வி.எஸ்.அச்சுதானந்தன் 100 | கேரளத்தின் பொதுவுடமைத் தந்தை!

வி.எஸ்.அச்சுதானந்தன் 100 | கேரளத்தின் பொதுவுடமைத் தந்தை!
Updated on
2 min read

இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான வி.எஸ்.அச்சுதானந்தன், 100ஆவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வேர்விடத் தொடங்கி, இன்று விருட்சமாகக் கிளை பரப்பி நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றுடன் ஒப்பிடத்தக்கது வி.எஸ்ஸின் வாழ்க்கை. அவர் பிறந்த இரண்டாம் வருடத்தில்தான் எம்.என்.ராய் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கான விதையைத் தூவினார். பிறகு ‘கம்யூனிஸ்ட் சோஷலிஸ்ட் பார்ட்டி’ உதயமாகி, அது ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா’வான 1940இல் வி.எஸ். அதில் அங்கமானார்.

ஆலப்புழை அருகே புன்னப்பராவில் பிறந்தவர் வி.எஸ். தொழிலாளர் சங்க நடவடிக்கைகளில் முன்னின்றுசெயல்பட்டவர். கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடித்தளமிட்ட தலைவர்களில் ஒருவரான பி.கிருஷ்ணப்பிள்ளையின் உத்வேகத்தால் கட்சிக்குள் நுழைந்தவர். ஆலப்புழையில் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பை ஏற்றவர். கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேர்பிடிக்கக் காரணமாக இருந்தது ‘புன்னப்பரா வயலார்எழுச்சி’ப் போராட்டம். புன்னப்பரா, வயலார் தொழிலாளர்கள் இணைந்து திருவிதாங்கூர் சமஸ்தானம் அறிமுகப்படுத்தவிருந்த அமெரிக்க மாதிரி ஆட்சி முறைக்கு எதிராக 1946இல் நிகழ்த்திய போராட்டம் இது. கையில்கிடைத்ததை ஆயுதமாக ஏந்தி திருவிதாங்கூர் போலீஸ்படையை எதிர்கொண்ட தோழர்களில் வி.எஸ்.ஸும் ஒருவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்ட இந்தப் போராட்டத்தில் வி.எஸ். கைதுசெய்யப்பட்டு, பூஜைப்புரை சிறையில் அடைக்கப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் கம்யூனிஸ்ட் எனச் சொல்லிக்கொள்வதற்கு அசாத்தியமான தைரியம் வேண்டும். அந்த நெஞ்சுரத்துடன் கட்சிப் பணியாற்றினார் வி.எஸ்.

புதிய தொடக்கம்: சீனப் போரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முரண்பாடு உண்டானபோது தேசிய கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த 32 தலைவர்களில் உயிரோடு இருக்கும் இருவரில் ஒருவர்வி.எஸ்., இன்னொருவர் சங்கரய்யா. இப்படித்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

.எஸ். மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) கேரளச் செயலாளராக இருந்தவர். 2006இலிருந்து கேரளத்தின் முதல்வராகவும் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் மூன்று முறை செயலாற்றியவர். அந்தக் காலகட்டத்தில் கவியூர் வழக்கு, ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு, கிளிரூர் வழக்கு போன்ற பாலியல் பலாத்கார வழக்குகளின் நீதி விசாரணைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவந்துள்ளார். இதற்காகப் பல முறை நீதிமன்றக் கதவுகளைத் தட்டியவர். இதனால், கேரளத்தில் தந்தை ஸ்தானத்தை வி.எஸ். பெற்றார். இது மட்டுமல்லாமல் லாட்டரி முறைகேடு, பார் முறைகேடு, மூணாறு ஆக்கிரமிப்பு போன்ற பல பொதுநலப் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுத்தார். தனது இந்த உரத்த செயல்பாட்டால் சொந்தக் கட்சியாலும் பல முறை விமர்சிக்கப்பட்டுள்ளார்.

விமர்சனமும் பாராட்டும்: கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தொண்டரான டி.பி.சந்திரசேகரன் 2012இல் கொல்லப்பட்டார். நெய்யாற்றின்கரை இடைத்தேர்தல் நேரத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சந்திரசேகரன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்று விமர்சனத்துக்கு ஆளானார் வி.எஸ். அந்தக் கொலையில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் குற்றம்சாட்டப்பட்டனர். கட்சியின் விமர்சனத்துக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் இன்றைய கேரள முதல்வர் பினராயி விஜயன், சந்திரசேகரனைத் ‘துரோகி’ என அழைத்ததைச் சுட்டிக்காட்டி வி.எஸ். பேசியது மீண்டும் விமர்சனத்துக்கு இடமானது.

பினராயியுடனான மோதல் போக்குக்குக் காரணம்,கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சித் தலைவராக வி.எஸ். செயல்பட்டதுதான். திருட்டு லாட்டரி ஒழிப்பு, மூணாறு நிலம்ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பல திட்டங்களைத்தனது ஆட்சிக் காலத்தில் வி.எஸ். நடைமுறைப்படுத்திஉள்ளார். ஐடி பூங்காக்களை அமைத்துள்ளார். கட்சி ஆளாகவும் ஆட்சியாளராகவும் இரு விதமாகச் செயல்பட்டவர் என்ற ஒரே பண்புக்காக வி.எஸ். விமர்சிக்கவும் பாராட்டவும் படுகிறார். இன்று உடல்நலன் காரணமாகப் பொது அரசியலிலிருந்து வி.எஸ். ஒதுங்கிவிட்டார். அவரது நூற்றாண்டில் அவரைப் பற்றிப் பேசுவது இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை நினைவுபடுத்துவதற்குச் சமமாகவும் இருக்கிறது. - மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in