

இந்தியாவிலேயே முதன்முறையாக 1994 இல் ‘நீர் மேலாண்மைக் கொள்கை’யைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், கழிவுநீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தத் தமிழ்நாடு தயங்குகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமானோர் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள் (54%); இது தேசியச் சராசரியைவிட அதிகம்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசியக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் விவரப் பட்டியல் (2021) அறிக்கையின்படி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 6,421 மில்லியன் லிட்டர் (மி.லி.) கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இவற்றில் 15% மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மத்திய அரசின் தூய்மை நிலை (2016) அறிக்கையின்படி தமிழகக் கிராமங்களில் கழிவுநீர் 46.3% திறந்தவெளியிலும், 23.4% குளம், குட்டைகளிலும், 18% ஓடைகள், சிற்றாறுகளிலும், 7.3% ஆறுகளிலும், 5% மற்ற வகையில் எவ்விதச் சுத்திகரிப்புக்கும் உட்படுத்தப்படாமல் வெளியேற்றப்பட்டுள்ளன. இதனால் நோய்த்தொற்று அபாயம் உள்ளது.
2014இல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாசுக் கழிவு, கழிவுநீர் மேலாண்மை செயல்முறை வழிகாட்டியைப் பின்பற்றும்படி தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இது உரிய பலனை அளிக்கவில்லை. கழிவுநீரை முறையாகச் சுத்திகரிக்காமல் வெளியேற்றுவோருக்கு அபராதம் விதித்தல், தமிழகமெங்கும் செயல்படும் செப்டிக் டேங்க் வாகனங்களைக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளதே நிதர்சன நிலை.
பெருகிவரும் இந்தக் கசடு, கழிவுநீர் மாசுபாட்டை முற்றிலும் அகற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலைமையில் (1992-1997), மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி - வளர்ச்சி நிறுவனம் (DRDO) ‘பயோ செப்டிக் டேங்க் தொழில்நுட்ப’த்தைக் கண்டறிந்தது. எரிசக்தி உதவியின்றி இயற்கை முறையில் இயங்கும் இந்த செப்டிக் டேங்குக்குக் குறைந்த அளவு இடமே போதுமானது; செலவும் குறைவு. இந்தத் தொழில்நுட்பத்தில் நுண்ணுயிர்கள் இயற்கைக்குப் பாதிப்பில்லாத அறிவியல்ரீதியாக உற்பத்திசெய்யப்பட்டு, முறையான சோதனைக்குப் பிறகு பயோ செப்டிக் டேங்குக்குள் செலுத்தப்படுகின்றன. ஒருமுறை மட்டுமே பயோ செப்டிக் டேங்குக்குள் செலுத்தப்படும் நுண்ணுயிர்கள், தாமாகவே இனப்பெருக்கம் செய்துகொள்ளும் தன்மை கொண்டவை. இயற்கையைப் பாதிக்காத வகையில், பயோ செப்டிக் டேங்குகளை சிமென்ட் கான்கிரீட் கொண்டு (RCC Precast) உருவாக்குவதே சிறந்தது. 1997இல் இந்திய ராணுவத்தில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட பயோ செப்டிக் டேங்க், இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.
2013இல் டிஆர்டிஓ அமைப்பு இந்தத் தொழில்நுட்பத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நாடு முழுவதும் கொண்டுவந்தது. ரூ.15 லட்சம் உரிமத்தொகை பெறப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு இத்தொழில்நுட்பம் வழங்கப்பட்டது; இந்தியாவில் இதற்கான உரிமத்தைப் பெற்ற முதல் மாநிலம் தமிழகம்தான்.
நாடு முழுவதும் தனியார், அரசுக் கட்டிடங்களில் 20,000-க்கும் மேற்பட்ட பயோ செப்டிக் டேங்குகள் அமைக்கப்பட்டுச் சிறந்த முறையில் செயல்பட்டுவருகின்றன; 2013 தொடங்கி இன்று வரை இந்திய ரயில்வேயில் அனைத்து ரயில்களிலும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பயோ செப்டிக் டேங்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பயோ செப்டிக் டேங்குகள் மூலம் நாளொன்றுக்கு 50 மி.லி. கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆனால், இந்த அளவு அதிகரிக்கப்பட வேண்டும். அனைத்துப் புதுக் கட்டிடங்களுக்கும் வரைபட அனுமதி அளிக்கும்போதே இந்தத் தொழில்நுட்பத்தை நிறுவ வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க உள்ளாட்சி அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பைப் போலவே கழிவுநீர் சுத்திகரிப்பும் முக்கியம். திடக் கழிவுகளை அகற்ற ஜிஎஸ்டி விலக்களிக்கப்பட்டிருப்பதைப் போல், டிஆர்டிஓ-வின் பயோ செப்டிக் டேங்குகளுக்கும் ஜிஎஸ்டி விலக்களிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். - பா.சந்திரேசகரன், தொடர்புக்கு: bc.sekaran04@gmail.com