Published : 14 Nov 2016 09:58 AM
Last Updated : 14 Nov 2016 09:58 AM

இந்தியாவின் ஆன்மாவில் கலந்த நேரு!

முஸ்லிம்கள் நமது சகோதரர்கள், அவர்களைத் தாக்குவது இந்தியாவையே தாக்குவது போன்றது

ஒருமுறை காந்தியிடம் கேட்டார்கள், “எப்படி நேருவின் கடுமையான வார்த்தைகளையும் கோபமான உச்சரிப்பையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்? இவ்வளவு பொறுமையாக நீங்கள் நேருவைக் கையாள்வது எங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது?” காந்தி சொன்னார், “அவரது கோபத்தில் நேர்மை இருக்கிறதே… அவர் சத்தம் போடுகிறார்தான்; ஆனால், சத்தியத்துக்காகச் சத்தம் போடுகிறார்; ‘ஜவாஹர்’ என்றால் மாணிக்கம்; அவர் மனிதருள் மாணிக்கம்...” என்று புன்னகையுடன் சொன்னார் காந்தி. காந்திக்கும் நேருவுக்கும் இடையில் அப்படி ஒரு புரிதல் இருந்தது. இத்தனைக்கும் கொள்கைக் கோட்பாடுகளில் இருவரும் இரு வேறு துருவங்கள்.

“நான் விஞ்ஞானக் கோயிலில் அறிவைத் தேடும் ஒரு பக்தன். வெறுமனே ஆன்மிகம் என்று பேசிக்கொண்டிருக்க மாட்டேன்” என்றார் நேரு. “பசியால் பரிதவிக்கும் ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ கடவுள் என்பது ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு உணவு வேண்டும். இந்தியா பசியும் பட்டினியும் மலிந்த நாடு. இங்கு சோற்றுக்கே அல்லாடுகிற கோடானு கோடி மக்களிடம் சத்தியம் - கடவுள் - மறுவாழ்வு - அருட்செல்வம் - பற்றியெல்லாம் பேசுவது கேலிக்கூத்து. அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, நல்வாழ்வு போன்ற தேவைகளைத் தேடித் தர வேண்டியது நமது கடமை. விஞ்ஞான அறிவும் நவீன தொழில்நுட்பமுமே இவற்றைச் சாதிக்கும்” என்றவர் அவர்.

செயல் வீரர்

ராமநாம பஜனை செய்து அன்றாட வாழ்வைத் தொடங்கிய காந்தியிடமிருந்து எப்படி நேருவின் சிந்தனை வேறுபடுகிறது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இருவரும் மக்கள் நலனுக்காகவே நின்றனர். ஆனால், வழிமுறைகளால் வேறுபட்டனர். இத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் நேருவையே தனது வாரிசு என்று அறிவித்தார் காந்தி. “அவரது கைகளில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாய் இருக்கும்; எந்தக் காற்றாலும் அணைந்துவிடாமல் இந்திய தீபத்தை அவர் பொத்திப் பாதுகாப்பார்” என்றார்.

நேருவின் கோபம் ‘செயல்படும் கோபம்’. செயல் என்றால் செயல்தான். செய்யாமல் இருப்பதைத்தான் அவர் கடிந்துகொண்டார். ‘செயல்படு... செய்து காட்டு’! என்பதே அவரது தாரக மந்திரம். ஒரு முறை நேரு சென்னைக்கு வந்தார். காரில் பயணம் வந்த நேருவைக் காண மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்களை ஒதுக்கி ஓரங்கட்டுவதற்காகக் குதிரையில் ஏறி பிரிட்டிஷ் போலீஸ்காரன் ஒருவன் கையில் சாட்டையோடு வந்து நேருவின் வாகனத்தைப் பின்தொடர்ந்தான். “சாட்டையைக் கீழே போடு; எங்கள் மக்களை அடிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை!” என்று கத்தினார் நேரு. அவன் கேட்பதாய் இல்லை. யாரும் எதிர்பாராமல் சட்டென்று காரில் இருந்து குதித்தார். காவலரின் கையில் இருந்த சாட்டையைப் பிடித்து இழுத்துப் பறித்துக்கொண்டு மறுபடியும் காரில் ஏறிக்கொண்டார். இதுதான் நேரு.

தேசப் பிரிவினையின்போது இந்து, முஸ்லிம் கலவரம் வெடித்தது. இரண்டு பக்கமும் இருந்த மதவாதிகள் கலவரத்தை ஊதிப் பெரிதாக்கிக் கனன்று எரியவைத்தனர். இந்த சந்தடிசாக்கில் சமூக விரோதிகள் பலரும் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினர். தடியர் களும், அடியாட்களும் கொண்ட ஒரு கூட்டம் டெல்லி ‘கன்னாட் சர்க்கிள்’ வட்டாரத்தில் நுழைந்தது. கடைகளையும் தொழில் நிறுவனங்களையும் அடித்து நொறுக்கியது. இரவு நேரம் ஒருவர் முகம் மற்றவருக்குத் தெரியாத கும்மிருட்டு. கலவரக் கும்பலுக்குள் கொஞ்சமும் அஞ்சாமல் போய் நின்றார் நேரு. “அய்யோ நேரு வந்துவிட்டார்” என்று கூட்டம் கத்த பலர் விலகி ஓடினர். முரடர் கூட்டம் பிடித்துத் தாக்கிக்கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம் இளைஞரை அவர்களிட மிருந்து மீட்டார். “பாகிஸ்தானுக்குப் போய் விட்டவர்கள் இப்போது வேறு நாட்டுக்கார் களாகிவிட்டனர். இங்கேயே தங்கி நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்கள் இந்தியர்கள்; அவர்களும் நமது சகோதரர்கள். அவர்களை நீங்கள் தாக்குவது இந்தியாவையே தாக்குவது போன்றது” என்றார்.

