

கு.அழகிரிசாமி என்றதுமே, அவரின் ‘அன்பளிப்பு’ கதையில் வரும் சாரங்கனின் பெயரே பலரின் நினைவுக்கு வரும். இன்னும் சிலருக்கு, ‘ராஜா வந்திருக்கிறார்’ சிறுகதையில் இடம்பெற்ற சிறுவர்கள் கண்முன் வந்து செல்லலாம். இப்படி, ஓர் எழுத்தாளரின் முதன்மையான நினைவுகளாக அவர் உருவாக்கிய குழந்தைக் கதாபாத்திரங்கள் இருப்பது, இலக்கியச் சூழலில் அபூர்வமே.
பெரியவர்களுக்கான கதையில் சிறுவர்களை வலம்வர வைத்தது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு என்றே கதைகளை எழுதியிருக்கிறார் அழகிரிசாமி. ‘மூன்று பிள்ளைகள்’, ‘காளிவரம்’ ஆகிய நூல்கள் அவரின் குழந்தை இலக்கியப் படைப்புகள் எனத் தெரியவந்துள்ளன. ஆனால், அவை இரண்டுமே தற்போது அச்சில் இல்லை. அவரின் மொத்த படைப்புகளாக வெளிவந்திருக்கும் நூல்களில் அவை இடம்பெறவும் இல்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் ‘மூன்று பிள்ளைகள்’ நூலைக் கண்டெடுத்தேன்.
1961இல் வெளியான ‘மூன்று பிள்ளைகள்’, சிறார்க்கான ‘மூன்று பிள்ளைகள்’, ‘ஏழை கமலா’, ‘பயந்தாக்கொள்ளி’ ஆகிய மூன்று கதைகள் கொண்ட தொகுப்பு நூல். மகாலிங்கம் என்பவர் சிறுவயது முதல் கடும் உழைப்பில் செல்வம் சேர்த்தவர். அவருக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் பெரியவர்களாக ஆனதும் திருமணம் செய்து வைத்து சொத்துகளைப் பிரித்துக்கொடுக்கிறார். ஆனால், தந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மூன்று பிள்ளைகளும் தட்டிக்கழிக்கின்றனர். அதற்குத் தீர்வாக, நண்பரின் உதவியோடு மகாலிங்கம் செய்யும் ஒரு தந்திரமே மீதிக் கதை. இறுதியில் பிள்ளைகள் அவரைப் புரிந்துகொள்வார்கள்; அரவணைப்பார்கள். இதன் கரு, நீண்ட காலமாகச் சொல்லப்படும் நீதிக் கதைகளின் ஒரு கூறுதான். ஆனால், அதைத் தமிழ் நிலத்தின் வாழ்க்கை சார்ந்த காட்சிகளாக எழுதியிருப்பதே அழகிரிசாமியின் வெற்றியாகப் பார்க்கலாம்.
‘ஏழை கமலா’ - இந்தக் கதையின் நாயகியான கமலா ஒரு சிறுமி. அவள் கஷ்டப்பட்டு நூறு ரூபாய் சேர்க்கிறாள் (கதை நடக்கும் காலம் 1950-கள் எனில், இப்போது அதன் மதிப்பு பல மடங்கு அதிகம்). அப்போது அங்கு வரும் ஒருவன், இரக்கப்படும்படி பேசி, கமலாவிடம் இருந்த நூறு ரூபாயைக் கடனாகப் பெற்றுச் செல்கிறான். பல மாதங்களாகியும் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதுவரை யதார்த்தபாணி கதையாகச் செல்வது, அந்தப் பணத்தைத் தேடி கமலா செல்லும்போது மாய யதார்த்தத்திற்குத் தாவுகிறது. கமலாவோடு புலியும் நரியும் துணைக்குச் சேர்கின்றன. இறுதியில் கமலாவுக்குப் பணம் கிடைக்கிறது. மாய யதார்த்தம் நுழைந்தவுடன், சிறுவர்களின் வாசிப்பிலும் துள்ளல் ஏற்படவே செய்யும். நாட்டார் மரபில் சொல்லப்படும் கதையின் துணுக்கைத் தன் கதை சொல்லும் பாணியில் எழுதியிருப்பார் அழகிரிசாமி.
தொகுப்பின் மூன்றாம் கதையான ‘பயந்தாங்கொள்ளி’ மற்ற இரண்டையும்விட வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது, ராணுவத்தில் சேர்கிறார் நடராஜன். உண்மையில் அவர் பயந்தாங்கொள்ளி என்பதால், அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பித்துச் சொந்த ஊருக்கே ஓடிவருகிறார். ஆனால், நடந்த போரில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்றழித்ததாகவும், பிரிட்டிஷ் ராஜா விருந்துக்கு அழைத்ததாகவும் வீரக்கதைகளைப் பேசித் திரிகிறார். அதைக் கேட்டு மக்கள் அவருக்குத் தரும் மரியாதைகள் ஏராளம். சில நாட்களில் ராணுவத்திலிருந்து வரும் வீரர்கள் நடராஜனை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார்கள்.
யதார்த்த பாணியில் எழுதப்பட்ட இக்கதையில் நடராஜன் அடிக்கும் லூட்டிகள் சிரிப்பை வரவழைப்பவை. அதே நேரம், போரின் தன்மைகள் குறித்தும், ராணுவத்திற்காக வீரர்கள் சேர்க்கப்படும் விதம் குறித்தும் அரசியல் பகடிகளாக இக்கதை கடத்தவும் செய்கிறது.
போர் என்பது எங்கோ இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் ஒன்று மட்டுமல்ல. அது அந்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமத்து மனிதனையும் அங்கே இழுத்துச் செல்ல வைத்துவிடலாம் என்பதைப் பகடியோடு இழைத்திருப்பார் அழகிரிசாமி. அந்த வகையில் இத்தொகுப்பில் முக்கியமான கதையாக இதைப் பார்க்கலாம்.
அழகிரிசாமியின் மற்ற கதைகளைப் போலவே இக்கதைகளிலும் எளிமையும் நிதானமும் பேரன்பும் நிறைந்திருந்தன. கூடுதலாக, சிறார் வாசிக்கச் சிரமப்படக் கூடாது என்பதால், பெரியவர்களின் கதைகளை விடவும் இன்னும் வெளிப்படையான கதை சொல்லும் முறையைக் கையாண்டியிருக்கிறார் அழகிரிசாமி. ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில் பல அடுக்குகளை வைத்திருக்கும் விதமாகக் காட்சிகளும் மொழிநடையும் அமைந்திருக்கும். ஆனால், இக்கதைகளில் அம்மாதிரியான உத்தியைக் கைக்கொள்ளாது, நேரடியான எளிய வாசிப்பு எனும் வரையறைக்குள் கதைகளை அடக்கியுள்ளார்.
கு.அழகிரிசாமியின் நூற்றாண்டில் அவரின் சிறார் இலக்கியப் பங்களிப்புகளும் இந்தத் தலைமுறை சிறுவர்களுக்கு வாசிக்கக் கிடைக்கச் செய்வது அவசியம்.