

பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து உலகம் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் சூழலில், அதிகபட்சப் பாதிப்புக்கு ஆளான முறைசாராத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை குறித்த ஓர் ஆய்வை அக்டோபர் 5 முதல் 11ஆம் தேதிவரை நடத்தினோம். கரோனா கால மருத்துவச் செலவு எவ்வளவு? பழைய வருவாய் நிலைக்கு மீண்டும் வந்துசேர்ந்துவிட்டார்களா? பெருந்தொற்றுக் காலத்தில் வாங்கிய கடன்கள் எவ்வளவு? வட்டிச் சுமை என்ன? வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த எவ்வளவு காலம் ஆகும்? கல்வி, தொழில், வருவாய் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் கடன்சுமையிலும் பிரதிபலிக்கின்றனவா என்பது உள்ளிட்ட கேள்விகளை மையமாகக் கொண்டு ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் ஆகிய நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடன்சுமையும் வருவாயும்: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரின் மொத்த சராசரிக் கடன்சுமை 58.81% அதிகரித்துள்ளது. பெருந்தொற்றுக்கு முன், நபர் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.1,06,000 ஆக இருந்த கடன், ரூ.1,80,000 ஆக அதிகரித்துள்ளது. கடன் சுமை 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 73.07%, 30-40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 54.61%, 40-50 வயது தொழிலாளர்களுக்கு 70.82% உயர்ந்துள்ளது. வருவாயின் அடிப்படையில் அனைவரையும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தினோம். மாத வருமானம் ரூ.10,000-க்குக் கீழ் உள்ளோரின் சராசரிக் கடன் சுமை 53.47% கூடியுள்ளது. ரூ.10,000-15,000 மாத வருமானம் ஈட்டுவோரின் கடன், முக்கால் பங்கு (74.96%) அதிகரித்திருக்கிறது. ரூ.15,000-20,000 வருவாய் ஈட்டுவோரின் கடன் பளு 51.01% கூடியுள்ளது.
ஓர் ஒப்பீடு: வருமானம் குறித்த கேள்விக்கு, எழுத்தறிவு இல்லாத முறைசாராத் தொழிலாளர்கள், கரோனா காலத்துக்கு முன் பெற்றுவந்த வருவாய் நிலையை இன்னும் பெறவில்லை என்றனர். தொடக்க நிலைக் கல்வி பெற்றவர்களில் 23.3% பேர் மட்டுமே பழைய வருமானம் கிடைப்பதாகக் கூறினர். பத்தாம் வகுப்புவரை படித்தவர்களில் 30% பேர் தங்களின் முந்தைய வருவாயை எட்டிவிட்டதாகக் கூறினர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் இந்த இரண்டு பிரிவினரில் அனைவரும் (100%) பழைய வருமானத்தை அடைந்துவிட்டதாகக் கூறினர். பெருந்தொற்றுப் பாதிப்பிலிருந்து கல்வி நிலைக்குத் தக்கவாறு விரைவில் மீண்டெழ முடிகிறது என்பது இதன்மூலம் தெரியவருகிறது.
அதிகரித்த வட்டிச் சுமை: நண்பர்கள், உறவினர்கள், பணியிடங்கள், கந்துவட்டிக்காரர்கள், சுய உதவிக் குழுக்கள் வழி சிறுகடன் எனப் பல்வேறு வகைகளில் முறைசாராத் தொழிலாளர்கள் கடன் வாங்குகிறார்கள். இவர்களில் 38% நபர்களின் மாத வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு (ரூ.2,000) வட்டிக்குச் சென்றுவிடுகிறது. ரூ.2,000-3,000 வரை மாதாந்திர வட்டி செலுத்திவரும் நிலையில் உள்ளவர்கள் 53%. நண்பர்கள், உறவினர்களிடம் கடன் பெற்றவர்கள் 15% மட்டுமே. பணியிடத்தில் கடன் பெற முடிந்தவர்கள் 28%. கந்துவட்டிக்காரர்கள், சுய உதவிக் குழுக்கள் வழி சிறுகடன் பெற்றவர்கள் 40%. கந்துவட்டிக் கடனுக்கு நிகராகச் சிறுகடன் நிறுவனங்களின் வட்டிவிகிதம் இருப்பதால் இவை இரண்டும் ஒரே வகையில் கொள்ளப்படுகிறது.
மருத்துவச் செலவுகள்: ஆய்வில் பங்கெடுத்தவர்கள், 25 வகையான முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களை 6 பிரிவுகளாக அட்டவணைப்படுத்தினோம். இதில் சமையல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுவருபவர்கள், கரோனா காலத்தில் மருத்துவத்துக்குச் சராசரியாக ரூ.46,783 செலவிட்டுள்ளனர். கட்டுமானம் சார்ந்த தொழிலாளர்களின் சராசரி மருத்துவச் செலவு ரூ.33,272; கரோனா கால மருத்துவச் செலவுகள் ஆயத்த ஆடை உள்ளிட்ட தொழில்சார்ந்த தொழிலாளர்களுக்கே அதிகம் கூடியுள்ளன. இவர்களின் சராசரிக் கடன் சுமை ரூ.63,333. இயந்திரத் தொழில் சார்ந்த, ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் கரோனா காலக் கடன் சராசரியாக ரூ.34,054 உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சார்ந்த தொழிலாளர்கள் (ரூ.3,740) மற்றும் இதர முறைசாராத் தொழில்களில் (ரூ.2,074) ஈடுபட்டுள்ளவர்கள் மிகமிகக் குறைவாகவே கடன்பட்டுள்ளனர். கரோனா கால மருத்துவப் பராமரிப்பு முழுவதையும் இவர்கள் அரசு மருத்துவமனைகளிலேயே பெற்றுள்ளனர்.
கரோனா காலத்தில் முறைசாராத் தொழிலாளர்களின் கடன் சுமை இவ்வளவு அதிகரித்து, அவர்கள் துயரங்களை அடையக் காரணம், அவர்களுக்கு எவ்விதச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் நிதி உதவியும் இல்லாமல் இருப்பதே. எளிய வட்டியில் வங்கிக் கடன் அல்லது நிறுவனக் கடன் கிடைக்கப்பெறாமையும் ஒரு காரணம். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நகர்ப்புற முறைசாராத் தொழிலாளர்கள் நிலை இதுவென்றால், இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த முறைசாராத் தொழிலாளர்களின் நிலையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை! - நா.மணி, பொருளாதாரப் பேராசிரியர், தொடர்புக்கு: tnsfnmani@gmail.com, மு.மணிகண்டன் அரசுப் பள்ளி பொருளியல் ஆசிரியர்