எங்கே செல்லும் இந்தப் பாதை?

எங்கே செல்லும் இந்தப் பாதை?
Updated on
3 min read

மாநிலத் தலைநகர் என்பதால் சென்னையின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்குக் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு உண்டு. இது ஓரளவுக்கு உண்மை என்று வைத்துக்கொண்டாலும், ஒரு பெருநகருக்கான-மாநகருக்கான அடிப்படை வசதிகள் என்று எடுத்துக்கொண்டால், சென்னை பல வகைகளில் பின்தங்கியிருக்கிறது. நிறைய சிக்கல்களுடன் இருக்கிறது என்றே கூற வேண்டும். ‘பீக் அவர்’ எனப்படும் அலுவலக - கல்வி நிலையங்களின் வேலை நேரத் தொடக்கத்திலும், முடிவிலும் போக்குவரத்து நெரிசல் சென்னையில் அதிகமாக இருக்கும். ஆனால், வெள்ளத்திலிருந்து காக்க மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் சென்னையில் தொடங்கிய பிறகு, பகல் நேரத்திலும்கூட போக்குவரத்து நெரிசல் பெருஞ்சிக்கலாகத் தொடர்கிறது. அதிலும் மாலை 6 மணிக்கு மேல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது பெரும் சாகசமாகவே மாறிவிட்டது.

போக்குவரத்து நெரிசல் இவ்வளவு மோசமாக இருப்பதற்கு கார்களின் பெருக்கமும் முக்கியக் காரணம். அதே நேரம், நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் மழைநீர் வடிகால் பணியை மேற்கொள்வதற்கு மாநகராட்சி முடிவெடுத்தது மிகவும் தவறான நடவடிக்கையாகும். போக்குவரத்துக்கான முக்கியச் சாலைகள், முதன்மைச் சாலைகளின் அணுகு சாலைகள், போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகள் போன்ற இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேம்பட்ட வகையில் திட்டமிட்டிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், ஓரிடத்தில் சாலையைத் தோண்டிவிட்டு அடுத்த சாலையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது, வடிகாலைத் தனியாகவும் அதற்கான மழைநீர் வடியும் கம்பி வலைப் பகுதியைத் தனியாகவும் அமைப்பது, அடுத்தடுத்த மழைநீர் வடிகால்களில் தொடர்பே ஏற்படுத்தாமல் போவது எனப் பல்வேறு குழப்பங்கள் சென்னை மாநகர் முழுக்க இப்போதும் தென்படுகின்றன. பல இடங்களில் மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டப்பட்ட மண், சாலையின் நடுவிலும் ஓரத்திலும் குவிக்கப்பட்டே கிடக்கிறது.

பல பகுதிகளில் வீட்டின் சுற்றுச்சுவர்கள், பெரும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அல்லது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிவுநீர்க் குழாய்கள், தொடர்புசாதன கம்பித் தொடர்புகள் போன்றவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக, ஏற்கெனவே பல்லாண்டுகளாகப் பெற்றுவந்த மற்ற வசதிகளை இழந்தே ஆக வேண்டுமா? இடையிடையே பெய்துவரும் மழையின்போது சாலையில் கால் வைப்பதற்கே அச்சப்படும் நிலை நிலவுகிறது. விபத்துகள் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளன. மருத்துவ அவசர ஊர்திகள் போன்றவையும்கூட ஆமை வேகத்தில் நகர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.

