நம்பிக்கையூட்டுகிறதா நாளைய தலைமுறை?

நம்பிக்கையூட்டுகிறதா நாளைய தலைமுறை?
Updated on
2 min read

“எனக்குக் கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற ஆத்திரத்தில்தான் சத்யாவைத் தண்டவாளத்தில் பிடித்துத் தள்ளினேன்” - தமிழகத்தை உலுக்கிய சென்னை பரங்கிமலை ரயில்நிலையக் கொலையில், கல்லூரி மாணவர் சதீஷின் வாக்குமூலம் இது. தந்தை, மகள் என இரண்டு உயிர்களை ஒரே நேரத்தில் இழந்த சத்யாவின் குடும்பம் மீளாத் துயரில் மூழ்கியுள்ளது. தனிப்பட்ட காதல் பிரச்சினையாக இதைச் சுருக்கிவிட முடியாது. ஒட்டுமொத்த சமூக, பண்பாடு, அரசியல், உளவியல், ஊடகப் பயன்பாட்டுப் பின்னணியில் ஆழமான ஆய்வைக் கோரும் சிக்கல் இது.

தான் விரும்பிய பெண் தனக்குக் கிடைக்கவில்லை என்பதால், அவள் கொல்லப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஒருவருக்கு ஏன் தோன்றுகிறது? காதல் எப்போதும் வெற்றியில்தான் முடிய வேண்டும் என்கிற சிந்தனை எப்படி உருவாக்கப்பட்டது? பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? தன்னுடைய உயிர்போல அவளது உயிரும் விலைமதிப்பில்லாதது என்னும் சிந்தனை இல்லாமல் போனது ஏன்? என்பன போன்ற கேள்விகளின் பின்னணியில் நம்மைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆக்கபூர்வமற்ற சித்தரிப்பு: ஊடகத்தில் பெண்கள் எப்படிச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது ஆய்வுக்குரியது. அது ஆண் மனத்தில் பெண் பற்றிய பார்வையை, புரிதலை எப்படி உருவாக்கியிருக்கிறது என்பதும் உற்றுநோக்கப்பட வேண்டும். பெண் ஒரு முழுமையான மனிதர் என்ற பார்வையிலிருந்து விலகி, உடல் கூறுகளை அங்கம்அங்கமாகப் பிரித்துக் காட்டி, உடல் உறுப்புகளின் கூட்டுத்தொகைதான் பெண் என்னும் பிம்பத்தை வணிக நோக்கமுடைய ஊடகங்கள் காட்சிப்படுத்துகின்றன. பெண் எப்போதும் நுகர்பொருளாகவும் போகப்பொருளாகவுமே சித்தரிக்கப்படுகிறாள். இதனால், ஒரு பெண்ணை எதிர்கொள்ளும் ஆண் அவளை எப்படியாவது நுகர, பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அறிந்தும் அறியாமலும் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்.

அதன் வெளிப்பாடாக ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது, அவளை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்கிற ஆசையைத் தீவிரமாகவும் பெரிதாகவும் கட்டமைத்துக்கொள்கிறார். தான் விரும்பிய பெண்ணைச் சுதந்திரமாகக் காதலிக்கவும் அந்தக் காதலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொள்கிறார். பெண் ஒருவர் தன் காதலை ஏற்க மறுத்தாலோ, நிராகரித்தாலோ அவரைப் பழிவாங்கும் எண்ணத்துக்குள் இளைஞர்கள் சிலர் இயல்பாக நுழைந்துவிடுகின்றனர். ஏனென்றால், சினிமாவிலும் விளம்பரங்களிலும் அவர்களின் நாயகர்கள் வெற்றியை மட்டுமே முத்தமிடுகிறார்கள்; அவர்கள் ஒருபோதும் தோல்வியை எதிர்கொள்வதில்லை. இதனால், இளைஞர்கள் எப்போதும் கனவு உலகத்திலேயே சஞ்சரிக்கிறார்கள். அந்தக் கனவுலகத்தின் பிரதிநிதிகளில் ஒருவர்தான் சதீஷ்.

தேவை மனப்பான்மை மாற்றம்: இந்தக் காலகட்டத்தில், குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் கவனம் மேலும் தீவிரமடைய வேண்டியிருக்கிறது. ஆண், பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இருவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும்; சுதந்திரம் வழங்க வேண்டும். நம்முடைய கல்வி முறையானது நல்மதிப்பீடுகளையும் சேர்த்தே வளர்க்க வேண்டும். மனித வாழ்வு உயர்வானது; மனித உயிர் விலைமதிக்க முடியாத ஒன்று என்பதைக் கல்விமுறை உணர்த்தத் தவறியிருக்கிறது என்றே தோன்றுகிறது. வசதியான வாழ்க்கையைவிட மதிப்பீடுகள் உயர்வானவை. அவைதான் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகின்றன. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வதற்கான சிந்தனைகளை இன்றைய கல்விமுறை பயிற்றுவிக்க வேண்டும்.

பரங்கிமலை கொலை போன்ற சம்பவங்களில் தனிநபருக்கு உச்சபட்சத் தண்டனை கொடுத்தால் மட்டும் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. மாறாக, ஒட்டுமொத்தமாக சமூகத்தின் கூட்டுமனசாட்சியிலும் பெண் குறித்த எண்ணத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஊடகங்கள் பெண்களைப் பற்றிய சித்தரிப்புகளை மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் கையாள வேண்டும். காட்சிபூர்வ சித்தரிப்பே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் இடையே சமத்துவப் பார்வையை வளர்க்க வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்குமான மதிப்பீடுகள் சமமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நல்ல மதிப்பீடுகளைக் கற்றுத்தரும் நாற்றங்கால்களாக வகுப்பறைகள் மாற்றப்பட வேண்டும். காதல் தோல்விக்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கையை விதைக்கும் சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும். பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். நாளைய தலைமுறை காப்பாற்றப்பட வேண்டும்! - அ.இருதயராஜ்
பேராசிரியர், ‘மெளனம் கலைக்கும் ஜெய்பீம்’ நூலாசிரியர், தொடர்புக்கு: iruraj2020@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in