

சமீபத்தில் உலக அளவில் வெளியான பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலை ‘அபாய’க் கட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள 121 நாடுகளில், இந்தியாவின் இடம் 107. இந்த அறிக்கையால் மத்திய அரசு கவலைகொண்டு, உணவுப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தவில்லை. மாறாக, அறிக்கையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.
நரேந்திர மோடி பதவியேற்ற 2014-க்குப் பிறகான எட்டரை ஆண்டுகளில் பட்டினி கிடக்கும் (மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள) இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருகிறது; உணவுக் கையிருப்பும் குறைந்துவருகிறது. பணவீக்கத்தால் விலைவாசியோ ஏற்றத்தில் பாய்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2014இல் ரூ.62; இப்போது ரூ.82. இவற்றுக்கும் பட்டினிக்கும் தொடர்பு இருக்கிறதல்லவா? கரோனா காலத்தில் ஏற்பட்ட வாழ்க்கைத்தர வீழ்ச்சியிலிருந்து மீள மக்கள் தாங்களேதான் போராடிவருகிறார்கள்.
காலனியப் பஞ்சங்கள்: வரலாற்றில் இயற்கையாக ஏற்பட்ட பஞ்சம், பட்டினியைவிட ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பஞ்சங்களே அதிகம். காலனி ஆட்சிக் காலத்தில் அடுத்தடுத்துப் பஞ்சங்கள் ஏற்பட்டன. வேளாண்மையின் அடிப்படையான நீர்ப்பாசனத்தைப் புறக்கணித்த காலனிய அரசு, லங்காஷையரின் ஆலைகளுக்காகப் பருத்தியும் அவுரியும் பயிரிட இந்திய விவசாயிகளைக் கட்டாயப்படுத்தியது. அதன் காரணமாக உணவு தானியங்கள் பயிரிடும் நிலப்பரப்புக் குறைந்தாலும் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் பஞ்சங்கள் தொடர்கதையாகின. கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் கீழ் 1783, 1792, 1807, 1823, 1833, 1854 ஆகிய ஆண்டுகளில் மதராஸ் மாகாணத்தில் பஞ்சங்கள் ஏற்பட்டன. 1858இல் விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்த பிறகும் 1866-67ஆம் ஆண்டுகளில் 7ஆவது பஞ்சம் தாக்கியது.
பசிப்பிணி நீக்கியோர்: இந்தப் பஞ்சங்கள் எல்லாவற்றையும்விடக் கொடியதாகத் ‘தாது வருடத்துப் பஞ்சம்’ வந்துசேர்ந்தது. பட்டினி கிடந்த மக்களுக்குக் காலனிய அரசு கஞ்சித்தொட்டிகளைத் திறந்தது; கிறித்துவ மிஷனரிகளும் திருவாவடுதுறை ஆதீனமும் பஞ்ச நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 40 லட்சம் மக்களைப் பலிகொண்ட இந்தப் பஞ்சம் நூற்றாண்டு தாண்டியும் கொடுங்கனவாக மக்களின் நினைவுகளிலும் நாட்டுப்புறப் பாடல்களிலும் தொடர்கிறது. பஞ்ச காலத்தில் சாதி இந்துக்களுக்கு சாதி அமைப்புகள் கட்டிய தர்மச் சத்திரங்களும் ஒடுக்கப்பட்ட பிற சாதி மக்களுக்குக் காலனிய அரசின் கஞ்சித்தொட்டியும் எனப் பஞ்ச காலத்திலும் சாதி பல்லைக் காட்டிய ‘சிறப்புடையது’ நம் வரலாறு. பசியும் பட்டினியும் காலம்தோறும் நம் மக்களைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. சிறுபசி, உறுபசி, அழிபசி, அடங்காப்பசி, ஆற்றாப்பசி, கொல்பசி, கொலைப்பசி எனப் பசியைப் பாடிய இலக்கியமாகச் சங்க இலக்கியத்தைச் சித்தரிப்பார் ஆர்.பாலகிருஷ்ணன் (‘சங்கச்சுரங்கம்-முதலாம் பத்து’). பசியை அனுபவித்த ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலின் வெளிப்பாடே சங்கம் என்கிறார் பாலகிருஷ்ணன்.
சங்க காலம் தாண்டி காப்பிய காலத்திலும் நீடித்த பசிப்பிணியைப் போக்க மணிமேகலை வருகிறார். மணிபல்லவத் தீவில் தீவதிலகையின் வழிகாட்டுதலில் அமுதசுரபியைப் பெற்று வந்த மணிமேகலை, புகார் நகரம் வந்து மக்களின் பசி போக்குகிறார். பின்வந்த காலத்தில் வடலூரில் என்றுமே அணையா அடுப்பினை மூட்டி உணவளித்தார் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலார். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்றும் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்றும் சோற்றால் அடைமொழி தரும் நிலப்பரப்பாகத் தமிழ்நிலம் இருந்துள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
நவீன தமிழகம்: 1943இல் வங்கத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் இரக்கமற்ற கொள்கைகளால் ஏற்பட்ட கொடிய பஞ்சம் லட்சக்கணக்கான மக்களைப் பட்டினியால் கொன்றழித்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் பட்டினி நம்மைத் துரத்துவது நிற்கவே இல்லை. பசியைப் பிணி என அடையாளப்படுத்திய தமிழ்ச் சமூகம் பட்டினிக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ்நாட்டில் 1956இல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ‘ஊர் ஊராக வந்து மதிய உணவுத் திட்டத்துக்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்’ என்று அப்போது காமராஜர் பேசினார். அதுவே பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக மாறியது. மு.கருணாநிதியின் ஆட்சியில் முட்டையுடன் கூடிய சத்துணவாக மாறி இன்று மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காலை உணவுடன் பரிணமித்துள்ளது.
‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்/ பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்’ என்பது வள்ளுவன் வாக்கு. ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்பது பாரதியின் குரல்; அதையும் தாண்டி ‘தனியொருவனுக் குணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம்’ என்றும் கொந்தளித்தவன் அவன். உணவுப் பாதுகாப்பைக் கவனிப்பதும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதும் உலகப் பட்டினிக் குறியீட்டுக் கணக்குவழக்கில் உள்ள பிழைகளைக் கவனிப்பதைவிடவும் முக்கியமானது என்பதை ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ‘ஆதரவற்ற ஒருவரின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ, சமயத்திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது’ என்ற சுவாமி விவேகானந்தரின் குரல் இப்போது அசரீரி போல ஒலிக்கிறது. - ச.தமிழ்ச்செல்வன், தொடர்புக்கு: tamizh53@gmail.com