

மொழிப் பற்றாளர், எழுத்தாளர், பேச்சாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசை விற்பன்னர் எனப் பன்முகம் கொண்ட மகா மதுர கவிஞர் வீ.வே.முருகேச பாகவதர், சென்னை கொன்னூரில் 1897 அக்டோபர் 21 அன்று பிறந்தார். சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் முதலிய அமைப்புகளோடும் தொழிற்சங்கங்களோடும் இணைந்து இயங்கியவர். பாரதிதாசன் காலத்திய தமிழ்த் தேசியச் சாயல் இவரது கவிதைகளில் இருந்தாலும் பூர்விக, ஒடுக்கப்பட்ட மக்களின் பாடுகளை இசைத்ததில் பூர்விகக் குடிகளின் பாவலராக மிளிர்ந்திருக்கிறார். திராவிட இயக்க மேடைகளில் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் பகுத்தறிவுக் கருத்துகளைக் கதாகாலட்சேபம் வழியாகப் பரப்புரை செய்திருக்கிறார்.
கவித்துவமும் துயரமும் கலந்து எழுதப்பட்ட அகவல் பாடலான ‘தோல் பதனிடுவோர் துயரம்’ இவர் எழுதியதில் மிக முக்கியமான நூல். காட்டு விலங்குகள் வீட்டு விலங்குகளாக மாற்றப்பட்ட வரலாற்றைச் சொல்லி, வீட்டு விலங்குகள் மனிதர்களுக்கு உணவாகிய விதம், கடைசியில் ஆடு, மாடு என்னும் பெயர் நீங்கி ‘தோல்’ எனச் சுட்டப்படும் நிலை வரை அழகாக விவரித்திருப்பார். ‘புளிக்கின்ற கூழன்றிப் புழுதி யன்றிப் பூவுலகில் வாணாளில் என்ன உண்டோம்? ஒளிப்பின்றிக் கேட்கின்றோம் உழைப்புக் கேற்ற ஊதியமே அளித்திட்டால் அழிந்தா போவீர்?’ என்று தொழிலாளர்களின் குரலாக ஒலிக்கும் பாகவதரின் குரல், தொழிற்சங்கச் செயல்பாட்டில் தொழிலாளர்கள் தம்மை ஈடுபாட்டுடன் இணைத்துக்கொள்ளப் பெரிதும் துணையாற்றியது. கவித்துவமான பல புதிய தமிழ்ச் சொற்களை மிகச் சரளமாகப் பயன்படுத்தியிருப்பதை இவரது தனித்துவமாகச் சொல்லாம். குடிநீர் உரிமையும் கோயில் வழிபாட்டு உரிமையும் மறுக்கப்பட்டமைக்கான எதிர்க்குரலாகப் பாகவதரின் குரல் பல மேடைகளில் ஒலித்திருக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை மறுக்கப்பட்டதைப் புலப்படுத்துவதோடு ஆதிக்கச் சாதிகளை எச்சரிக்கும் பாங்கிலும் இவரது பாடல்கள் அமைந்தன.
அரசு சார்பிலான மதுவிலக்குப் பிரச்சாரத் தூதுவராகப் பணியாற்றியது பாகவதரின் சமூகப் பணியில் முக்கியமான காலகட்டம். அப்போது அவர் எழுதி, பாடிய பாடல்கள் கர்னாடக இசைக் கீர்த்தனைகளாக இருந்தபோதிலும் சொற்கட்டுகள் நாட்டுப்புறத் தன்மையுடன் இருந்தன. ‘தண்ணீரைப்போல் கள்ளைத் தளராமல் குடிப்பவர்க்கு வெண்ணீறும் ஏதுக்கடி – ஞானம்பா வெண்ணீறும் ஏதுக்கடி/ மொந்தைக் கள்ளைத்தூக்கி முகந்தூதிக் குடிப்போர்க்குச் சந்தனம் ஏதுக்கடி - ஞானம்பா சந்தனம் ஏதுக்கடி’ என்னும் பாடல், சித்தர் பாடலின் தாக்கத்தோடு சாமானியர்களின் மனசாட்சியோடும் ஒன்றும் தன்மையுடன் புனைந்தது பாகவதருக்குக் கூடுதல் பலமாக அமைந்தது. பாடலின் அமைப்பை அவ்வாறு அவர் பார்த்துக்கொண்டதுதான் அவரைச் சாமானிய உழைக்கும் மக்களிடம் கொண்டுசேர்த்தது. அதன்வழியாகத்தான் அவர் ஒடுக்கப்பட்ட, சாமானிய மக்களிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, சுயமரியாதை சார்ந்த உரையாடல்களை நடத்திவந்தார். 1974 அக்டோபர் 21 அன்று தன் 77 ஆவது வயதில் பாகவதர் மறைந்தார். சாதியப் பாகுபாடு, போதைப் பழக்கம், பெண் வெறுப்பு முதலியன இச்சமூகத்தில் இருக்கும் வரை பாகவதர் நடத்திய உரையாடலைத் தொடர்வது காலத்தின் தேவை.
அக்டோபர் 21: வீ.வே.முருகேச பாகவதரின் 125ஆவது பிறந்த நாள், 48ஆவது நினைவு நாள்
ஞா.குருசாமி, தமிழ்ப் பேராசிரியர்,
அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை.
தொடர்புக்கு: eyaseelanphd@yahoo.in