புதுமைப்பித்தன் எழுத்து 100: புதுமைப்பித்தனை வாசித்தல்

புதுமைப்பித்தன் எழுத்து 100: புதுமைப்பித்தனை வாசித்தல்
Updated on
3 min read

பாரதியை ‘மகாகவி’ என்று சொல்வதை ஆரம்பத்தில் ஆய்வாளர்கள் சிலர் ஏற்க மறுத்தனர். அவரது பாடல்களின் சொல்லாற்றலை, பொருண்மை அழகைத் தரிசித்த தமிழ்ச் சமூகம், அவரது மகோன்னத இடத்தை உறுதிசெய்த பிறகு, அவரை ‘மகாகவி’ என ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். புதுமைப்பித்தன் மறைவுக்குப் பின் அவருக்கு நேர்ந்த கதியும் கிட்டத்தட்ட இதேதான். சுந்தர ராமசாமி, தொ.மு.சி. போன்றவர்கள் ‘புதுமைப்பித்தன் மலர்’ வாயிலாக மீண்டும் அவரது மாபெரும் ரூபத்தை மீட்டெடுத்தனர். பின்னர்தான் பாரதி, புதுமைப்பித்தன் என்ற வரிசைப் பாதையைத் தமிழின் நவீன மரபு கண்டடைந்தது. அதில் ஜெயகாந்தன், ஆதவன், சுந்தர ராமசாமி, வண்ணநிலவன் என அழகிய வரிசை உருவானது.

புதுமைப்பித்தன் எழுத்து வீச்சு: இன்றைய தேடல் நிறைந்த புதிய வாசகன் மட்டுமல்ல, நாளைய வாசகனுக்கும் புதுமைப்பித்தனிடம் பெற ஏதோ ஒன்று மீதமிருக்கிறது. அந்தத் தேடலுக்குப் பெயர் புதுமை. சுந்தர ராமசாமி அந்தப் பெயரைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் எக்கச்சக்கமாகக் கிண்டலடித்திருக்கிறாராம். அதென்ன ‘புதுமைப்பித்தன்’, புதுமையின் மீது பித்து அதிகமான நிலையோ என்று அவருக்குக் கேள்விகள் எழுந்தன. பித்தம் அதிகமானால் அதில் தெளிவு இருக்காதே என்றெல்லாம் அவர் ஆரம்பத்தில் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாராம். ஆனால், மரபான கதை சொல்லும் பாதைக்கு மாறாகப் புதுமைப்பித்தன் குறுக்குப் பாய்ச்சல் செய்து, புதிய இலக்கியப் பயிர்களைத் தழைக்கச் செய்ததைக் காணநேர்ந்த பிறகுதான், அவர் தவிர்க்க முடியாதவர் என்ற புரிதல் சு.ராவுக்கு ஏற்பட்டுள்ளது.

உண்மையில் புதுமைப்பித்தனின் எழுத்து வீச்சை இன்னமும் யாரும் தாண்டவில்லை என்பதுதான், தமிழ் இலக்கிய வரலாற்றின் சோகம். என்றாலும், புதுமைப்பித்தனின் உரைநடைப் பாதையில் சென்ற நவீனத் தமிழ் இலக்கியப் பயணத்தின் தூரம் மிக நீண்டது. அந்தப் பயணத்தைச் சாத்தியப்படுத்திய படைப்பாளிகளின் எண்ணிக்கையும் அளப்பரியது. ஜெயகாந்தனிடம் சமூகப் பார்வை இருக்கிறது. ஆனால், நகைச்சுவை இல்லை. சுஜாதாவிடம் நகைச்சுவை இருக்கிறது. ஆனால், முற்றுமுழுதான சமூகப் பார்வை இல்லை. ஆதவனிடம் சமூகமும் நகைச்சுவையும் எல்லையற்ற தேடலும் இருக்கிறது. பாமரனிடம்கூடப் பேச முடிகிற புதுமைப்பித்தனின் எளிய அளவளாவல் ஆதவனிடம் இல்லை. சுந்தர ராமசாமியிடம் மொழியின் பிரக்ஞையும் உணர்வின் மெய்மையும் ஒரு கவிதையைப்போலப் பிரவாகம் எடுக்கிறது. ஆனால், புதுமைப்பித்தனுக்கு வாய்த்த எல்லையற்ற கற்பனை வளம் சற்றே குறைந்துவிடுகிறது.

இலக்கிய சிருஷ்டியினூடே ஜெயமோகனுக்கு நேர்ந்த அரசியல் குறுக்கீடுகளும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நேர்ந்த மேலை இலக்கியத் தாக்கத்திலிருந்து விடுபட முடியாத வாசிப்புச் சுமையும் புதுமைப்பித்தனின் நகைச்சுவையின் சிறு வாசம்கூட நெருங்க முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டன. இருவரது மாயவாதப் புனைவு வெளிகளிலும் புதுமைப்பித்தனின் சாயல்களையும் அதை மீறும் முயற்சிகளையும் காண முடிகிறது என்பதை மறுக்க முடியாது. அசோகமித்திரன் புதுமைப்பித்தனைவிட அதிகமாகவே பெண்கள்மீது கொண்ட அக்கறையையும் கவலையையும் காண முடிகிறது. ஆனால், புனைகதைகளை விடப் பத்தி எழுத்துகளில்தான் அசோகமித்திரனின் நகைச்சுவை பீறிட்டெழுகிறது. இந்நிலையில்தான் நாம் புதுமைப்பித்தனிடம் மீண்டும் வந்துசேர வேண்டியிருக்கிறது.

