

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் அக்டோபர் 11 அன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தார். தன் பிள்ளைகளுக்குப் பழங்குடியின சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், மனு நிராகரிக்கப்படவே வேல்முருகன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். சிகிச்சை பலனின்றி மறுநாள் வேல்முருகன் இறந்துவிட, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது.
விசாரணையின்போது இது குறித்து விளக்கமளித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பட்டியலினத்தைச் சேர்ந்த வேல்முருகன் தன் பிள்ளைகளுக்குப் பழங்குடியின சாதிச் சான்றிதழ் கேட்டதாகத் தெரிவித்திருந்தார்; சான்றிதழுக்காக வேல்முருகன் சமர்ப்பித்திருந்த ஆவணத்திலும் தவறு இருந்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்றார். குறவர், நரிக்குறவர் ஆகிய இரண்டு பிரிவுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்குவதில் பல காலமாகப் பிரச்சினை இருந்துவருகிறது. நரிக்குறவர்கள் வெளிமாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த நாடோடிகள், தாங்களே இம்மண்ணின் மைந்தர்கள் என்று குறவர்கள் கூறிவருகின்றனர். தமிழ்நாட்டில் பூர்விகமாக வாழ்ந்துவரும் குறவர்களைப் பழங்குடியினர் (எஸ்.டி.,) வகுப்பில் சேர்க்காமல், பட்டியலின (எஸ்.சி.,) வகுப்பில் சேர்த்திருப்பது குறித்த வாதமும் தொடர்கதையாக இருக்கிறது. இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதிலும் பெரும் தடை நிலவுகிறது.
விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இருளர் சாதிச் சான்றிதழ் இல்லாததால் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது. அது ஊடகங்களில் கவனம்பெற்ற பிறகே அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து, அதன் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து, அரசு பெரிய அளவில் எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில் ஊடகச் செய்தி, மரணம் போன்றவை நிகழும்போது மட்டும் முனைப்போடு செயல்படுவதாகக் காட்டிக்கொள்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல.
பொதுமக்களை அரசு அதிகாரிகள் அணுகும் முறையும் விவாதத்துக்குரியது. பொதுமக்களின் குறைகளைக் களைவதற்காகத்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் ‘மக்கள் குறைதீர்வு முகாம்’ நடத்தப்படுகிறது. அதில் பெறப்படும் மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆட்சியர் உடனுக்குடன் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் நடைமுறை. அது முறையாகச் செயல்படவில்லை என்பதைத்தான் வேல்முருகனின் மரணம் உணர்த்துகிறது. காரணம், இவரும் முதலில் ஆட்சியர் அலுவலகத்தில்தான் மனு கொடுத்திருக்கிறார். இ-சேவை மையத்துக்குச் சென்று இணையவழியில் விண்ணப்பிக்கும்படி அவருக்கு அங்கே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகே அவர் இணையவழியில் விண்ணப்பித்திருக்கிறார்.
வேல்முருகனின் ஊருக்குச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. அப்படி நிகழ்ந்திருக்கும்பட்சத்தில் வேல்முருகனின் குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களை அதிகாரிகளே அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கலாம். அப்படி ஒரு முயற்சியை எடுத்திருந்தால்கூட வேல்முருகனின் தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும். அரசுப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மக்களின் சேவகர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறையோடும் கோரிக்கையோடும் தங்களை நாடி வருபவரைக் கூடுதல் பரிவோடும் கரிசனத்தோடும் அணுக வேண்டியதும் அரசு ஊழியர்களின் கடமைதான்.