

ஆளுநர் பதவியை அவமதிக்கும் வகையில் கேரள நிதியமைச்சர்கே.என்.பாலகோபால் பேசியதற்காக அவர் அமைச்சராகத் தொடர்வதற்கான ‘ஆளுநரின் விருப்ப’த்தைத் தான்நீக்கிக்கொண்டதாக கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அண்மையில் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது ஆளுநரின் அதிகாரம் குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளது. ஆளுநர் என்பவர் யார், அவருடைய அதிகாரங்கள் என்ன, அவருக்கு விருப்பமில்லை என்றால் ஒரு மாநில அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாதா என்பன போன்ற கேள்விகள் பேசுபொருள் ஆகியுள்ளன.
ஆளுநர் பதவியின் வரலாறு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1858இல் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவி அறிமுகப்படுத்தப்பட்டன. அவர்கள் பிரிட்டிஷ் முடியரசின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டனர். 1935 இந்திய அரசுச் சட்டத்தின்படி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாகாணங்களுக்குப் பலவகையான சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அமைச்சர்கள்/சட்டசபையின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பது அவற்றில் ஒன்று. அதேநேரம், ஆளுநருக்குச் சில சிறப்புப் பொறுப்புகளும் விருப்புரிமை அதிகாரங்களும் (Discretionary Powers) வழங்கப்பட்டிருந்தன; சுதந்திரத்துக்குப் பிறகும் ஆளுநர் பதவி தக்கவைக்கப்பட்டது. அரசமைப்புச் சட்ட அவையில் ஆளுநர் பதவி குறித்தும் அவருடைய அதிகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்களில் மாநிலங்களுக்கான ஆளுநர் மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநரின் கடமைகள், அதிகாரங்கள் உள்ளிட்டவையும் தீர்மானிக்கப்பட்டன.
ஆளுநர் - தகுதிகள், கடமைகள், அதிகாரங்கள்: ஆளுநராக நியமிக்கப்படுகிறவர் 35 வயதை நிறைவுசெய்த இந்தியக் குடிநபராக இருக்க வேண்டும். சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது. வேறு எந்த அரசுப் பதவியிலும் இருக்கக் கூடாது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆளுநர் என்பவர் மாநிலங்களுக்கான மத்திய அரசின் பிரதிநிதி. இதனால், ஒரு மாநிலத்தின் ஆளுநராக அதே மாநிலத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவதில்லை. மாநிலத்தில் அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடப்பதை உறுதிசெய்வதும் அரசமைப்பைப் பாதுகாப்பதுமே ஆளுநரின் முதன்மையான கடமை.
முதல்வர், அமைச்சர்கள், மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு உரிய நபர்களை நியமிப்பது ஆளுநர்தான். ஆனால், சட்டப்பேரவையில் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளவரை அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையிலேயே ஆளுநர் மேற்கூறிய நியமனங்களை மேற்கொள்ள முடியும். மாநில அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்தால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், இருப்பதிலேயே அதிக தொகுதிகளில் வென்ற கட்சிக்கு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். இது தவிர, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, சட்டங்களை (ஒருமுறை மட்டும்) மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்புவது அல்லது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்புவது, குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது / ரத்துசெய்வது உள்ளிட்ட அதிகாரங்களும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆளுநரின் அதிகாரம் எத்தகையது?: ஆளுநர் முதல்வரின் தலைமையிலான மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையிலேயே செயல்பட முடியும் என்று இந்திய அரசமைப்பு வரையறுத்தது. அதேநேரம், சில அரசமைப்புச் சட்டரீதியான தேவைகள் ஏற்பட்டால் ஆளுநர் தன் விருப்புரிமையின்படி செயல்பட முடியும் (Discretionary powers) என்று அரசமைப்பு கூறுகிறது. அரசமைப்பு நிர்ணய அவை விவாதங்களின்போதே இது குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இது மாநில அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்று கருதப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் மாநில அரசு நிர்வாகத்தில் ஆளுநர்கள் தலையிடுவதான குற்றச்சாட்டுகள் பலமுறை எழுந்துள்ளன. ஆளுநரின் ‘விருப்புரிமை அதிகாரம்’ எத்தகையது என்பதை வரையறுக்க மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளன. 1974இல் ஷம்ஷேர் சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில் “நன்கு அறியப்பட்ட சில விதிவிலக்குகளைத் தவிர அமைச்சர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே குடியரசுத் தலைவரும் ஆளுநரும் அரசமைப்புச் சட்டம் தமக்குத் தந்துள்ள அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2016இல் ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு “முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையிலேயே ஆளுநர் சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவோ தள்ளிவைக்கவோ கலைக்கவோ முடியும்” என்று தீர்ப்பளித்தது.
அரசமைப்பின் 164 ஆம் கூறின்படி ஆளுநர் முதல்வரையும் முதல்வரின் ஆலோசனையின் அடிப்படையில் அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும் என்றும் ‘ஆளுநரின் விருப்பம்’ (Pleasure of the Governor) இருக்கும்போது அமைச்சர்கள் பதவி வகிக்க முடியும் என்றும் கூறுகிறது. ஆனால், முதல்வரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அமைச்சர்களை ஆளுநர் நியமிக்க முடியும் என்பதால் ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதோ நீக்கப்படுவதோ முதல்வரின் விருப்பத்தை பொறுத்து மட்டுமே அமைகிறது. எனவே, ஆளுநர் தன்னிச்சையாக மாநில அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது. அமைச்சர்கள் தவறு செய்தால் முதல்வரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். - தொகுப்பு: கோபால்