புதுமைப்பித்தனின் ‘புதுமை’ என்ன?: மிகப் பெரிய மக்கள் சமுதாயமும் உற்றார் உறவினர்களும் வாய்ப்பதோடு, அவர்களில் ஒருவராக அக்கூட்டத்தின் இடையே வாழப் பழகியவருக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களிலிருந்துதான் இந்த அபரிமிதமான நகைச்சுவை உணர்வு பீறிட்டெழும். அவரது எழுத்துகள் வாயிலாக இதை வாசித்துணர முடிகிறது. புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்கள் பலரிடமும் யாரையும் புண்படுத்தாத, எல்லோரையும் அரவணைக்கும் இந்த நகைச்சுவை அம்சத்தைக் காண முடியும். எம்.வி.வெங்கட்ராம் கதைகளிலும் நகைச்சுவையைக் காண முடியும். மிகப் பெரிய வாழ்வனுபவமும் அவரது கதைகளில் வெளிப்படும். அழகியல் சொல்முறையில் ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, கு.ப.ரா, மௌனி போன்றவர்களிடம் காணப்படும் கதைக் கச்சிதம் புதுமைப்பித்தனிடம்கூடச் சில வேளைகளில் காண முடிவதில்லை. என்றாலும், இவர்கள் பலரும் தவறவிட்டது ‘புதுமை’. அதென்ன புதுமை? நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை அவர் எழுதியிருப்பினும் சிற்சில கதைகளின் வழியே அதைப் புரட்டிப் பார்க்கலாம்.

துப்பறியும் கதை, வரலாற்றுக் கதை, புராணக் கதை, குடும்பக் கதை, சின்னஞ்சிறு துணுக்குக் கதைகள் எனப் பலரும் எழுதியதை இவர் எழுதிப்பார்க்கும்போது, நவீனத்துவம் கலந்த அபரிமிதமான புனைவுவெளியாக அது விரிகிறது. ‘மனிதன், மனிதம், மனிதாம்சம்’ இதுதான் தூக்கலாகத் தெரிகிறது. வாடகை கட்டமுடியாமல், மளிகைக் கடை பாக்கி அடைக்க முடியாமல் திணறும் நடுத்தர வாழ்க்கையிலும் கடவுளையே ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, காபி வாங்கிக் கொடுத்து, கதை பேசியபடியே வீட்டுக்கு அழைத்துவந்து, விருந்தினராகத் தங்கவைத்து, தனது பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டவைத்தது ஒரு கற்பனைதான் (‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’). ஆனால், அதுதான் எவ்வளவு சுவையானது. இவரது சொந்த வாழ்க்கையின் அவலம் இலக்கியத்தில் அங்கதமாக எதிரொலிக்கிறது என்கிற கோ.கேசவன் வார்த்தைகள் புதுமைப்பித்தன் யார், அவரது எழுத்துகள் எப்படிப்பட்டவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

புதுமைப்பித்தனின் கதையுலகு: நகரத்தில் வாழ நேர்ந்த புதுமைப்பித்தனுக்கு அதன் முரண்களைப் பேசாமல் இருக்க முடியவில்லை. ‘பொன்னகரம்’ கதை நகரத்தை நரகம் என்றே சொல்கிறது. இன்னொரு கதையில் கடைக்கு வருவோரிடத்தில் எல்லாம் சிற்றுண்டி வகைகளைப் படபடவென ஒப்பிக்கும் சர்வர் ஒரு மெஷினோ என வியக்கிறார். இவரது கைக்குட்டை கீழே விழுந்தபோது, ‘சார்... உங்க கர்சீப்’ எனக் கொடுப்பதைப் பார்த்து மனிதன்தான் என நிம்மதியடைகிறார். சென்னை எலெக்ட்ரிக் டிரெயினில் பயணிக்கும்போது, எதிரே வந்தமரும் பெண்களை நினைத்துச் சிலாகிக்கும் ‘சுப்பையா பிள்ளையின் காதல்கள்’ வெறும் கற்பனைகள்தான் என்பதையும் சிரிக்கச்சிரிக்கச் சொல்கிறார்.

