ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 03 | ‘அன்னவஸ்திர’மும் ‘அறுப்புக் கூலி’யும்!
சமூக வரலாற்றாய்வில் எல்லா சமூக நிகழ்வுகளையும் உலக அளவில் பொதுமைப்படுத்திப் பார்க்க முடியாது. பெண்களின் தனிச் சொத்துரிமை குறித்த ஆய்வும் இதில் அடங்கும். காலனிய ஆட்சியின் உரிமையியல் சட்டத்தில் குடும்பத்தின் பூர்விகச் சொத்து, தந்தையின் சொத்து, கணவன் ஈட்டிய சொத்து ஆகியவற்றில் பெண்ணுக்குரிய உரிமை மறுக்கப்பட்டிருந்தது. எனினும் சில இனக்குழுச் சாதிகளில் மரபுவழிச் சட்டங்கள் என்ற பெயரில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது.பெண்கள் அனைவருக்குமான சொத்துரிமையை சாதியும் மதமும் முடிவுசெய்துவந்ததன் பின்னணியில், இந்துப் பெண்கள் அனைவருக்குமான சொத்துரிமையை அம்பேத்கர் அறிமுகப்படுத்த முயன்றார். ஆனால், அது கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகினார். கணவர் சொத்தில் மனைவியின் உரிமையை ஏற்றுக்கொள்ளும் சட்டம்,இந்திய அளவில் 1956இல்தான் நடைமுறைக்குவந்தது.
இடைக்காலத் தமிழகத்தில்... இடைக்காலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் பெண்களின் தனிச் சொத்துரிமை குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. பெண்கள் சொத்துக்களை விற்றதையும் வாங்கியதையும் கொடையாக வழங்கியதையும் 348 கல்வெட்டுக்களின் துணையுடன் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் கனகலதா முகுந்த் என்ற ஆய்வாளர் (EPW, 25 ஏப்ரல் 1992). இந்நிலையில், மாற்றம் ஏற்பட்டுத் தனிச் சொத்துரிமை பெண்களிடமிருந்து பறிக்கப்பட்டமைக்கான காரணம் ஆய்வுக்குரியது.
அன்னவஸ்திரமும் அறுப்புக் கூலியும்: கணவரை இழந்த பெண்ணுக்கு ஆண் வாரிசு இருந்தால் கணவரின் சொத்துக்கள் அவரது ஆண் மக்களைச் சேரும். அவர்கள் உரிய வயதை அடையும்வரை அவரது மனைவியின் பொறுப்பில் அவை இருக்கும். அவற்றை விற்க, ஒத்தி-அடமானம் வைக்க, கொடையாக வழங்க என எவற்றுக்கும் மனைவிக்கு உரிமை கிடையாது. பெரியளவில் சொத்துக்கள் இருப்பின் சொத்துக்களை நிர்வகிக்கக் காப்பாளர் (கோர்ட் கார்டியன்) ஒருவரை நீதிமன்றம் நியமிக்கும். சொத்தின் வருவாயிலிருந்து அவருக்கு ஊதியம் வழங்கப்படும். இறந்தவரின் ஆண் வாரிசு, உரிய வயதை எட்டும்வரை அவர் பணியில் தொடருவார். ஆண் வாரிசு இல்லையெனில் இறந்தவரின் அண்ணன், தம்பிகளுக்குச் சொத்துக்கள் சென்றடையும். ஒருவருக்கு அண்ணன் தம்பி இல்லை என்றால், அவரது சித்தப்பா, பெரியப்பா மகன்களைச் சென்றடையும். தந்தைவழியில் ஏழு தலைமுறைவரை இவ்வுரிமை உண்டு. ஆனால், கணவரின் நிழலாக வாழ்ந்த மனைவிக்கு அவரது சொத்தில் உரிமை கிடையாது. மனைவியின் வாழ்க்கைத் தேவை சொத்தின் அளவுக்கேற்ப முடிவு செய்யப்படாது. அவரது அடிப்படைத் தேவையான அன்னமும் (உணவு) வஸ்திரமும் (ஆடை) பெற்றுக்கொள்ளும் வகையில் சிறு துண்டு நிலமும் குடியிருக்கக் குடில் அல்லது குச்சு வழங்கப்படும். இவையும் அனுபவிக்க மட்டுமே. இதைக் குறிக்கும் கலைச் சொல்லே ‘அன்னவஸ்திரம்’. சில பகுதிகளில் மிகவும் கொச்சையாக ‘அறுப்புக் கூலி’ என்பர் (தாலி அறுத்ததற்காக வழங்கப்படும் கூலி). ‘அறுப்பு சொகம்’ என்றும் கூறுவர்; பெண் வாரிசு இருந்தாலும் இதே கதிதான்.
