‘பிரெக்ஸிட்’ பிரிட்டனின் கதை!

‘பிரெக்ஸிட்’ பிரிட்டனின் கதை!
Updated on
3 min read

கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களைக் கண்டுவிட்ட நாடு உலகில் பிரிட்டனைத் தவிர வேறொன்றில்லை. பிரிட்டனின் சமகால வரலாறு ‘பிரெக்ஸிட்’டிலிருந்தே தொடங்குகிறது; பிரிட்டனின் தற்போதைய சீர்குலைவுக்கும் அதைச் சரிசெய்ய முடியாமல் பிரதமர்கள் தொடர்ந்து பதவி விலகுவதற்கும் ‘பிரெக்ஸிட்’டே அடிப்படை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்துவந்த நிகழ்வே ‘பிரெக்ஸிட்’. ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்தங்கிய நாடுகளிலிருந்து மக்கள் பிரிட்டனுக்கு வந்து அடிமட்ட வேலைகளில் ஈடுபடுவது இயல்பு. இது பிரிட்டிஷார் மனத்தில் பொதுவான ஒரு எதிர்ப்புநிலையை உருவாக்கியிருந்தது. பிரிட்டனின் வேலையின்மைக்கும் பொருளாதார மந்தநிலைக்கும் இதுவே காரணம் என்று பரவலாக நம்பப்பட்டது. இந்த நிலை தொடர்ந்தால் பிரிட்டன் சுரண்டப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் தீர்மானித்தது.

இழுபறியும் முறிந்த உறவும்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடித்திருப்பதா வேண்டாமா என்கிற வாக்கெடுப்பை 2016இல் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் (கன்சர்வேட்டிவ் கட்சி) நடத்தினார். 52% வெளியேறுவதற்கும் 48% தொடர்வதற்கும் என மிகக் குறுகிய வித்தியாசத்தில் வாக்குகள் பதிவாகின. ஆனால், ‘வெளியேறுவது’ என்றால் என்ன என்றோ பிரிட்டனின் எதிர்கால வர்த்தகப் பரிவர்த்தனை உறவுகளை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்தோ தெளிவான விளக்கங்கள் ஏதும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் நீடித்திருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த கேமரூன், வெளியேறுவது என்று பெரும்பான்மையினர் வாக்களித்த நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற தெரசா மே, ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (European Economic Area) இருந்தபடியே முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக உறவைப் பாதுகாக்கும் நார்வே-முறை ஒப்பந்தம் போன்ற ஒன்றைத் தெரிவுசெய்திருந்தால் அரசியல் கட்டுப்பாடு ஒப்பீட்டளவில் பிரிட்டன் கைகளில் இருந்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால், பிரிட்டனின் இறையாண்மையை மீட்டெடுப்பது, குடியேற்றக் கட்டுப்பாடு, வர்த்தகம், உள்ளூர் தொழிலாளர்களின் உரிமைகள், மனித உரிமைகள், பொருளாதாரக் கொள்கை போன்ற பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி ‘பிரெக்ஸிட்’ தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. எனினும், ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற முடியாத காரணத்தால் தெரசா மே பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போரிஸ் ஜான்சன் புதிய பிரதமரானார். இவரது ‘பிரெக்ஸிட்’ கொள்கை காரணமாக, கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதால், நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால், நாடாளுமன்றத்தைக் கலைத்து, மறுதேர்தலுக்கு உத்தரவிட்டார் போரிஸ் ஜான்சன். ‘ ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்றுவேன்’ (‘Get Brexit Done’) என்பதை முதன்மை வாக்குறுதியாக அறிவித்து தேர்தலைச் சந்தித்த போரிஸ், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்குத் திரும்பினார்.

கன்சர்வேட்டிவ் கட்சி 1987 தேர்தலில் பெற்ற வெற்றிக்கு நிகரான வெற்றியை 2019 தேர்தலில் போரிஸ் பெற்றுத் தந்தார். 2020 ஜனவரியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. அதைத் தொடர்ந்து வந்த கரோனா பெருந்தொற்று ‘பிரெக்ஸிட்’டின் விளைவுகளைத் தள்ளிப்போட்டதாக நம்பப்படுகிறது.