பழமைவாத அடிமைத்தளையில் சிக்கியபோதும், புதுமைப்பித்தன் காட்டும் பெண்கள், மீறல்களுக்கான அசாதாரணமான முடிவுகளை வெகுசாதாரணமாக எடுக்கிறார்கள். தவறான அர்த்தங்கள் கற்பிக்கும் உலக நியதிகளின் நடுவே ‘இயற்கையின் தேவை’ (கல்யாணி, வாடாமல்லிகை) என்றொரு அழகான சொற்றொடரை முன்வைக்கிறார். அக்கால மனிதர்கள் பெரும்பாலும் கடவுள் மீதே பாரத்தைப் போட்டுவிட்டுக் காரியங்கள் ஆற்றச் செல்வதாலோ என்னவோ ஏராளமான கதைகளில் கடவுள் கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். மத நிறுவனங்களின் கட்டுத்திட்டங்களில் சிக்கித் தவிக்கும் மனிதர்களைக் கைதூக்கி மேலே ஏற்ற முயல்கிறார். யதார்த்த வாழ்க்கை முறைக்காக மட்டுமே சாதியப் பெயர்களைப் பயன்படுத்தியதோடு, சுயசாதி எள்ளலையும் அவர் செய்யத் தவறியதில்லை. ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ என்ற கதையில், அவரது மேதைமையைவிட மேட்டிமைத்தனம் வெளிப்பட்டதாக விமர்சகர்கள் பலரும் சாடினர். சாதிய அடுக்குகளின் அவலங்களைக் கடுமையாகப் பகடி செய்யும்விதமாகத்தான் இக்கதை வெளிப்பட்டுள்ளதை நுணுகிக் கற்பவர்கள் உணர முடியும்.

தன்னை ஒரு கதையில் நாஸ்திகன் எனவும் அழைத்துக்கொள்கிறார் (‘விநாயகர் சதுர்த்தி’). அதேநேரம், கடவுள் இருப்பது உண்மையானால் மனிதர்களை ஏன் இப்படி மோசமான ஸ்திதியில், ஆசைகளின் பாழ்வெளியில் வைத்திருக்கிறார் என்பதுதான் அவரது ஆதாரமான கேள்வி. சீதையைத் தேடுவதாகக் காட்டில் பல காலம் அலைந்து திரிந்து வாழ நேர்ந்த ராமன் தூய்மையானவராம். அவருக்கு எந்தச் சோதனைகளும் வேண்டாம். ஆனால், ராவணனின் மாளிகைத் தோட்டத்தில் வாழ நேர்ந்தும் அவரை நெருங்கவிடாமல் வைத்திருந்த சீதை அக்னிப் பரீட்சையில் இறங்க வேண்டுமாம். இந்தச் சந்தேகங்கள் ‘அகலிகை’, ‘சாபவிமோசனம்’ கதைகளில் கடுமையாக வெளிப்பட்டுள்ளன. சரயு நதிக்கரை பர்ணசாலையில் தன்னைத் தேடிவந்த சீதையைக் கண்ட அகலிகை ஆர்த்தெழுகிறாள், “அவன் கேட்டானா? நீ ஏன் செய்தாய்?” என்று அக்னிப் பரீட்சையில் இறங்கியதைக் கேள்வி எழுப்புகிறாள். இதுதான் புதுமைப்பித்தன் எழுப்பும் கேள்வி. மனைவியையே உலகத்தின் சந்தேகத்தைத் தீர்க்கத் தீயில் இறக்கிய இப்படிப்பட்ட ஆண் மூலமாகவா எனக்கு விடுதலை என்று சாபவிமோசனத்தை ஏற்றுக்கொள்ள விருப்பமின்றி மீண்டும் கல்லானாள் என முடியும் இந்தக் கதை.

இன்று எழுதும் பலரும் மொழிகளில் கைக்கெட்டாத விநோதச் சொற்களை வைத்துக்கொண்டு, மிரட்சியை உண்டு பண்ணுகிறார்கள். வாசகனை உள்ளன்போடு அணுகி, எளிய முறையில் சொன்ன புதுமைப்பித்தன் கதைகள்தான் இன்று வரை பேசப்பட்டுவருகின்றன. ‘காஞ்சனை’, ‘பொன்னகரம்’, ‘தெருவிளக்கு’ போன்றவை மிகவும் எளிமையானவைதான். ஆனால், ஆழமானவை. இதன் சூட்சுமம் பிடிபட்டுவிட்டால் வாசகன் கொண்டாடத் தொடங்கிவிடுவான். ‘கபாடபுரம்’, ‘சிற்பியின் நரகம்’, ‘கயிற்றரவு’ போன்று விநோதமான உள்ளடகங்களைக்கூட புதுமைப்பித்தன் எடுத்தாண்டிருக்கிறார். ஆனால், அதனை மிகவும் சுவையாக எடுத்துப் பேசியிருக்கிறார். ஒரு படைப்பாளி கைக்கெட்டாத உலகங்களை, தத்துவங்களை, கற்பனைகளைக்கூடக் கதைகளில் உள்ளே கொண்டுவரலாம்.ஆனால், வாசகனை அணுகவிடாமல் செய்துவிடக் கூடாது என்பதை விதவிதமாகப் பேசியுள்ள அவரது பல படைப்புகளை உள்வாங்கும் ஆவலோடு வாசித்துப் புரிந்துகொண்டால், நாம் அவரைக் கடந்துசெல்ல வாய்ப்பிருக்கிறது.

புதுமைப்பித்தனின் முதல் கதை ‘குலோப்ஜான் காதல்’, ‘காந்தி’ இதழில் 1933 அக்டோபர் 18 அன்று வெளிவந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in