓவியத்தைத் தீட்டியுள்ளார் என்றும் திருப்பதிகங்களை மீட்டது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் அறிய முடிகிறது.

நிகரில்லா ராஜராஜன்: ராஜராஜன் தனது வாழ்நாளில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சியினை கோயிலின் மிகவும் பாதுகாப்பான இடத்தில் ஓவியமாக ஆவணப்படுத்தியுள்ளார். ஆனால், காலப்போக்கில் அந்த ஓவியங்கள் சிதிலமடைந்தன. நாயக்கர்கள் அதன் மீது தமதுஓவியங்களைத் தீட்டினர். ஆயினும், காலத்தின் விந்தையான வினையினால், இந்த ஓவியங்கள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து, ராஜராஜன் திருப்பதிகங்களை மீட்டதற்குச் சான்றாக நாம் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கின்றன. - பு.சு.ஸ்ரீராமன் கண்காணிப்புத் தொல்லியலாளர் (ஓய்வு) இந்தியத் தொல்லியல் துறை, தொடர்புக்கு: pssriraman@gmail.com

நன்றி: அருண் ராஜ், இயக்குநர், இந்தியத் தொல்லியியல் துறை, திருச்சி.

நவ. 3: ராஜராஜன் 1037- ஆவது ஐப்பசி சதய விழா

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in