

சமீப காலமாக நீதிமன்றத் தீர்ப்புகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்துவருகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்னால் நாளிதழ்களில் ஏதேனும் ஒரு மூலையில் இறுதித் தீர்ப்புகளின் சுருக்கமும் (அ) கொலை வழக்குகளின் விசாரணையும் இடம்பெற்றன. ஆனால், தற்போது நிமிடத்துக்கு நிமிடம் அவை தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதுடன், உடனடியாக அவற்றைப் பற்றிய விவாதங்களும் ஊடகங்களில் நடைபெற்றுவருகின்றன. 500 பக்கத் தீர்ப்புகள் வெளிவந்து, அதைப் படித்துத் தெரிந்துகொண்டபின் விவாதம் என்பதற்குப் பதிலாக, பல விவாதங்கள் நுனிப்புல் மேயும் விதமாக உள்ளன. தற்போது உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு வழக்குகளை நேரடி ஒளிபரப்பும் ஏற்பாட்டையும் இந்தியத் தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் நடைபெறும் விவாதங்களைப் புரிந்துகொள்ளும் திறன் படைத்தவர்கள் பயன்பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அதிமுகவில் நடக்கும் உள்கட்சி மோதலின் மூலம் தினசரி கீழமை நீதிமன்றங்களிலிருந்து தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை பல்வேறு தீர்ப்புகள் மாறிமாறி வருவதைப் பார்த்தவர்களுக்கு ஏற்படும் எண்ணம் என்னவெனில், இப்படி நீதிபதிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லாமை, நீதிமன்றங்களைக் கேலிப்பொருளாக மாற்றிவிடுகின்றன என்பதே.
கர்நாடக மாநிலம் பள்ளி மாணவர்களுக்கு விதித்த சீருடைக் கட்டுப்பாட்டை எதிர்த்து இஸ்லாமியப் பெண்கள் முகத்திரை அணியும் உரிமை பற்றிய வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள், நேர் எதிரான இரண்டு தீர்ப்புகளை வழங்கியுள்ளது இவ்விவாதத்துக்கு மேலும் சுவாரசியம் கூட்டியுள்ளது. இது குறித்து மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விசாரணைக்கு இவ்வழக்கு கொண்டுசெல்லப்பட்டு, இறுதியான முடிவு அறிவிக்கப்படலாம். ஆனால், சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்குத் தடையேதும் இல்லை என்று அரசமைப்புச் சட்ட அமர்வு அறிவித்த தீர்ப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் கழிந்தும், அவற்றை மறுஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று கூறிய பின்னரும், இன்று வரையிலும் அவ்வழக்கு இறுதிக் கட்டத்தை அடையவில்லை.
முடியாட்சியில் மன்னன் இட்டதே இறுதித் தீர்ப்பு என்ற முறை ஜனநாயகத்தில் மாற்றப்பட்டு, நீதித் துறை தனிப்பட்ட அமைப்பாக உருவாகியது. அதிலும் ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது என்றில்லாமல், அவற்றைப் பல கட்ட மேல்முறையீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பில் உச்ச நீதிமன்றம்தான் இறுதியான நீதிமன்றம் என்று கூறப்பட்டிருப்பதால் ஓரளவுக்குத் தீர்ப்புகளின் இறுதி வடிவம் உறுதியாக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கேயும் சீராய்வு மனு, இறுதி நிவாரண மனு (Curative Petition) என்றெல்லாம் புதிய நிவாரண வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரசமைப்பு என்பது அதில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் மட்டுமல்ல, நீதிபதிகள் அது பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதே இறுதிச் சட்டமாகும் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே டெல்லியில் உச்ச நீதிமன்றத்துக்கான கட்டிடம் ஒன்று இருப்பினும், அதற்குள் 34 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று ஒருமுறை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் குறிப்பிட்டார். வழக்கின் தன்மை ஒன்றாக இருப்பினும், இரண்டு தனி நீதிபதிகளுக்குள் இரு வேறுபாடான கருத்துகள் தோன்ற முடியும். அதற்குக் காரணம், அவர்களுடைய சிந்தனைப் போக்கு, பின்புலம் இவையெல்லாம் மாறுபட்ட கோணங்களிலிருந்து செயல்படலாம்.
மதுரையில் காவலர் ஒருவருடைய ஊர் மாற்றத்தை ரத்துசெய்த நீதிபதி, அதற்குக் காரணமாகத் தனது கர்மவினையைக் குறிப்பிடும்போது, அந்தத் தீர்ப்பு தனது பிராரப்த கர்மாவினால் விளைந்தது என்று கூறினார். அதைப் பற்றி நான் வேடிக்கையாகக் கூறும்போது இரண்டு நீதிபதிகள் அரசின் மேல்முறையீட்டில் தடைவிதிக்கும்போது அவர்களது கர்மவினைப் பலனாகக்கூட அந்த உத்தரவு இருக்கும் என்று குறிப்பிட்டேன். அதுபோலவே இரண்டு நீதிபதிகள் அமர்வு அந்த உத்தரவுக்குச் சமீபத்தில் தடைவிதித்தது.
