

இந்தியாவின் குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் ஸ்ரீநாத் ராகவன். ராணுவ வரலாறுகளை எழுதுவதில் தனி முத்திரை பதித்தவர்; தமிழர். இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்களிப்பு, நேரு ஆட்சிக் காலத்தில் போரும் அமைதியும், 1971 வங்கதேச உருவாக்கம் தொடர்பான முக்கிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். தற்போது இந்தியக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்துவருகிறார். ராணுவத்தில் ஆறு வருடங்கள் பணிபுரிந்துவிட்டுப் பிறகு வரலாற்றாசிரியராக மாறியவர். சமீபத்தில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்புரையாற்றுவதற்காக வந்திருந்தவருடன் உரையாடினேன்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்திய ராணுவச் சிறப்புப் படை நடத்திய துல்லியமான தாக்குதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதுபோன்ற துல்லியமான தாக்குதல் புதிதல்ல. இதற்கு முன்னும் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சியிலும் இது போன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த முறை நடத்திய தாக்குதல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இந்திய அரசு வெளிப்படையாகத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவித்திருப்பதுதான். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கூடியிருக்கிறது.
மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததுமே பாகிஸ்தானுக்குச் சென்று வந்தார். பாகிஸ்தானுடைய உறவு வலுப்படும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், இது போன்ற தாக்குதல்கள் உறவைப் பாதிக்காதா?
கண்டிப்பாகப் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். பிரதமர் மோடி பதவியேற்பின்போதே நவாஸ் ஷெரீஃபை அழைத்திருந்தார். ஆனால், வெளியுறவுச் செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வியைச் சந்தித்தது. அதன் பின் ஓராண்டில் ஒன்றுமே நடக்கவில்லை. பாதுகாப்புச் செயலாளர்கள் சந்திப்பும் தோல்வியடைந்தது. அதன் பிறகு பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தன. கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுடைய உறவைப் பேணுவதில் உள்ள நம்முடைய கொள்கை தெளிவாகவில்லை. ஒன்று, பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். இல்லையென்றால், பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறிவிடுவோம். இதுபோல் வெளியுறவுக் கொள்கைகள் ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. பிரதமர் மோடி பாகிஸ்தானை அணுகுவதிலும் இதே பிரச்சினை தொடர்கிறது. உறவைப் பேணுவதில் இன்னும் தெளிவான கொள்கை வகுக்க வேண்டும்.
ஆரம்ப காலம் முதலே பாகிஸ்தானில் சீனா ஆதிக்கம் செலுத்திவருகிறது. சமீப காலங்களில் ரஷ்யாவும் பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. மேலும், பாகிஸ்தானில் சீனாவின் முதலீடுகளும் அதிகமாகிக்கொண்டே வருகின்றனவே?
பாகிஸ்தானில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்துவதற்கும் சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ரஷ்யாவுக்கு ஆப்கானிஸ்தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ரஷ்யாவில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது மிக அதிகமாகியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் ரஷ்யா இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஹெராயின் உற்பத்தி அதிகமாக இருப்பதால், அதைத் தடுப்பதற்காக பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள ரஷ்யா நினைக்கிறது. அதனால், ரஷ்யாவால் இந்தியாவுக்குப் பெரிய பிரச்சினை இருக்காது. ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்புத் துறையில் மிகப் பெரிய அளவுக்கு ஒப்பந்தம் நிகழ்ந்துள்ளது. ரஷ்யா பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவதால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
ஆனால், சீனா - பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்துவது போகப் போக இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறக்கூடும். 1962-ல் நடந்த சீனா - இந்தியா போருக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான உறவை சீனா வலுப்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பம் கொடுத்தது வரை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. அதுமட்டுல்லாமல், தற்போது இரண்டு முக்கியமான விஷயங்களில் பாகிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கவிருக்கிறது. ஒன்று, சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் இயங்கும் பிரிவினைவாதக் குழுக்களைத் தடுப்பதற்காக பாகிஸ்தானுடன் சீனா சேர்ந்து எடுத்துவரும் நடவடிக்கைகள். இரண்டு, ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு’என்ற திட்டம். இந்தத் திட்டத்தை மிகப் பெரிய பொருளாதார நடவடிக்கையாக சீனா கருதுகிறது. இதற்காக மிகப் பெரிய அளவுக்கு முதலீட்டைச் செய்துவருகிறது. தற்போதைய சூழ்நிலையில், தென் சீனக் கடல் வழியாகத்தான் இந்தியப் பெருங்கடலை அடைய முடியும். இந்தத் திட்டம் நிறைவேறினால், சீனா - பாகிஸ்தானுடைய நிலப்பரப்பு வழியாக இந்தியப் பெருங்கடலை அடையலாம். இதன் மூலம், மத்தியக் கிழக்கு நாடுகளுடன் வர்த்தகம் எளிதாகச் செய்ய முடியும். வர்த்தக அளவில் சீனாவுக்கு இது மிகப் பெரிய பயன் தரும். பாகிஸ்தானுடன் இந்தியா உறவை அணுகுவதில் சீனாவுக்கு மிகப் பெரிய பங்களிப்பு இருக்கும்.
துல்லியமான தாக்குதலுக்குப் பிறகு ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, தாக்குதலை இஸ்ரேலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். இஸ்ரேல் ராணுவம்போல் இந்திய ராணுவம் செயல்படுகிறது என்று கூறுகிறார். இஸ்ரேலின் பாதுகாப்பு மாதிரி இந்தியாவுக்குப் பொருந்துமா?
