சொல்… பொருள்… தெளிவு: விசாரணை ஆணையங்கள்

சொல்… பொருள்… தெளிவு: விசாரணை ஆணையங்கள்
Updated on
2 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக 2017இல் அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையமும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 2018 இல் அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையமும் தமிழக அரசிடம் சமர்ப்பித்த அறிக்கைகள், சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்டன. இந்தியாவிலேயே அதிக விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்தியாவில் விசாரணை ஆணையங்களுக்கு வழிகாட்டும் சட்டம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன.

சட்டத்தின் தோற்றம்: இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் அமைக்கும் விசாரணை ஆணையங்களுக்கு 1952ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘விசாரணை ஆணையச் சட்டம்’ வழிகாட்டுகிறது. இந்தச் சட்டத்தின்படிதான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான விதிமுறைகள் 1972இல் உருவாக்கப்பட்டன.

எப்போது அமைக்கலாம்?: விசாரணை ஆணையச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் விசாரணை ஆணையங்களை அமைக்கலாம். மத்திய அரசு விசாரணை ஆணையம் அமைத்தால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். மாநில அரசுகள் அமைத்தால், சட்டப்பேரவைகளில் தீர்மானம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் ஏற்கெனவே நடந்த நிகழ்வுகளுக்கான காரணங்களைக் கண்டறியவும் விசாரணை ஆணையங்களை அமைக்கலாம்.

பணி என்ன?: பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டறிவதோடு, எதிர்காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்து, சம்பந்தப்பட்ட அரசுக்குப் பரிந்துரையைச் சமர்ப்பிப்பது விசாரணை ஆணையத்தின் முக்கியப் பணி.

விசாரிப்பது யார்?: விசாரணை ஆணையச் சட்டத்தின்படி பதவியில் உள்ள உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையங்கள் அமைக்கலாம். பொதுவாக, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டே விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. விசாரணை ஆணையம் ஒரு நபர் அல்லது பல உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கலாம். பல உறுப்பினர்களைக் கொண்டது என்றால், அதற்குத் தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.

அதிகாரம் என்ன?: 1908 சிவில் நடைமுறைச் சட்டத்தின்படி, விசாரணை ஆணையம் ஒரு சிவில் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தைப் பெறுகிறது. இதன்படி இந்தியாவில் எந்த நபருக்கும் சம்மன் அனுப்பி, விசாரணைக்கு அழைக்கலாம். சோதனை செய்யலாம். பிரமாணப் பத்திரங்களைப் பெறலாம். 1898 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக் குழு எங்கு சென்றும் ஆவணங்களைக் கைப்பற்றலாம். ஆணையத்துக்கு உதவும் வகையில் துறைசார் அறிவார்ந்த நபர்களை மதிப்பீட்டாளர்களாக நியமிக்கலாம். ஆணையத்துக்கு முன் நடக்கும் எந்த நடவடிக்கையும் இந்திய தண்டனைச் சட்டம், 1860 பிரிவுகள் 193, 228இன்படி நீதித் துறை நடவடிக்கையாகக் கருதப்படும்.

அதிகார வரம்பு: மத்திய அரசு நியமித்த விசாரணை ஆணையம் செயல்படும்வரை ஒரு மாநில அரசால் அதே பொருளில் விசாரணை ஆணையத்தை அமைக்க முடியாது. அதேபோல மாநில அரசு அமைத்த ஆணையம் செயல்படும்வரை மத்திய அரசும் அதே பொருளில் விசாரணை ஆணையத்தை அமைக்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் தொடர்புடையது என்றால், விசாரணை ஆணையத்தை விரிவுபடுத்தலாம். - தொகுப்பு: டி.கார்த்திக்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in