வெளிப்பட்ட விளைவுகள்: கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பிவிட்ட நிலையில், பிரிட்டனில் ‘பிரெக்ஸிட்’டின் விளைவுகள் வெளிப்படத் தொடங்கின. ‘பிரெக்ஸிட்’டுக்குப் பிறகு, டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு தொடர் சரிவைச் சந்தித்தது. இது தவிர, இங்கிலாந்தின் வளங்களை அதிகரித்தல், ஐரோப்பாவுடனான வர்த்தகத்தைக் குறைத்துச் சுதந்திர வர்த்தகத்தை முன்னெடுத்தல், குடியேற்றக் கட்டுப்பாடுகள் போன்ற பல தளங்களில் தான் அளித்த வாக்குறுதிகளைப் போரிஸ் ஜான்சன் முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின. ‘பிரெக்ஸிட்’ கரோனா உள்ளிட்ட காரணங்களால் ஏற்கெனவே பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளான பிரிட்டனின் பொருளாதாரம், போரிஸ் ஆட்சிக் காலத்தில் மேலும் வீழ்ச்சியடைந்தது. 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம், 300 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை, மின்சாரக் கட்டணம், எரிவாயு விலை உயர்வு, ஏற்றுமதி, வேலைவாய்ப்பில் தொடரும் தேக்கநிலை, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற சாதகமற்ற புறக்காரணிகள் ஆகியவற்றைத் திறமையாகக் கையாண்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தவறிவிட்டார் என்கிற அதிருப்தி போரிஸ் மீது விழுந்தது. விளைவு, கட்சிக்குள்ளே அவருக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து ராஜினாமா செய்துவர, போரிஸ் ஜூலை 7 அன்று பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் கன்சர்வேட்டிவ் கட்சி இறங்கியது.

அடுத்த பின்னடைவு: பிரதமர் பதவிக்கான போட்டியில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் வென்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான லிஸ் டிரஸ், இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக செப்டம்பர் 6 அன்று பொறுப்பேற்றார். இக்கட்டான சூழலில், பிரதமர் பொறுப்பேற்றிருந்த நிலையில், செப்டம்பர் 8 அன்று அரசி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு பிரிட்டனின் இயக்கத்தைச் சற்றே ஸ்தம்பிக்க வைத்தது.

நிதியமைச்சர் குவாசி குவார்டெங் மூலம் டிரஸ் தாக்கல் செய்த ‘மினி பட்ஜெட்’டின் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள், பவுண்டின் மதிப்பில் வீழ்ச்சி உள்ளிட்ட பிரிட்டனின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீவிரமடைய வைத்தன. இதனால் எழுந்த கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, குவார்டெங்கை நீக்கி ஜெர்மி ஹன்ட்-ஐ நிதியமைச்சர் ஆக்கினார் டிரஸ். அவர் ‘மினி பட்ஜெட்’டின் பெரும்பாலான அறிவிப்புகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இந்த நடவடிக்கைகள் பலனளிக்காத நிலையில் டிரஸுக்குக் கட்சிக்குள்ளிருந்தே எதிர்ப்புகள் எழுந்தன; அமைச்சர்கள் பதவி விலகினர். வாக்குறுதிகளைத் தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி டிரஸும் பதவி விலகினார். இந்தப் பின்னணியில்தான், பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸிடம் தோல்வியடைந்த ரிஷி சுனக் போட்டி ஏதுமின்றி இப்போது பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 42 வயதில் பிரிட்டனின் 57ஆவது பிரதமராகியிருக்கும் இவர், கடந்த 200 ஆண்டுகளில் பிரிட்டனின் மிக இளம் வயதுப் பிரதமர், மன்னரைவிட சொத்து மதிப்பு அதிகம் உள்ள பிரதமர், வெள்ளையர் அல்லாத முதல் பிரதமர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் என்பன போன்ற பல்வேறு முதன்மைகளைக் கொண்டிருக்கிறார்.

பிரெக்ஸிட் தனியல்ல: இங்கிலாந்து மட்டுமல்லாமல், உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்த கவலைதரும் முன்கணிப்புகளைச் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேசப் பொருளாதார அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன; 2023இல் உலகப் பொருளாதார மந்தநிலை குறித்தும் அவை எச்சரித்துள்ளன. ‘பிரெக்ஸிட்’ ஓர் தனித்த நிகழ்வு என்று கேமரூனின் வாக்கெடுப்பு கருதவைத்தது. ஆனால், அதுவொரு தனித்த நிகழ்வல்ல, தொடர் சங்கிலி என்பதை இந்த ஆறு ஆண்டுகள் உணர்த்தியிருக்கின்றன. இந்தப் பின்னணியில், பிரதமராகப் பொறுபேற்றிருக்கும் ரிஷி சுனக் முன்னுள்ள சவால்கள் ஏராளம். விலைவாசி உயர்வை சுனக் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் முதன்மை எதிர்பார்ப்பு. பொருளாதார நெருக்கடியால் தொழில்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. பெருநிறுவனங்கள் வரி குறைப்பைக் கோருகின்றன. ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, பெருநிறுவனங்களிடம் அதிக வரி வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். முதலீடுகள் குறைந்துவிட்டதால், புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. வேலையில் இருப்பவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு இல்லை. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு, வீட்டுக் கடன்கள், ஓய்வூதிய முதலீடுகள் என நெருக்கடிகள் வரிந்துகட்டி நிற்கின்றன. பிரிட்டனின் வரலாற்றில் ஓர் இக்கட்டான காலகட்டத்தில் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ரிஷி, இவற்றையெல்லாம் எதிர்கொண்டு எப்படித் தீர்வுகாணப் போகிறார் என்பது உலகின் பார்வையைக் கோரி நிற்கிறது. - சு.அருண் பிரசாத், தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in