

இந்த ஆண்டு மான் புக்கர் பரிசு இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட எழுத்தாளர் ஷெஹன் கருணதிலகவின் ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்தா’ (The Seven Moons of Maali Almeida) என்னும் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஷெஹன் கருணதிலக இலங்கையில் பிறந்தவர். கொழும்பு, நியூசிலாந்து ஆகிய இடங்களில் கற்றவர். எழுத்தாளராக, ஒளிப்படக் கலைஞராக லண்டன், ஆம்ஸ்டர்டாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பணியாற்றியவர். இவருடைய முதல் நாவல் ‘சைனாமேன்’ காமன்வெல்த் விருது பெற்றது. அமெரிக்கப் பத்திரிகைகள் பலவற்றில் கதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
இடைப்பட்ட உலகம்: பரிசு பெறும் இந்நாவல் ஏற்கெனவே இந்தியாவில் ‘சாட்ஸ் வித் தி டெட்’ (Chats with the Dead) என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. இந்நாவல் இதற்கு முன் 2017இல் இதே பரிசைப் பெற்ற ஜார்ஜ் சாண்டர்ஸின் ‘லிங்கன் இன் த பார்டோ’ (Lincoln in the Bardo) என்கிற நாவலை நினைவுபடுத்துகிறது. இரண்டு நாவல்களிலுமே கதை ஓர் அமானுஷ்ய தளத்திற்குச் செல்கிறது. ஆயினும் இரண்டுக்கும் எண்ணற்ற வேறுபாடுகளும் இருக்கின்றன. சாண்டர்ஸின் நாவலில் கதையின் ஒரு பகுதி மட்டுமே ‘பார்டோ’ என்னும் அமானுஷ்ய வெளியில் இடம்பெறுகிறது. ஆனால், மாலி அல்மெய்தாவின் ஏழு நிலாக்கள் முழுவதுமே ‘இடைப்பட்ட உல’கில் (In Between) என்னும் அமானுஷ்யக் கற்பனை வெளியில் சஞ்சரிக்கிறது. இடைப்பட்ட உலகு என்பது ஆவி உலகம். பேரொளியில் கலக்கும் முன்னர் இறந்தவர்களின் ஆவி ஓர் இடைப்பட்ட உலகில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை வாசம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் இறந்தவருக்குப் பூவுலக வாழ்க்கை நினைவுக்கு வரும். சில நிபந்தனைகளோடு பூமியில் இன்னும் வாழ்ந்துவரும் சிலரோடு தொடர்புகொள்ளலாம்.
ஆவிகளின் நகைச்சுவை: பேரொளியில் கலந்துவிட்டால் பூவுலக வாழ்க்கை முற்றிலுமாக மறக்கப்பட்டுவிடும். நாவலின் தொடக்கத்தில் கதாநாயகன் மாலி அல்மெய்தா இடைப்பட்ட உலகில் கண்விழிக்கிறான். அவனுக்குத் தான் பிறந்த சூழல் நினைவுக்கு வராததுபோல், தான் இறந்த சூழலும் நினைவுக்கு வரவில்லை. ஏதோ ஒரு மனப்பிறழ்வில் இருப்பதுபோல் நினைக்கிறான். சற்று நேரத்தில் தன் யதார்த்த வாழ்க்கையைத் தொடரலாம் என்று நினைக்கிறான். பின்னர்தான் தான் உயிரற்ற ஓர் ஆவி என்று அவனுக்குத் தெரியவருகிறது. மெல்லமெல்ல அந்த இடைப்பட்ட உலகம் அவனுக்குப் பரிச்சயமாகிறது. அது ஏதோ ஒரு வரி வசூலிக்கும் இடம்போல் தோன்றுகிறது. அவனைச் சுற்றி ஏராளமான ஆவிகள் அலைகின்றன. விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு முண்டியடித்துக்கொண்டு போகிறார்கள். விவரங்கள் கேட்கும் பெண் - அவரும் ஓர் ஆவிதான் - கண்ணாடிச் சன்னலுக்குப் பின் இருக்கிறார். பொறுமை காக்கச் சொல்கிறார்.
