

மும்பையின் கோவண்டியிலுள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம் என்கிற செய்தி கடந்த செப்டம்பர் 12 அன்று ஊடகங்களில் வெளியானது. கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள், கூர்நோக்கு இல்லத்தில் சிறுமியைப் பலாத்காரம் செய்த சக சிறுமிகள் என்கிற செய்திகள் பிற மாநிலங்கள் மட்டுமின்றித் தமிழகக் கூர்நோக்கு இல்லங்களிலிருந்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. கடந்த பிப்ரவரி 2 அன்று நாகர்கோவிலில் அரசுப் பள்ளி அருகே பெண் சிறார்களுக்கான கூர்நோக்கு இல்லக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. ஆனால், குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுமிகளுக்கான கூர்நோக்கு இல்லத்தை அரசுப் பள்ளி அருகே தொடங்குவது மற்ற சிறார்களுக்கு நல்லதல்ல எனக் கூறி, கட்டுமானப் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.
சிறு வயதிலேயே கருத்தரித்து, பிறந்த குழந்தையை வளர்க்க இயலாமல் சமூகத்தின் கேலிப்பேச்சுக்கும் குற்றப்பார்வைக்கும் அஞ்சி, அக்குழந்தையைக் குளத்தில் வீசிக் கொன்ற சிறுமி, காதலனுடன் செல்வதற்காக மூதாட்டியைக் கொன்று நகையைத் திருடிய சிறுமி எனக் கூர்நோக்கு இல்லத்தில் சிறுமிகள் சேர்க்கப்பட்டதற்கான காரணங்களுடன் ஒன்றிரண்டு செய்திகள் இணையதளங்களில் காணப்படுகின்றன. எனினும் இச்செய்திகளின் மீதான அக்கறை நமக்குப் பெரிதாக இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் வளர்வதற்கும் சிறுமிகள் அங்கு வளர்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களைப் பற்றிப் பேசப்பட்ட அளவுக்குச் சிறுமிகளைப் பற்றி ஊடகங்களில்கூடப் பேசப்படவில்லை.
கூர்நோக்கு இல்லங்களில் சேர்க்கப்படும் சிறுமிகளின் எதிர்காலம், அவர்களின் குடும்ப நிலை, சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை போன்றவற்றை ஆராய்ந்து, அம்மாதிரியான சூழலில் வளரும் சிறுமிகள் பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலைகளைத் தடுக்க 800 மனநல மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மனநல ஆலோசனை வழங்குவார்கள் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. தற்கொலைகளைத் தடுப்பது மட்டுமின்றி, சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்லும் சிறார்களின் எண்ணிக்கை குறையுமளவுக்குக் குற்றமற்ற சமூகமாக உருவாக்குவதாகவும் அந்த மனநல மருத்துவர்களின் பணி அமைய வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள தாய் அல்லது தந்தை இல்லாத பெண் குழந்தைகள், தாய் - தந்தை இருவரும் இல்லாமல் பிற உறவினர்களின் ஆதரவில் வளரும் பெண் குழந்தைகள், இரண்டு மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சலுகைகளை அதிகரிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- யுவராஜ் மாரிமுத்து