ரிஷியின் கதை எந்த மொழியில் எழுதப்பட்டது?

ரிஷியின் கதை எந்த மொழியில் எழுதப்பட்டது?
Updated on
3 min read

பள்ளி நாட்களிலிருந்து அவர் என் நண்பர். அவருக்கு இப்போது தேசப்பற்று அதிகமாகிவிட்டது. இந்த தீபாவளியன்று அவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் வந்த வாழ்த்துப் படத்தில், ‘இந்த இனிப்பு ரிஷிக்காக’ என்ற குறிப்பு இடம்பெற்றிருந்தது. அன்றைய தினம்தான் பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி, ரிஷி சுனக்கைப் பிரதமராகத் தெரிவுசெய்திருந்தது. அதற்குத்தான் இனிப்பு. அவர் மனம் பெருமிதத்தில் பொங்கியது.

ரிஷியின் கதை: ரிஷி சுனக் பிரிட்டனில் பிறந்தவர். அந்நாட்டின் குடிநபர். அவருடைய பெற்றோர் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள். அவருடைய பாட்டனார் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர். இரண்டு தலைமுறைக்கு முந்தைய பந்தம் என்றாலும், ரிஷி இந்திய வம்சாவளியில் வந்தவர். மேலதிகமாக அவர் ஓர் இந்து. இவைதான் நண்பரின் பெருமிதத்துக்குக் காரணம்.

ரிஷி இந்த இடத்துக்கு எப்படி வந்தார்? அவர் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தார். பெரும் நிறுவனங்களில் பணியாற்றினார். 2015இல் அரசியலுக்கு வந்தார். நாடாளுமன்ற உறுப்பினரானார். 2020இல் நிதியமைச்சரானார். அதற்குப் பிறகு கட்சிக்கு வெளியேயும் அறியப்பட்டார். அவரது முன்னாள் சகா ஒருவர் ரிஷி ஓர் அறிவுஜீவி, ஆற்றலாளர், உழைப்பாளி என்று புகழ்ந்திருக்கிறார். ரிஷியின் கதை பிரிட்டன் மண்ணில், ஆங்கில மொழியில் எழுதப்பட்டது. இந்தியமண்ணிலோ, எந்த இந்திய மொழியிலுமோ அல்ல.

பிரிட்டன் வெள்ளையர்களின் நாடு; அவர்களின் மதம் கிறிஸ்தவம். கன்சர்வேடிவ் கட்சி, அயல் நாட்டவர்களின் குடியேற்றத்துக்கு எதிராகக் கடும் போக்கைக் கடைப்பிடிக்கிறது. எனினும் இனத்தால், நிறத்தால், மதத்தால் வேறுபட்ட ஒரு குடியேற்றக்காரரைத் தங்கள் பிரதமராக ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர்கள் பாராட்டுக்குரியவர்கள். நாம் ரிஷிக்கும் ஆங்கிலேயர்களுக்கும் வாழ்த்துச் சொல்லலாம். ஆனால், என் நண்பரைப் போல் இதைக் கொண்டாட வேண்டுமா? வேண்டும் என்கிறார்கள் ஒரு சாரார். அதற்கு மதம், அரசியல் என்ற இரண்டு காரணங்களை முன்வைக்கிறார்கள்.

மதம் - பெருமிதம்: ரிஷி தீபாவளிக்கு விளக்கேற்றினார், கோமாதாவை வணங்கினார், மணிக்கட்டில் சிவப்புக் கயிறு கட்டியிருக்கிறார். அந்த வகையில் அவர் ஒரு ‘சக இந்து’ என்பது பலருக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த இடத்தில் சிலர் ஒரு கேள்வியை எழுப்பினார்கள். ஒரு குடியேற்றக்காரரோ, ஒரு கிறிஸ்தவரோ, ஒரு இஸ்லாமியரோ, ஒரு தலித்தோ இந்தியாவுக்குத் தலைமை வகிக்க முடியுமா? இதற்குக் கொண்டாட்டக்காரர்களிடம் பதில் இருந்தது. ஜாகிர் உசேன், பக்ருதீன் அலி அகமது, கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் என்று பெயர்களை அடுக்கினார்கள். இவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்கள். அது ஓர் அலங்காரப் பதவி. அரசோச்சும் பதவியன்று. அதிகாரம் பிரதமர் நாற்காலியிலிருந்து பிறக்கிறது. அது இந்து மதத்தினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மன்மோகன் சிங் சீக்கியர்தானே, இந்து அல்லவே என்கிறார்கள் சிலர். சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். இரண்டு மதங்களுக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும் இந்து மதத்திலிருந்து கிளைத்ததுதான் சீக்கியம். அதன் மீது இந்துத்துவம் விரோதம் பாராட்டுவதில்லை.