எப்படி நம்புவது?: மாநகராட்சி ஆணையரும் மேயரும் பணிகள் விரைவாக நடைபெறுவதாகவும், வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக எல்லா பணிகளும் முடிந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். அமைச்சர்களும் முதல்வருமேகூட மழையைச் சமாளிக்கத் தயாராகிவிட்டோம் என்று உறுதிகூறுகிறார்கள். ஆனால், கள நிலவரம் அதை உறுதிப்படுத்துவதுபோல் இல்லை. ஒரு நாளின் பெரும்பாலான நேரம் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் வடிகாலில் நீர் வடிந்து செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள கம்பிவலையின் அமைப்பு, இதற்கான இடைவெளி போன்றவை ஒழுங்கின்றி இருக்கின்றன. பல இடங்களில் கட்டமைப்புப் பணி முடிந்த பிறகும்கூடச் சாலைகள் முழுமையான போக்குவரத்துக்குத் தயாராகவில்லை. ஒரு கட்டமைப்பு வசதியிலேயே இவ்வளவு குழப்பங்கள் இருக்கும்போது, மழைநீர் வடிந்துசெல்ல ஏதுவாக உரிய சாய்மானத்துடன் வடிகால் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்குமா என்பதும் பெருத்த சந்தேகமாகவே உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படாததே 2021இல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்குக் காரணம் என்று மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது தற்போது நடைபெறும் மழைநீர் வடிகால் பணி உண்மையிலேயே பலனளிக்குமா என்பதும் பெரும் கேள்விகளை எழுப்புகிறது.

தொடரும் அலட்சியம்: வெள்ள நீர் வடிகால் பணிகள் தவிர, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளும் தென்சென்னைப் பகுதியில் தீவிரமடைந்துள்ளன. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே பெருமளவு குறுக்கப்பட்டுவிட்ட சாலை தொடங்கி ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி எனப் பல பகுதிகளில் சாலைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பிவிடப்படுகிறது. இது எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. போக்குவரத்து சமிக்ஞைகளின் பயன்பாட்டைக் குறைக்கிறோம் என்கிற பெயரில், நகரின் பெரும்பாலான சாலைகள் ஒரு வழிப் பாதைகளாகவும், ‘U’ வளைவு சாலைகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன. எந்த புத்திசாலி இந்த யோசனையை முன்வைத்தார் என்று தெரியவில்லை. பொதுவாக, போக்குவரத்து மாற்றங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு செயல்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படும். அதில் நல்ல பலன் கிடைத்த பிறகே முழுமையான மாற்றம் செய்யப்படும். ஆனால், இந்தப் புதிய போக்குவரத்து மாற்றம் வசதியாக இல்லை என வாகன ஓட்டிகளும் கனரக வாகன ஓட்டுநர்களும் புகார் தெரிவித்த பிறகும், பல மாதங்களாக இந்த முறையே தொடர்கிறது.

சாலை வரி, வாகனத்துக்கு வரி போன்றவை வசூலிக்கப்படுகின்றன. ஆனால், ஆண்டில் பல மாதங்களுக்கு இதுபோல் போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஓரிடத்திலிருந்து எப்படி மற்றொரு இடத்துக்குச் சென்று சேர முடியும். சாலைகள் தோண்டப்பட்டுக் கிடப்பதாலும் அடைக்கப்பட்டு இருப்பதாலும் வாகனங்கள் சுற்றிச் சுற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டிய நெருக்கடி திணிக்கப்பட்டுள்ளது. நகரின் மேம்பாட்டுக்கு, மக்களின் வசதிக்கு என்கிற பெயரில் மேற்கொள்ளப்படும் இவ்வளவு வசதிகளும் மக்களின் வரிப்பணத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, அந்தப் பணிகள் உரிய தரத்துடனும், ஏற்கெனவே உள்ள பிரச்சினைகள், சிக்கல்களைத் தீவிரப்படுத்திவிடாமலும் இருக்க வேண்டும் என்பது இயல்பாகவே மக்கள் எதிர்பார்க்கும் ஒன்றுதான். ஆனால், அதற்கு மாறாக மழைநீர் வடிகால் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளைக் காரணம் காட்டிப் போக்குவரத்து நெரிசலை அரசும் காவல் துறையும் நீண்ட காலத்துக்குக் கண்டும் காணாமல் இருப்பது மக்கள் மனத்தில் தேவையற்ற அதிருப்தியை நிரந்தரமாக்கிவிடும். - தொடர்புக்கு: editpage@hindutamil.co.i

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in