Published : 27 Oct 2022 06:49 AM
Last Updated : 27 Oct 2022 06:49 AM

காலநிலை மாற்றம்: அரைக் கிணறு தாண்டுவது செல்லாது

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ‘காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கை’யை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அந்தச் சுருக்க அறிக்கை குறித்துக் கருத்துக்கூற இரண்டு வாரங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை விமர்சித்த பிறகே வரைவு அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டு, கருத்துக்கூற கூடுதலாக ஒரு மாத அவகாசம் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அந்த 52 பக்க வரைவு அறிக்கை, காலநிலை மாற்றம் குறித்த நகரங்களுக்கு இடையிலான சர்வதேச அமைப்பான ‘சி40’-யின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே. காலநிலை மாற்றம் குறித்து எவ்வளவு அலட்சியமான பார்வையை நாம் கொண்டுள்ளோம் என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சாட்சி.

அதே நேரம், இந்த அறிக்கை சில முக்கிய எச்சரிக்கைகள் விடுத்துள்ளதைப் புறக்கணிக்க முடியாது; அவை: அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னையின் கடல் மட்டம் 7 செ.மீ. உயர்ந்து 100 மீட்டர் நிலப்பகுதி கடலுக்குள் மூழ்கிவிடும். கடல் மட்டம் உயர்வதால் வடசென்னையில் உள்ள இரண்டு மின்னுற்பத்தி நிலையங்கள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் 60 சதவீதம் வரை மூழ்க வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை வெள்ளம் ஏற்படுகிறது. சென்னையின் 30 சதவீதப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 2100-ஆம் ஆண்டுக்குள் சென்னையின் 67 சதுர கி.மீ. பரப்பளவு - தற்போதுள்ள நகரத்தின் 16 சதவீதம் நிரந்தரமாக நீரால் சூழப்படும். இதன் காரணமாக 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். 200-க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகள் பாதிக்கப்படும். ஆறுகள், நீர்நிலைகளை ஒட்டியுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த 7,500 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்ககங்களும் பாதிக்கப்படும்.

திசை தெரியாத அறிக்கை: 2015 வெள்ளம், 2021 வெள்ளம் எனத் தொடர் இடைவெளிகளில் வெள்ளத்தால் அல்லல்பட்டுவரும் சென்னை மாநகராட்சி, காலநிலை மாற்றம் குறித்து சிந்திக்கத் தொடங்கியிருப்பது நல்ல மாற்றம். ஆனால், துண்டு துண்டான முழுமையற்ற ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டிருப்பதிலிருந்து மாநகராட்சியின் நோக்கம் கேள்விக்குரியதாகிறது. ஏனென்றால் மக்களுக்குப் புரிவதுபோலவோ, மக்களின் பங்கேற்பை உள்ளடக்குவதுபோலவோ அல்லாமல் அறிக்கை முழுவதுமே வரைபடங்கள், எண்கள், புள்ளிவிவரங்களாக உள்ளது. துறைசார் மொழியில் ஏற்கெனவே வெளியான தகவல்களை வெட்டி ஒட்டி வேறு யாருக்கோ தயாரிக்கப்பட்டதுபோல் இருக்கிறது. அறிவியல்பூர்வமாக ஒன்றை விவரிக்கும் தன்மையோ, வாதங்களோ இடம்பெறவில்லை.

“இந்த அறிக்கை பெருமளவு தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியே பேசுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படப்போகும் சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி இந்த அறிக்கை எந்த வகையிலும் கவலைப்படவில்லை. 200-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மாநகராட்சி தெரிவித்தாலும், நேரடியாக மக்களுடனோ மீனவ மக்களுடனோ எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை” என சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன் விமர்சித்துள்ளார்.

அறிக்கையின் பல இடங்களில் பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதையும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதையும் பற்றி மட்டுமே பெருமளவு பேசப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கு எப்படித் தகவமைத்துக்கொள்வது, வளங்களைச் சுரண்டாத வகையில் எப்படி நகரை மாற்றியமைப்பது என்பது பற்றிப் பேசப்படவில்லை. இந்த வரைவு செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான அம்சங்கள் யூகத்தின் அடிப்படையிலான திட்டங்களாகவே இருக்கின்றன. நடைமுறைக்கு உகந்த, செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் பெரிதாகச் சொல்லப்படவில்லை.