‘இருட்டு வேளையில் முரடர்கள் கூடியுள்ள இடத்துக்கு நீங்கள் போகலாமா’? என்று நண்பர்கள் கடிந்துகொண்டனர். “இருட்டு இருக்கும் இடத்துக்குத்தான் வெளிச்சம் செல்ல வேண்டும். நான் போனதால் அங்கே ஒரு பெரிய மதக் கலவரம் நிகழாமல் தடுக்க முடிந்தது. எங்கோ, ஏதோ நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருப்பவனைத் தலைவர் என்று ஒரு நாளும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று அவரிடமிருந்து பதில் வந்தது.

மத நல்லிணக்கம்

‘இந்திய அரசியலைச் சீர்குலைக்கும் மத அடிப்படைவாதத்தை அப்புறப்படுத்த வேண்டும்’ என்றார் நேரு. ‘சட்டத்தின் ஆட்சி’யை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். “நாங்கள் சமைக்க விரும்புவது மதங்களற்ற தேசமோ, மதங்களுக்கு விரோதமான தேசமோ அல்ல. ஆனால், மத பேதங்களற்ற தேசம். ஒரு மதம், இன்னொரு மதத்தின் மீது சவாரி செய்வதை அது அனுமதிக்காது” என்று உறுதியுடன் நின்றார்.

சுதந்திரப் போராட்டக் காலத்துக்கு முன்பிருந்தே சில ‘அறிவுஜீவிகள்’ பேசி வந்த ‘ஒற்றைக் கலாச்சார தேசியத்தை’ நேரு ஒப்புக்கொள்ளவில்லை. “இது பல வண்ண மலர்கள் சேர்த்துக் கட்டப்பட்ட அழகிய மாலை; பல கலாச்சாரங்களின் தொகுப்பு. நீங்கள் இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ, கிறிஸ்துவராகவோ இருந்துவிட்டுப் போங்கள்; அது உங்கள் சொந்த விருப்பம். ஆனால், நீங்கள் இந்தியராக இருக்க வேண்டும் என்பதே கட்டாயம். எந்த மதத்தைச் சேர்ந்தவனும் ஒரு நல்ல இந்தியனாக இருக்க முடியும். அதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறேன். ‘பன்மையில் ஒருமை’ என்பதே மகாத்மா நமக்கு போட்டுக் கொடுத்திருக்கும் வழித்தடம்” என்று முழங்கினார் நேரு.

உலகத்தின் எல்லா நாடுகளிலும் ஏதாவது ஒரு மதம் பெரும்பான்மை மதமாகவும், மற்ற சில மதங்கள் சிறுபான்மையாகவும் இருக்கத்தான் செய்கின்றன. பெரும்பான்மை என்னும் பெயரால் மற்ற சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவோ அடாவடித்தனம் நிகழ்த்தவோ அனுமதிக்க முடியாது என்பதில் அவர் அழுத்தமாய் இருந்தார். ‘பெரும்பான்மைவாதம் என்பது ஒரு மத யானையைப் போன்றது. அதன் கால்களில் சிறுபான்மைச் சமூகம் நசுங்கிச் சாவதை அனுமதிக்க முடியாது’ என்பதில் தெளிவாய் இருந்தார்.

மதச்சார்பின்மையில் நேரு அதிகப் பிடிப்போடு இருந்ததற்குக் காணம் ‘நாம் அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானது. அது ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ, குழுவுக்கோ சொந்தமானதல்ல’ என்பதுதான். “யார் யாரெல்லாம் இந்திய விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் இந்த தேசத்தின் சம பங்காளிகளே. பல துண்டுகளாகக் கிடந்த சாம்ராஜ்யங்களை ஒன்று திரட்டி ஓர் உருவமாக வடிவமைக்கப் பாடுபட்ட எல்லாச் சிற்பிகளுக்கும் இந்தியச் சிலை சொந்தமானது” என்றார்.

இறுதி ஆசை

“நான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்த விதமான மதச்சடங்குகளும் செய்யக் கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும் உடன்பாடும் இல்லை. கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையிலே கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன். மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன்” என்று கேட்டுக்கொண்டார். அவரது விருப்பத்துக்கேற்ப திரிவேணி சங்கமத்திலும், பல்வேறு நதிகளிலும், வயல்களிலும் அவரது சாம்பல் கரைக்க விடப்பட்டது.

ஜவாஹர்லால் நேருவின் 127-வது பிறந்த நாள்

திரு.வீரபாண்டியன், அரசியல் விமர்சகர் ஊடகவியலாளர் தொடர்புக்கு: thiru.veerapandian@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x