

கர்நாடக மாநிலத்தின் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாமா, கூடாதா என்கிற வழக்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வினால் விசாரிக்கப்பட்டது. ஹிஜாப் அணிவதற்கான மாணவி ஒருவரின் உரிமைக்கும் பள்ளிக்கூடங்களில் மதச்சார்பின்மையைப் பேண வேண்டும் என்னும் அரசின் விருப்பத்துக்கும் இடையிலான மோதலை இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அந்த அமர்வால் தீர்த்து வைக்க முடியவில்லை.
இந்த வழக்கில் அக்டோபர் 13 அன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மாறுபட்டதாக இருந்தது. முன்னதாகக் கர்நாடக அரசு மார்ச் 15 அன்று கல்வி நிலையங்களில் பரிந்துரைக்கப்பட்ட சீருடையைத் தவிர, ஹிஜாப் உள்ளிட்டவேறெந்த ஆடையையும் அணிந்துவருவதற்குத் தடைவிதித்திருந்தது. அதற்கு எதிராக ஹிஜாப் அணியும் மாணவிகள் தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் மாநில அரசின் தடை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தார். மற்றொரு நீதிபதியான சுதான்ஷு தூலியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்தார். இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் வழிகாட்டுதலின்படி அமையும்.
மாறுபட்ட தீர்ப்பு (Split verdict): நீதிமன்ற அமர்வு ஒன்றினால்விசாரிக்கப்படும் வழக்கின் தீர்ப்பை ஒருமனதாகவோ பெரும்பான்மை மூலமாகவோ முடிவுசெய்ய முடியாத நிலை ஏற்படும்போது, அது மாறுபட்ட தீர்ப்பாக ஆகிறது. நீதிமன்ற அமர்வில் சம எண்ணிக்கையிலான நீதிபதிகள் இருக்கும்போது மட்டுமே இத்தகைய தீர்ப்புகள் வழங்கப்படும் சாத்தியம் ஏற்படும். இதனால்தான், முக்கிய வழக்குகளுக்கான நீதிமன்ற அமர்வில் ஒற்றைப்படை எண்களில் (மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது...) நீதிபதிகள் அமர்த்தப்படுவார்கள். இருப்பினும், டிவிஷன் பெஞ்ச்கள் எனப்படும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் வழக்கத்துக்கு மாறானவை அல்ல.
தீர்ப்புக்குப் பின்னர்: உச்ச நீதிமன்றத்தில் மாறுபட்ட தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கு பெரிய அமர்வுக்கோ மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கோ மாற்றப்படும். மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய அமர்வைவிடக் கூடுதலான நீதிபதிகளைக் கொண்ட அமர்வே பெரிய அமர்வு என்று குறிப்பிடப்படுகிறது. பெரிய அமர்வின் முன் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களை நன்கு ஆராய்ந்து நீதிபதிகள் ஒவ்வொருவரும் தமது தீர்ப்புகளை அளிப்பார்கள். அதன் பின்னர் பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு எட்டப்படும். ஹிஜாப் வழக்கைப் பொறுத்தவரை, அடுத்த கட்டம் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.
உயர் நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் நடைமுறை: உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியவுடன், அந்த வழக்கு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முன்னர் வைக்கப்படும். அவர் அந்த வழக்கை நிர்வாகத் தரப்பில் உள்ள மூன்றாவது நீதிபதிக்கு ஒதுக்க வேண்டும். அல்லது பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும். இதன் பின்னர், இந்த வழக்கில் முன்னர் விசாரித்த நீதிபதிகளின் உள்ளீடு தேவையில்லை.
எப்போது மேல் முறையீடு செய்யலாம்?: மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கில் மூன்றாவது நீதிபதி அல்லது பெரிய அமர்வின் புதிய தீர்ப்பை வழங்கும்வரை, அந்த வழக்கில் எவ்விதத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்பதே நிலை. பெரிய அமர்வு அல்லது மூன்றாவது நீதிபதி தமது தீர்ப்பை வழங்கிய பிறகே அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
இதற்கு முன் வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்புகளில் சில: கடந்த மே மாதம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் பலாத்காரத்தைத் தண்டிப்பதற்கான சட்டப் பிரிவில் திருமண உறவுக்குள் நிகழும் பலாத்காரங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதற்கு எதிரான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தது. பாலியல் பலாத்காரத்தைத் தண்டிப்பதற்கான இந்திய தண்டனைச் சட்டம் 375, மனைவி மீதான கணவனின் எந்தவொரு பாலியல் செயல்பாடும் பலாத்காரம் என்று கருதத்தக்கதல்ல என்று விலக்களிக்கிறது. இது அரசமைப்புக்கு முரணானது என்று நீதிபதி ராஜீவ் ஷக்தேர் கூறினார். அதேநேரம், நீதிபதி சி.ஹரிசங்கர் திருமண உறவுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு செல்லுபடியாகும் என்று கூறினார்.
2018 இல் அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம்செய்யப்பட்டனர். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தகுதி நீக்கம் செல்லுமா, செல்லாதா என்பதில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் அந்த மூன்றாம் நீதிபதி, தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
தொகுப்பு: முகமது ஹுசைன்