இந்த அறிக்கையை முன்வைத்து எழும் சில கேள்விகள்: மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே கடலிலிருந்து சில நூறு அடிகள் தொலைவில் மெட்ரோ ரயில் நிலையம் தற்போது அமைக்கப்பட்டுவருகிறது. ஆனால், மேற்கண்ட வரைவு அறிக்கையோ 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் கடல் மட்ட உயர்வால் நீரில் மூழ்கும் என்கிறது. நகர் முழுவதையும் இணைக்கக்கூடிய நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் கடல் நீர் புகுந்தால் எப்படிப்பட்ட ஆபத்து ஏற்படும்? அதைச் சமாளிக்கவோ ரயில் நிலையத் திட்டத்தைக் கைவிடுவதற்கோ சென்னை மாநகராட்சி-மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் உள்ள திட்டம் என்ன?

பெருமளவு குறுக்கப்பட்டுவிட்ட சென்னையின் மூன்று ஆறுகளையும் பக்கிங்ஹாம் கால்வாயையும் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்ட எண்ணற்ற ஏரிகளையும் மீட்டெடுப்பதற்கான திட்டம் என்ன? இவற்றை மீட்டெடுக்காமல் மழைக்கால வெள்ளத்தையும் கோடைக் கால நீர்த் தேவையையும் எப்படிச் சமாளிக்க முடியும்?

குடிசைப்பகுதி மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்படப் போவதாகவும், அவர்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பால் பாதிக்கப்படாத வீடு வழங்கப்படும் என்றும் அறிக்கை கூறுகிறது. குளிர்சாதன வசதி இல்லாமல் இந்த வீடுகளில் வெப்பநிலையைக் குறைப்பது எப்படிச் சாத்தியம்? அந்த வீடுகள் எங்கே அமைக்கப்பட உள்ளன? காலநிலை ஆபத்து - காலநிலை பேரிடர் நிகழ்வுகளின்போது பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள் எப்படி அமையும், அதற்கான முன்னேற்பாடுகள் என்னென்ன?

“இதுவரையிலான சென்னை வெள்ளங்களில் அடித்தட்டு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றப் பேரழிவிலும் அவர்களே பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த வரைவு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அவர்களைக் காப்பாற்றவோ, மீட்டெடுக்கவோ மாநகராட்சியிடம் உள்ள திட்டம் என்ன என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை” என்கிறார் சென்னை கடல் மட்ட உயர்வு குறித்து ஆராய்ந்துள்ள சென்னை ஐ.ஐ.டி.யின் முதன்மை அறிவியலாளர் அவிலாஷ் ரௌல்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்: காலநிலை மாற்றம் என்பது சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டை, இந்தியாவை, உலகைப் பாதிக்கவுள்ள மாபெரும் பிரச்சினை. அடுத்துவரும் ஆண்டுகளில் நிகழவுள்ள இயற்கைப் பேரழிவுகளைத் தீவிரப்படுத்த உள்ள பிரச்சினை. இதை எதிர்கொள்வதற்கு இன்னும் கொள்கை அளவில்கூட நாம் தயாராகவில்லை. இதைக் குறித்து மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றாலும், அரசும் ஆட்சியாளர்களும் அதே போன்றதொரு அறியாமையை வெளிப்படுத்தக் கூடாது. ஏற்கெனவே தீவிரமடைந்துவரும் இயற்கைப் பேரழிவுகளைத் தடுப்பதற்கு அரசு மக்களுடன் கைகோப்பதும் புரிதலைப் பரவலாக்குவதும் அவசர, அவசியத் தேவை. இந்தப் பின்னணியில் காலநிலை மாற்றச் செயல் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதைச் சென்னை மாநகராட்சி போன்ற அரசின் அங்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இந்திய அளவிலோ, தமிழக அளவிலோ இல்லாத ஒரு முன்முயற்சியை, மாற்றத்தைச் சென்னை மாநகராட்சி தன்னிச்சையாக மேற்கொண்டுவிட முடியாது. ஆனால், லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும் ஒரு பெருநகரம், அந்த மக்களின் பாதுகாப்புக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நகரைப் பாதுகாப்புமிக்கதாகவும், விரைவாக மீளும்திறன் கொண்டதாகவும் மாற்றுவதற்கான புரிதலுடன்கூடிய செயல்பாடுகளை இப்போதே தொடங்க வேண்டும். - ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

To Read in English: Climate change: Work half-done will not pay off

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x