அப்படியானால், சிறுபான்மை மதத்தினரும் தலித்துகளும் பழங்குடியினரும் இந்தியப் பிரதமராக முடியாதா? இதுவரை இல்லை என்பதுதான் பதில். கண்ணுக்கெட்டிய தூரத்தில் அது சாத்தியமில்லை என்பதும் நிதர்சனம். சில மாநிலங்களில் சிறுபான்மையினரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் முதலமைச்சர்களாகி இருக்கிறார்கள். முகமது கோயா, ஏ.கே.அந்தோணி, உம்மன் சாண்டி ஆகியோர் நாமறிந்த கேரள முதல்வர்கள். ஏ.ஆர்.அந்துலே மராட்டிய முதல்வராக இருந்தார். மு.கருணாநிதி ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தார். முன்னேறிய மாநிலங்களான இவற்றை இந்திய-மாதிரிகளாகப் பொதுமைப்படுத்த முடியாது.

தமது நாட்டில் சிறுபான்மை மதத்தினர் பிரதமர் ஆவதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவரே, ரிஷி பிரிட்டனின் பிரதமர் ஆனதைப் பாராட்டும் தார்மிகத் தகுதிபெற்றவர் ஆகிறார். ஒரு கட்சி அல்லது கூட்டணியை ஆளும்கட்சி ஆக்கும் சக்தி வாக்காளர்களுக்கு இருந்தாலும் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முடிவு செய்வது அந்தக் கட்சி அல்லது அளும் கூட்டணிதான். அந்த வகையில் பார்க்கும்போது சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சிக்குமே அப்படி ஒரு சிறுபான்மையினரை பிரதமராக்கும் தாராள குணம் இருக்கவிலை என்பதே உண்மை. எனவே குறிப்பிட்ட யாரையும் குத்திக்காட்டியோ குற்றம்சொல்லியோ இந்த விஷயத்தில் இங்கிலாந்தைப் பாராட்டிவிட முடியாது.

பழிக்குப் பழி?: இரண்டாவதாக, அரசியல். ‘நம்மை ஆண்டவர்களை இனி நம் குழந்தைகள் (மூலம்) ஆளுவோம்’ என்பது ஓர் எழுத்தாளரின் ட்வீட். ‘பிரிட்டிஷ் ராஜ்ஜியம் முதல் ரிஷி ராஜ்ஜியம்வரை’ என்பது ஓர் ஆங்கில ஊடகம் வழங்கிய தலைப்பு. காலனிய சுரண்டல் ஆட்சியையும், நாடாளுமன்ற மக்களாட்சியையும் எப்படி ஒரே கோட்டில் நிறுத்த இயலும்?

இது ரிஷியின் அரசியல் வெற்றி என்பது சரியா? ரிஷி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் அல்லர். 2019இல் அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானபோது, அவர் நிதியமைச்சர் ஆவார் என்றோ, பின்னாளில் பிரதமரும் ஆவார் என்றோ யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரிட்டன் இப்போது பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருக்கிறது. பணவீக்கமும் (10.1%) பற்றாக்குறையும் (40 பில்லியன் டாலர் - ரூ.3.3 லட்சம் கோடி) நாட்டின் கழுத்தை நெரிக்கின்றன. இரண்டு மாதங்களுக்குள் மூன்று பிரதமர்கள் மாறிவிட்டனர். இந்த அரசியல் மாற்றங்கள் மக்களின் பங்களிப்பு இல்லாமல் நடக்கின்றன. ஆகவே, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று தொழிற் கட்சி கோருகிறது. ரிஷி பிரதமரானது சட்டபூர்வமானது. ஆனால், அதற்கு மக்கள் அங்கீகாரம் இருக்கிறதா? அது அடுத்த தேர்தலில்தான் தெரியவரும். தொடர் விபத்துகளால் ஓர் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார் ரிஷி. அதை அரசியல் வெற்றி என்பதும், நாம் ஆங்கிலேயர்களைப் பழி தீர்த்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்வதும் கற்பிதங்கள், போலிப் பெருமிதங்கள்.

சவால்கள்: ரிஷியின் முன் சவால்கள் குவிந்து கிடக்கின்றன. இன்றைய பிரச்சினைகள் பலவற்றுக்கும் ஊற்றுக் கண்ணாகப் பார்க்கப்படுவதுஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது (பிரெக்ஸிட்). ஆனால், அதுதான் கன்சர்வேடிவ் கட்சியின் நிலைப்பாடு. உலகமயமாக்கம், கட்டற்ற வணிகம், அந்நியர் குடியேற்றம் முதலான கொள்கைகளுக்கெல்லாம் எதிரானது கன்சர்வேடிவ் கட்சி. இந்த மூடுண்ட அரங்கத்துக்குள் நின்றுகொண்டுதான் ரிஷி வட்டாட வேண்டும். இந்த இடத்தை அடைந்ததற்காகவும், இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யவும் நாம் ரிஷியை வாழ்த்துவோம். மாறாக, ரிஷியின் வெற்றியை இந்து-இந்திய வெற்றியாகக் கற்பித்துக்கொள்வது போலிப் பெருமிதமாகும். இந்த வெளிச்சம் என் நண்பருக்குக் கிடைக்க வேண்டும்; அதுதான் என் விருப்பம்! - மு.இராமனாதன் எழுத்தாளர், பொறியாளர்; தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in