இஸ்ரேல் பாதுகாப்பு மாதிரி இந்தியாவுக்குக் கண்டிப்பாகப் பொருந்தாது. பாலஸ்தீனத்திடம் அணு ஆயுதம் இல்லை. மிகப் பெரிய ராணுவம் இல்லை. ஆனால், பாகிஸ்தானிடம் இது இரண்டுமே இருக்கிறது.
இந்தியாவுடைய ஒற்றுமை, பாதுகாப்பு என்று பேச்சு வரும்போதெல்லாம் படேல் புகழப்படுகிறார். நேரு மிகப் பெரிய அளவில் விமர்சிக்கப்படுகிறார். மேலும், நேருவுடைய அயலுறவுக் கொள்கைகள் மிகப் பெரிய அளவில் விமர்சிக்கப்படுகின்றனவே? ராணுவரீதியாக நேருவுடைய பங்களிப்பு எத்தகையவை?
எந்த அடிப்படையில் நேருவை விமர்சிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். நேருவால்தான் காஷ்மீர் பிரச்சினை. அவரால்தான் சீனாவிடம் நாம் அடிவாங்கிவிட்டோம் என்பது போன்ற விமர்சனங்கள் பொதுவாக உள்ளன. இவற்றில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. ஆனால், எந்தக் காலகட்டத்தில் இவை நிகழ்ந்தன என்பதைப் பார்க்க வேண்டும். நேருவை விமர்சிப்பவர்கள் அதைப் பார்க்க மறுக்கிறார்கள். மேலும், நேரு பிரதமராக இருந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் பெரிய அளவுக்கு இல்லை. அவர் நினைத்திருந்தால் ஜப்பான், இந்தோனேஷியா போல் ஒற்றைக் கட்சி நாடாக இந்தியாவை மாற்றியிருக்க முடியும். நேரு நினைத்திருந்தால், இந்தியாவில் மற்ற கட்சிகள் மேல் எழுந்து வராதவாறு ஒழித்துக் கட்டியிருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. நீண்ட கால அடிப்படையில் ஜனநாயகம் வேண்டும் என்று நினைத்தார். அது மட்டுமல்லாமல், படேல் தனியாக எதையும் சாதித்துவிடவில்லை. இந்திய அரசாங்கத்தின் கூட்டு முயற்சியால்தான் இந்தியாவை ஒருங்கிணைக்க முடிந்தது. ஒரு பக்கமாக இருந்து ஒருவரை அணுகினால் சரியான வரலாற்றுப் பார்வை ஏற்படாது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பார்க்கும்போது, அஹிம்சை என்பது மிகப் பெரிய அளவில் சுதந்திரம் கிடைப்பதில் பங்களிப்புச் செய்திருக்கிறது. ஆனால், இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களுடைய பங்களிப்பு அதிகம். உலகப் போருக்குப் பின்னர், இந்தியாவில் மதக் கலவரங்கள் அதிகமாகியிருக்கின்றன என்று சொல்கிறீர்கள்?
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததில், இரண்டாம் உலகப் போருக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில், ஆங்கிலேய அரசின் பக்கமாக 25 லட்சம் ராணுவ வீரர்கள் பங்கு பெற்றனர். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், அவர்கள் ராணுவத்தில் இணைந்து உலகப் போரில் பங்கு பெற்றார்கள். போரில் மகத்தான பங்களிப்பைத் தந்தால் அது இந்திய விடுதலைக்கு வழிவகுக்கும் என நம்பினார்கள். இந்தியாவின் சுதந்திரத்தில் அதற்கும் ஒரு பங்கிருக்கிறது. சுபாஷ் சந்திர போஸ் பற்றிப் பேசுகிறோம். 25,000 பேர் வரை அவருடைய இயக்கத்தில் பங்காற்றினார்கள். ஆனால், இந்திய ராணுவத்தில் பங்கேற்ற 25 லட்சம் ராணுவ வீரர்களைப் பற்றிப் பேச மறுக்கிறோம்.
நீங்கள் ராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறீர்கள். ஆனால், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (ஆப்ஸ்பா) நீங்கள் எதிர்ப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?
நான் ஆரம்பத்தில் ராணுவத்தில் பணிபுரிந்தபோது இதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால், வரலாற்றுத் துறை மாணவனாக மாறியபோது, சிறப்பு அதிகாரச் சட்டம் ராணுவத்துக்கே ஆபத்தாக இருப்பதாகப் புரிகிறது. ஆப்ஸ்பாவில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ராணுவ வீரர்களை விசாரிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. வன்புணர்வுச் செயல்களில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டதற்கான சான்றுகள் உள்ளன. சிபிஐ வழக்கு தொடர முகாந்திரம் உண்டு என்று அறிக்கை தந்தது. ஆனாலும் வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை. தற்போது ஆப்ஸ்பா முழுவதும் அரசியலாகிவிட்டது. எனவே, அதை நீக்கிவிடலாம்.
ஆசியாவில் இந்தியாவின் அதிகாரம் அதிகரித்துக்கொண்டேவருகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால், தற்போது பிலிப்பைன்ஸிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகியிருக்கிறது. வங்கதேசத்தில் சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது. இலங்கையில் சீனாவின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. தென் கிழக்கு ஆசியா முழுவதுமே சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதுபோல் தெரிகிறதே?
ஆசியாவில் ஒரே ஒரு அதிகார மையம் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகார இடைவெளி அதிகமாகியிருக்கிறது. பன்னாட்டு உறவுகள் என்பது போட்டித் தன்மை கொண்ட விளையாட்டு. அதில் ஒவ்வொரு நாடும் அவர்களது தனித்தன்மையைக் காண்பிக்கும். நாமும் அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.
- தேவராஜ், தொடர்புக்கு: devaraj.p@thehindutamil.co.in