

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷேகன் கருணாதிலக, ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்தா’ என்கிற தன்னுடைய இரண்டாவது நாவலுக்காக இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டது இந்நாவல். இதன் முதன்மைக் கதாபாத்திரமான அல்மெய்தா ஒரு ஒளிப்பட இதழாளர். அவர் இறந்துவிட்ட பிறகு பூவுலகில் வாழும் தனது நண்பர்களைத் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு ஏழு நாட்களுக்கு அவருக்குக் கிடைக்கிறது. அவர்களின் மூலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய ஒளிப்படங்களை மீட்டெடுத்து இலங்கைப் போர்க் குற்றங்களை அவர் அம்பலபடுத்துகிறார். “வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான சாகசம் நிறைந்த பயணத்தை வாசகருக்கு அளிக்கும் இந்த நூல், அதன் வழியாக உலகின் இருண்மையான இதயம் என்று ஆசிரியரால் அழைக்கப்படும் இடத்துக்கு அழைத்துச்செல்கிறது” என்று விருதுத் தேர்வுக் குழுவின் தலைவர் நீல் மெக்கிரெகோர் கூறியுள்ளார்.
இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாச்சி 1992இல் ‘தி இங்க்லிஷ் பேஷண்ட்’ நாவலுக்காக புக்கர் பரிசைப் பெற்றிருந்தார். அதற்குப் பிறகு இலங்கையைச் சேர்ந்தவர் இப்போதுதான் புக்கர் பரிசைப் பெறுகிறார்.
புக்கர் பரிசைப் பெற்றுக்கொண்ட பிறகு ஏற்புரை வழங்கிய கருணாதிலக “ஊழல், இனவெறுப்பு ஆகியவை எப்போதும் பயனளிக்காது என்று புரிந்துகொள்ளப்பட்ட காலம் இலங்கையில் மலரும். அப்போதும் இந்த நாவல் படிக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். அதோடு “இலங்கைச் சொந்தங்களே எமது கதைகளைக் கூறுவோம், கூறிக்கொண்டே இருப்போம்” என்று தமிழிலும் கூறினார்.
- நந்தன்