Published : 02 Nov 2022 06:51 AM
Last Updated : 02 Nov 2022 06:51 AM

21ஆம் நூற்றாண்டில் கல்வியின் திசை...

தமிழகத்துக்கான புதிய கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்பு நடந்துள்ளது. மற்றொருபுறம் குழந்தைகள் இல்லை என அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன. எங்கே போனார்கள் குழந்தைகள்? தனியார் பள்ளிகளை நோக்கி, சிபிஎஸ்இ பள்ளிகளை நோக்கி. எந்தத் தேர்வுக்குச் சென்றாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதுதான் காரணம். சமச்சீர்க் கல்வி பல மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தாலும் பெற்றோர் அதைப் புரிந்துகொள்ளவில்லை. சமமான, தரமான, கட்டாய, இலவசக் கல்வியைக் கொடுக்காமல் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க இயலாது. சமூக நீதியை நிலைநிறுத்த இயலாது.

எப்படிப்பட்ட கல்வி வேண்டும்?: 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பங்கள் தினமும் மாறிக்கொண்டிருக்கின்றன. இருந்த வேலைகள் இல்லாமல் போகின்றன; புதிய வேலைகள் உருவாகின்றன. இன்று பள்ளியில் சேரும் குழந்தை 15-16 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரியிலிருந்து வெளிவரும்போது எத்தகைய வேலைவாய்ப்புகள் இருக்கும் என இப்போது கணிக்க இயலாது. எனவே, 21ஆம் நூற்றாண்டுக்கான கல்விக்குச் சில திறன்களை வளர்ப்பது அடிப்படையாக முன்வைக்கப்படுகிறது; அவை:

1. கருத்துப் பரிமாற்றத் திறன்; 2. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன்; 3. சமூகத்தில் பங்கேற்கும் திறன்; 4. சுற்றுச்சூழல் குறித்த அறிவுத் திறன்; 5. தொழில்நுட்பத் திறன்; 6. ஒருவருக்கொருவர் உதவும் கூட்டு செயல்பாட்டுத் திறன். நம் பாடத்திட்டத்தின் மூலம் பள்ளிகளில் இத்திறன்கள் வளர்க்கப்பட வேண்டும். வரலாறு, புவியியல், கணிதம், அறிவியலுடன் இத்திறன்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையின் ‘நிலைத்த வளர்ச்சி இலக்கு’ பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு, காலநிலை மாற்றம், உழைப்பின் கண்ணியம், அறிவியல் மனப்பான்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவை பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் இன்று பலவிதமான பாடத்திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதுவே ஏற்றத்தாழ்வுக்கு அடிப்படையாக உள்ளது. இந்நிலை அகற்றப்பட, பள்ளிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டு தரமான ஒரே கல்வி வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சியும் போதுமான தரத்தில் இல்லை. ஆசிரியர்களுக்கு மறுபயிற்சிகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திறன் பரிசீலனை ஆகியவை நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் இல்லை எனப் பள்ளிகளை மூடுவதற்குப் பதிலாக, கிராமப்புறங்களில் நகர்ப்புறக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், மக்களைக் கிராமங்களை நோக்கித் திருப்ப முடியும். குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக உள்ள பல பள்ளிகளில் மக்கள் முயற்சியால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தரமான கல்வி கிடைத்தால் பெற்றோர் நம்பிக்கையுடன் குழந்தைகளை அனுப்புவர். இதற்கு எதிர்ப்பு வரும். ஆனால், மாநில அரசு உறுதியாக இருந்தால் அனைத்துப் பள்ளிகளையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும். நிர்வாகக் குழுக்களில் இப்போதுள்ள உரிமையாளர்கள் இருக்கலாம். ஆனால், ஊதியத்தை அரசு கொடுக்க வேண்டும். முழுக் கட்டுப்பாடும் கல்வித் துறையிடம் இருக்கும். தரமான கல்வி அனைவருக்கும் வழங்கப்படும். 20 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியிருக்கும். ஆசிரியர்களுக்குத் தரமான பயிற்சியும், சரியான ஊதியமும், தொடர் திறன் வளர்ப்பும் இருந்தால் சமுதாயம் உயரும் மக்கள் மகிழ்ச்சியுடன் நிதியளிப்பார்கள். ஒரு புதிய ‘தமிழக மாதிரி’ நிலைநாட்டப்படும். தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை இதற்கு வழிவகுக்க வேண்டும். - தே.தாமஸ் பிராங்கோ, தொடர்புக்கு: ngcfranco@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x