காங்கிரஸின் புதிய மீட்பர்?

காங்கிரஸின் புதிய மீட்பர்?
Updated on
2 min read

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக சீதாராம் கேசரி பதவி வகித்தபோது, கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி தலைமைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். கணவர் ராஜிவ் மரணத்துக்குப் பிறகு அரசியலுக்கு வர விரும்பாத சோனியா, ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்வு அளிக்கும்வகையில் அரசியலுக்குள் வந்தார்; சீதாராம்கேசரி அதை இப்படி வர்ணித்தார்: ‘காங்கிரஸின் மீட்பராக சோனியா வந்துள்ளார்’. ஆனால், கால் நூற்றாண்டுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பே வேண்டாம் என நேரு குடும்பம் ஒதுங்கியிருப்பது ஒரு வரலாற்றுமுரண்.

தென்னிந்தியத் தலைவர்: இந்திரா காந்தி காலத்திலேயே நேரு குடும்பத்தைச் சாராதவர்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். ஆனால், நெருக்கடிநிலை காலத்துக்குப் பிறகான தேர்தல் தோல்வி கட்சிக்குப் பெரும் பின்னடைவைக் கொண்டுவந்துவிட, மீண்டும் கட்சியின் தலைவராகப் பொறுபேற்றார் இந்திரா. அன்று இந்திராவுக்கு இருந்த தலைமைப் பண்பு இன்று அவருடைய குடும்பத்தினருக்கு இல்லாமல் போனது வியப்புதான். இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் வெற்றுபெற்று தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார், தென்னிந்தியரான மல்லிகார்ஜுன கார்கே.

காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பம்தான் வழிநடத்த முடியும் என்பது காங்கிரஸாரின் பொதுப்புத்தியில் நிறுவப்பட்ட ஒன்று. வரலாற்றில் இதுவரை எதிர்கொண்டிராத பின்னடைவையும் இக்கட்டான காலத்தையும் காங்கிரஸ் கடக்கும் சூழலில், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராவது, அக்கட்சியின் மீட்சிக்கு உதவுமா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பட்டியலினத்தவர் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் நிலையில், பாபு ஜெகஜீவன் ராமுக்குப் பிறகு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவராகக் கார்கே தலைவராகியிருப்பது காங்கிரஸ் கட்சியின் மீதான நன்மதிப்பைத் தேசிய அளவில் நிச்சயம் உயர்த்தும்.

சுதந்திரம் என்னும் கேள்வி: அதே வேளை, அரசியலில் 50 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கார்கே சுதந்திரமாகச் செயல்பட முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கட்சியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிரபலமானவர்கள் இருக்கும்போது, புதிய தலைவர் சுதந்திரமாகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது. தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்தாலும் கட்சியின் உச்சபட்ச அதிகார மையமாக ராகுல் காந்தி இருப்பார் என்பது தெளிவு. கார்கேவின் மீது நேரு குடும்பத்தின் நிழல் நீண்டு படர்ந்திருக்கும் என்பதே நிதர்சனம். உள்கட்சி விவகாரங்களிலும் பிரச்சினைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய நடுநிலைத்தன்மையும் நியாய உணர்வும்தான் கட்சித் தலைவரின் தார்மிக அதிகாரத்துக்கான அடிப்படை. ஆனால், தலைவர் தேர்தலையொட்டி ராஜஸ்தானில் எழுந்த சச்சரவு, காங்கிரஸ் மாறவில்லை என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டியது. தங்கள் விசுவாசியான அசோக் கெலாட்டைத் தலைவராக்க நேரு குடும்பம் விரும்பியபோதும், ஆட்சி அதிகார மாற்றத்தில் எழுந்த சலசலப்புகளால் அது நிகழவில்லை. இது நேரு குடும்பத்தின் அதிகாரத்தையே வலுவிழக்கச் செய்திருக்கிறது. அதன் பிறகே, அக்குடும்பத்தின் மறைமுக ஆதரவுடன் கார்கே களமிறக்கப்பட்டார். தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பத்தால் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியாத சூழலில், ஒரு புதிய தலைவரின் அதிகாரம் எப்படிச் செயல்படும் என்பதைப் பற்றிய கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது கார்கேவுக்குச் சவாலாக அமையலாம்.

புதிய தலைமையின் கடமைகள்: காங்கிரஸில் சோனியாவின் யுகம் தொடங்கியதிலிருந்தே தலைவர்கள் பிரிந்து செல்வதும் தொடங்கியது. சரமாரியான கட்சித் தாவல்களும் தலைவர்கள் கட்சியிலிருந்து தொடர்ச்சியாக விலகிக்கொண்டிருப்பதும் இன்றைய காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனங்கள். முந்தைய தலைமை இவற்றை அசிரத்தையாக அணுகியதால் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸ் புத்துயிர் பெற, பிரிந்துசென்றவர்களைக் கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும். உட்கட்சிரீதியாகப் பல மாறுதல்களை மேற்கொண்டு, கோஷ்டிப் பூசல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இந்தப் பணிகளைத் தொய்வில்லாமலும் துணிச்சலாகவும் முன்னெடுக்க கார்கேவுக்கு நேரு குடும்பத்திடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மண்ணின் மைந்தரான கார்கேவின் தலைமை, அங்கு காங்கிரஸ் கட்சிக்கு நல்விளைவுகளைத் தோற்றுவிக்கக்கூடும். இமாச்சலப் பிரதேசம் தொடங்கி, அடுத்த ஆண்டு இறுதி வரை வரிசையாகப் பல மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன. காங்கிரஸ் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களும் இதில் அடங்கும். முத்தாய்ப்பாகஅடுத்த 17 மாதங்களில் மக்களவைத் தேர்தலையும் நாடு சந்திக்கவிருக்கிறது. கடந்தஇரண்டு மக்களவைத் தேர்தல்களில் சந்தித்தபடுதோல்விகளால் காங்கிரஸ் கட்சி துவண்டுகிடக்கிறது.

அந்நிலையை மாற்றும் முனைப்புடன் நாடு முழுவதும் கட்சிக்கான ஆதரவை ஒருங்கிணைக்க ராகுல் ‘இந்திய ஒற்றுமைப் பயண’த்தைத் தொடங்கி நடத்திவருகிறார்; தேசத்தை ஒன்றிணைக்கும் அவசியத்தையும் இந்தப் பயணத்தில் ராகுல் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். ஆனால், கோஷ்டிப் பூசலும் ஒற்றுமை இல்லாத் தலைவர்களும் நிறைந்திருக்கும் ஒரு கட்சியால் தேசத்தை எப்படி ஒன்றிணைக்க முடியும்? இந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை கார்கே உணர்ந்து செயல்பட்டால், காங்கிரஸ் மீண்டெழக் கூடும். இன்றைய காங்கிரஸுக்கு ஒரு மீட்பர் தேவை. அன்று சோனியா மீட்பராகப் பார்க்கப்பட்டார்; இன்று கார்கே ஒரு மீட்பரா என்ற கேள்விக்கான விடை காலத்தின் கைகளில் இருக்கிறது.

டி.கார்த்திக்
தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in