வேடிக்கைக்கு அப்பாற்பட்டு ஏன் நீதிபதிகளுக்குள் ஒரே சிந்தனைப் போக்கு இல்லை என்று கேட்கலாம். 1980-களின் இறுதியில் கிருஷ்ணராஜு என்ற வழக்கறிஞர் ‘தி இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் பகுதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அவரது கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘சமீபகாலமாக நீதிமன்றங்களில் ஒரு சில நீதிபதிகளின் தீர்ப்புகள் மேல்முறையீட்டு மன்றங்களால் ரத்துசெய்யப்பட்டு வருகின்றன. இப்படித் தொடர்ந்து ஒரு நீதிபதியின் தீர்ப்புகள் மேல்முறையீட்டு மன்றங்களால் ரத்துசெய்யப்பட்டால், அந்த நீதிபதி வேண்டுமென்றே தவறிழைக்கிறார் என்று கருதி, அவரைப் பதவியை விட்டு நீக்க வேண்டும்.’
ஆசிரியர் பகுதிக்கு வரும் கடிதங்களை எவ்வளவு வாசகர்கள் படிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால், அன்றைய தலைமை நீதிபதி அக்கடிதத்தைப் படித்தவுடன், அவ்வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஒன்றுதிரண்டு அம்மனுவைத் திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டனர். பல சர்ச்சைகளும் இது குறித்து எழுப்பப்பட்டன. இருப்பினும், புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்றவுடன் அவ்வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை நான்கு கட்ட மேல்முறையீடு என்பது வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாகத் தேக்கநிலைக்குத்தான் கொண்டுசெல்கிறது என்பதில் சந்தேகமில்லை. மேலும், இதுபோன்ற மேல்முறையீடுகளைச் செய்து காலதாமதத்தினால் மட்டுமே பயன் அடைபவர்கள் இவ்வூரில் உண்டு. ஒரு சாதாரண வீட்டு வாடகைப் பிரச்சினை. வாடகைக் கட்டுப்பாட்டு அலுவலர், வாடகை மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றச் சீராய்வு மனு, உச்ச நீதிமன்ற மேல்முறையீடு என்று நான்கு கட்டங்களிலும் ஒரு சாதாரண தொழிலாளியின் வழக்கு தொழிலாளர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு, இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு, உச்ச நீதிமன்ற மேல்முறையீடு என்று நான்கு கட்டங்களில் இருப்பது எவ்விதத்திலும் நாட்டுக்கு நன்மை பயக்காது.
அதே வேளையில், ஒரே ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதி என்பது சர்வாதிகார முடிவுகளுக்குக் கொண்டு செல்லும். ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்போது, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அவ்வழக்கை அணுகும் முறைக்கான பல்வேறு விதிமுறைகள் மட்டுமின்றி, அதற்கு முன்னோடியான தீர்ப்புகளின் வழிகாட்டுதலும் உண்டு. வழக்காடிகளைப் பொறுத்தவரை மேல்முறையீடு என்றொரு வழி இருக்கும் வரை அதனை அடைந்தே தீருவது என்பது தவிர்க்க முடியாத வெறியாகிவிடுகிறது.
ஊழல் காரணங்களுக்காகவும், தங்களுடைய எதிர்கால வளர்ச்சிக்காகவும் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. மேலும், நீதிபதிகளுக்கான சில கட்டுப்பாடு, கோட்பாடுகள் உண்டு. அவையாவன: மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கீழமை நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும் (staire decis). அதேபோல் ஒரு அமர்வில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால், அதன் தீர்ப்புகள் குறைவான நீதிபதிகள் எண்ணிக்கை உள்ள அமர்வுகளைக் கட்டுப்படுத்தும் (இதை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வேடிக்கையாக ‘எண்கள் விளையாட்டு’ என்பார்).
நீதிபதிகள் தங்களுடைய முன்னாள் கட்சிக்காரர்கள், சக வழக்கறிஞர்கள், சாதி-சமய பாசம் இவற்றையெல்லாம் தவிர்த்து, தாங்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்குப் பணிந்து சட்டவிதிகளுக்கு ஏற்பத் தீர்ப்புகளை வழங்குவது முக்கியம். தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களையும், படிப்பினைகளையும் தீர்ப்புகளில் நுழைக்காமல் சட்டத்தின் அடிப்படையில் அச்சமின்றி, விருப்புவெறுப்பின்றித் தீர்ப்புகளை வழங்கினால் இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படாது. அது தவிர, ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்ற அவையடக்கத்துடன் செயல்பட்டால், இன்னும் சிறப்பாகத் தீர்ப்புகளை வழங்க முடியும்.
நீதி வழங்குவது மட்டுமின்றி, அதற்கான நடைமுறையிலும் ஒளிவுமறைவு கூடாது. மரண தண்டனை போன்ற அவசரகதி வழக்குகளுக்கு நள்ளிரவானாலும் விசாரிப்பது தேவையெனினும், கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு ‘அந்தியில் ஆரம்பித்து விடிகாலை வரை’ தீர்ப்புகளை நிறுத்தி வைப்பது நன்று.
கே.சந்துரு
மேனாள் நீதிபதி,
சென்னை உயர் நீதிமன்றம்
தொடர்புக்கு: saraskrish1951@gmail.com