இறந்த கணவரின் சொத்தில் உரிமை கொண்டாடும் உறவினர்கள் அன்னவஸ்திரத்துக்காக வழங்கும் சொத்தின் அளவைக் குறைக்க முனைவார்கள். இச்சிக்கல் நீதிமன்றத்திற்கும் செல்வது உண்டு. வாரிசு இல்லாது போனால், நியாயமான பங்கும் மனைவிக்குக் கிடைக்காது போகும் நிலையில், அவரின் சோகம், ‘மஞ்சணத் தொந்தியிலே/மைந்தன் பிறந்தாக்க /மைந்தனுக்குப் பங்குண்டு/ மதுரைக் கோட்டிலேயும் ஞியாயமுண்டு/ மஞ்சணத் தொந்தியில/ மைந்தன் பிறக்கலியே/ மைந்தனுக்குப் பங்குமில்ல/ மதுரைக் கோட்டிலேயும் ஞியாயமில்ல’ என்ற பாடலாக வெளிப்பட்டுள்ளது. ஆண் வாரிசு இல்லாத நிலையில், தன் பெண் மக்களுக்குச் சொத்துக்களை வழங்க இயலாத நிலை சைவ, வைணவ சமய நெறியைப் பின்பற்றியவர்களுக்கு இருந்துள்ளது. ஆனால், கிறிஸ்துவத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால், பொருள்வளம் படைத்த சிலர், தாம் தேடிய சொத்துக்கள் தம் மனைவிக்கும் மகள்களுக்கும் சேர வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில், கிறிஸ்துவர்களானமையும் நிகழ்ந்துள்ளது.
விதிவிலக்குகள்: தமிழ்ச் சமூகத்தின் பெண்கள் அனைவருமே தனிச் சொத்துரிமை அற்றவர்களாக இருந்துள்ளார்கள் என்றும் கூற முடியாது என்பதற்கான சான்றுகளை ஆய்வாளர் கனகலதா முகுந்த் முன்னர் கூறிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் (மேலது). கீழக்கரை இஸ்லாமியப் பெண்கள் தாயின் சொத்துக்களுக்கு உரிமை உடையவர்களாக இருந்துள்ளனர். மணக் கொடையாக வீடு ஒன்றைப் பெறும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. நகரத்தார் சமூகத்துப் பெண்கள் வட்டித்தொழிலை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவை தவிர, பெண்களுக்குத் தனிச் சொத்துரிமை வழங்கிய வேறு சில சமூகங்களும் உண்டு.
புதிய சட்டங்கள்: கணவர் சொத்தில் மனைவிக்கு உரிமை வழங்கும் சட்டம் இந்திய அளவில் 1956இல் அறிமுகமானாலும் தந்தையின் சொத்திலும் பூர்விகச் சொத்திலும் உரிமை வழங்கப்படாதிருந்தது. பூர்விகச் சொத்திலும் உரிமை வழங்கும் சட்டத்தை 1985இல் ஆந்திராவில் என்.டி.ராமாராவும் 1989இல் தமிழ்நாட்டில் மு.கருணாநிதியும் அறிமுகம் செய்துள்ளனர். - ஆ.சிவசுப்பிரமணியன், பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in
