

தமிழக உள்ளாட்சிகளின் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்பான இரண்டு புதிய அத்தியாயங்கள் இன்று (2022 நவம்பர் 1) தொடங்குகின்றன. ‘உள்ளாட்சி தினம்’ கொண்டாட்டம், நகர்ப்புற உள்ளாட்சிகளில் ‘வார்டு குழு’, ‘பகுதிக் குழு’ செயலாக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் இன்று அரங்கேறுகின்றன. தமிழக மக்கள் இதற்காகப் பெருமைப்பட வேண்டும்.
தமிழ் மண்ணின் பாரம்பரியப் பண்பாட்டுப் பெருமைகளில் உள்ளாட்சிகளும் ஒன்று. வரலாற்றை உற்றுநோக்கினால், அந்தந்தக் காலச் சூழல்களுக்கேற்ப நாட்டை ஆள்வதற்கான ஆட்சியியல் தத்துவங்கள் மாறியிருப்பதும், அதற்கேற்றவாறு ஆளும் அரசுகள் மாறியிருப்பதும் தெரியவரும். ஆனால், உள்ளூர் நிர்வாகத்தினை அந்தந்த ஊரில் வாழும் உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளே மேற்கொள்ளுதல் என்ற தத்துவம் சங்க காலம் தொடங்கி இன்றுவரை மாறவே இல்லை. மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இந்த நிர்வாகமே நாட்டு நிர்வாகத்துக்கான அடிப்படை; மக்களாட்சியின் ஆணிவேராகத் திகழ்பவை உள்ளாட்சி அமைப்புகளே.
திமுக அரசு பதவியேற்றதிலிருந்து உள்ளாட்சிகளுக்குப் புதுவெளிச்சம் பாய்ந்திருக்கிறது. நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி, மக்களாட்சித் தத்துவங்களுக்கு முரணாக அரசு அலுவலர்கள் கையில் நீண்ட காலமாகத் தேங்கி நின்ற உள்ளூர் நிர்வாக அதிகாரங்களை மீட்டு, மீண்டும் மக்கள் பிரதிநிதிகளிடமே ஒப்படைத்தது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவர்களுக்கு உற்சாகமூட்டியது, உள்ளாட்சிகளில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள வழிவகுத்தது, ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டங்களை ஆறு முறை நடத்திட ஆணையிட்டது உள்ளிட்ட பல ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது.
உள்ளாட்சிகள் தினம்: உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய அரசமைப்பின் 73, 74ஆவது திருத்தங்கள் 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று செயல்பாட்டுக்கு வந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசால் ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ‘தேசிய பஞ்சாயத்து ராஜ்’ தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அரசமைப்புத் திருத்தம் என்பது ஊரகம், நகர்ப்புறம் ஆகிய இரண்டையுமே உள்ளடக்கியதுதான். ஆதலால், உள்ளாட்சிகளின் ஒரு பிரிவான பஞ்சாயத்தில் மட்டுமே விழா கொண்டாடப்படுவது பொருத்தமானது அல்ல.
இந்நிலையில், உள்ளாட்சியில் செயல்படுத்தப்படும் திட்டச் செயலாக்கம் குறித்த ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், சாதனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மக்கள் பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் தமிழகத்தில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் தேதி ‘உள்ளாட்சிகள் தினம்’ கொண்டாடப்படும் என முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இங்கு உள்ளாட்சி என்பது இரண்டு அமைப்புக்களுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இன்று ‘உள்ளாட்சிகள் தினம்’ இரண்டு அமைப்புக்களிலுமே கொண்டாடப்படுகிறது. மக்களோடு நேரடித் தொடர்பில் செயல்படும் உள்ளாட்சிகளில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் இந்த முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்கது.
வார்டு குழு - பகுதிக் குழுக்கள்: இந்திய அரசமைப்பின் 73, 74 திருத்தங்களின்படி அரசமைப்புக் கூறு 243-Aஇன்படி ஒவ்வொரு ஊராட்சியிலும் ‘கிராம சபை’ அமைக்கப்படவும், கூறு 243-Sஇன்படி ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு குழுக்கள் (Ward committee) அமைக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது. 1994ஆம் ஆண்டின் ஊராட்சிகள் சட்டப்படி தமிழ்நாட்டில் ‘கிராம சபை’ 1996ஆம் ஆண்டிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனாலும் அதே காலகட்டத்தில் அரசமைப்பு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் ‘நகர்ப்புற உள்ளாட்சி வார்டு குழு’ இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
தற்போது உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சியிலும் ‘வார்டு குழுக்கள்’ - பகுதிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட அரசிதழ்களில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இக்குழுக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தந்த வார்டு பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், அந்தந்த வார்டு பகுதியில் நடைபெறும் அரசின் அனைத்துத் துறைத் திட்டங்களினால் பயன்பெற்ற பயனாளிகள் பட்டியல், உள்ளாட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் உள்ள நிலுவையாளர்களின் பட்டியல், அந்தப் பகுதியில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்துப் மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் விவரம் ஆகியவை இக்கூட்டத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இக்குழுக்களின் முதல் கூட்டம் இன்று (நவம்பர் 1)தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. பல்லாவரம் நகராட்சி வார்டு குழுக் கூட்டத்தில் முதல்வரே நேரில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களைத் தேடி வரும் நிர்வாகம்: தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளின் வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். மிக விரைவாக வளர்ந்துவரும் தன்மைகொண்டவை நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகள். இங்கு வாழும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பல குறைபாடுகளும் புகார்களும் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை, தேவைகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடமும் அலுவலர்களிடமும் கொண்டுசேர்ப்பதிலும் தீர்வு காண்பதிலும் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கின்றனர். அதேபோலத் தங்கள் பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து அறிந்துகொள்ளவும் போதிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்நிலையில் நிர்வாகம் ‘மக்களைத் தேடி’ வரும் நடைமுறையாக வார்டு குழுக்களும் பகுதிக் குழுக்களும் செயல்படுவது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவும் மக்கள் கோரிக்கைகள் குறித்த விவரங்களை அவர்கள் அறிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. அரசமைப்புக் கூறுகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு வார்டு குழுக்கள் அமைக்கப்பட்டதை வரவேற்போம். இந்த நேரத்தில் அரசமைப்புக் கூறு 243-ZDஇன்படியும் 1994இல் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 241இன்படியும் வழிவகை செய்யப்பட்ட ‘மாவட்டத் திட்டக் குழுக்கள்’ இன்னும் செயல்முறைக்கு வரவில்லை என்பது கவனத்துக்கு வருகிறது. அவையும் விரைவில் செயல்பாட்டுக்குவரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். - ஜெயபால் இரத்தினம், தொடர்புக்கு: jayabalrathinam@gmail.com