“முண்டியடிக்க வேண்டாம். எல்லாருக்கும் ஒரு காரணமிருக்கும். நான் மட்டும் சாக வேண்டும் என்று விரும்பினேனா? என்னைச் சுட்டுக் கொல்லும்போது எட்டு, பத்து வயதுகளில் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள். என்ன செய்வது. புகார் அளிப்பதில் பயனில்லை. ஆகவே, அவசரப்பட வேண்டாம். எங்களிடம் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது” என அந்தப் பெண் கதாபாத்திரம் சொல்கிறது. பின்னர் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்து அவர் சொல்கிறார்: “உங்கள் அனைவருக்கும் ஏழு நிலா நேரம் (ஒரு வாரம்) கொடுக்கப்பட்டிருக்கிறது”.
அல்மெய்தா உயிரோடு பூமியில் இருந்தபோது பிரபலமான ஒளிப்படக் கலைஞனாக வலம்வந்தவன். இப்போது அவனுக்குக் கிடைத்த ஏழு நாட்களில், அவன் எப்போது, யாரால், எதற்காகக் கொல்லப்பட்டான் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாகத் தன் பாதுகாப்பில் வைத்திருந்த அரிய ஒளிப்படங்கள் என்னவாகின என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அரசியல் உலகில் அவை பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆவியாக இருப்பதால் அவனால் நினைத்ததைச் சாதிக்க முடியாது. இருப்பினும், இடைப்பட்ட உலகில் மந்திரவாதிகளின் ஆவிகளும் பேய்களும் பூதங்களும் இருக்கின்றன. அவை அவனுக்கு உதவ முன்வருகின்றன. இப்படிப் போகிறது கதை.
தத்துவ விசாரம்: வாழ்க்கையைப் பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ‘‘நீ சடலங்களைப் பார்த்திருக்கிறாய். மற்றவர்களைவிட அதிகமாகவே பார்த்திருக்கிறாய். அவர்களின் ஆன்மாக்கள் எங்கு போகின்றன என்பது உனக்குத் தெரியும். எரியும் விளக்கின் சுவாலை மீது ஊதினால் அந்தச் சுவாலை எங்கு போகுமோ அந்த இடத்தில் - நீ ஒரு வார்த்தை பேசினால் அந்த வார்த்தை எங்கு போய் மறையுமோ அந்த இடத்தில்தான் ஆன்மாக்களும் போய் மறையும். கிளிநொச்சியில் கற்களுக்குக் கீழ் புதைக்கப்பட்ட தாயும் மகளும், மலாபேவில் கார் டயர்களில் வைத்துக் கொளுத்தப்பட்ட பத்து மாணவர்களும், வயிற்றைக் கிழித்து மரத்தில் தொங்கவிடப்பட்ட பண்ணையாரும் எங்கும் போகவில்லை. அவர்கள் இருந்தார்கள். பின்னர் அவர்கள் இல்லை. அவ்வளவுதான். திரி முழுவதும் எரிந்த பின் மெழுகுவத்தி இல்லாமல் போவதுபோல்தான் நாம் அனைவரும்.”
இலங்கையில் மீண்டும் அமைதி நிலவ வேண்டும் என்று ஷெஹன் கருணதிலக இந்நாவலில் விரும்புகிறார். அதே வேளையில், அங்கு நடந்த படுகொலைகளுக்கு யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சொல்வதைத் தவிர்த்திருக்கிறார்.
ஒவ்வொரு முறை இந்த விருது அறிவிக்கப்பட்ட பின் வேறொரு நாவலைச் சுட்டிக்காட்டி, இதைவிட அதுவே பரிசுக்குப் பெரிதும் தகுதிவாய்ந்தது என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்நாவலுக்கு அது போன்றவிமர்சனம் இதுவரை வராமலிருப்பதே இந்நாவலின் வெற்றிக்குச் சான்று.
- மொழிபெயர்ப்பாளர், புதுவைப் பல்கலைக்கழக பிரெஞ்சுத் துறை முன்னாள் தலைவர். தொடர்புக்கு: srakichena@gmail.com