

ஒன்று: பஞ்சாப்பின் மொஹாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்தத் தனியார் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கிப் படிக்கும் 60 மாணவிகள் குளிக்கும் காணொளி, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவிகள் குளிப்பதை மாணவிஒருவரே காணொளிப் பதிவுசெய்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். அவர்காணொளியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. காணொளிப் பதிவுசெய்த மாணவி, அவரது ஆண் நண்பர்களான சன்னி மேத்தா (23), ரங்கஜ் வர்மா (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் நடத்திவரும் பல்கலைக்கழக மாணவிகளுக்குக் கனடாவிலிருந்து மிரட்டல்கள் வந்துள்ளன. தங்களிடம்இருக்கும் காணொளிகளை வெளியிட்டுவிடுவதாகக் கூறி, மாணவிகளிடம் அவர்களின் தந்தையரைப் பேசச் சொல்லுமாறு தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.
இரண்டு: தன் நிர்வாண ஒளிப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட காதலனை நண்பர்களுடன் சேர்ந்து கொலைசெய்த இளம்பெண்ணைப் பெங்களூருவில் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த மருத்துவப் பட்டதாரியான விகாஷுக்கும் பொறியியல் பட்டதாரி பிரதீபாவுக்கும் இடையே ‘ஆன்லைன் டேட்டிங் ஆப்’ மூலம் காதல் மலர்ந்தது. பெங்களூருவில் வாடகைக்கு வீடெடுத்து ‘லிவிங் டுகெதர்’ உறவில் வாழ்ந்துவந்தனர். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, திருமணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்தன. இந்நிலையில், போலிச் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதீபாவின் நிர்வாண ஒளிப்படங்கள் வெளியாகின. இது தொடர்பாக விகாஷுக்கும் பிரதீபாவுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், கடந்த 10ஆம் தேதி விகாஷை வீட்டுக்கு அழைத்து, ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பிரதீபா கொடூரமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த விகாஷை மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 18ஆம் தேதி விகாஷ் உயிரிழந்தார். இது குறித்து பேகூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து காதலி பிரதீபா, அவரது நண்பர்கள் சுஷில், கௌதம் ஆகியோரைக் கைதுசெய்தனர்; தலைமறைவான சூர்யாவைத் தேடிவருகின்றனர்.
மூன்று: மேலாடையின்றி அருவியில் குளிக்கும் ஒளிப்படங்களைப் பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். குறுக்கும் நெடுக்குமாக எதிர்ப் பதிவுகள் வந்த பின் அப்பெண், ஆண்கள் மேலாடையின்றிக் குளிக்கும் ஒளிப்படங்களைப் பகிர்வதை இயல்பாகக் கடப்பவர்கள், பெண்கள் அப்படிச் செய்வதை ஏன் கடக்க முடியவில்லை என்று கேள்வியெழுப்பும் வகையில் ஒரு பதிவை எழுதியிருந்தார்.
பண்டமாக்கப்படும் உடல்: மேற்கண்ட மூன்று நிகழ்வுகளுக்கும் பொதுவாக இருப்பது பெண்ணுடல் சார்ந்த சமூகப் புரிதல். முதல் இரண்டு செய்திகளை உற்றுநோக்கும்போது, சர்வதேச அளவிலான பாலினப் படத் தொழிலின் (போர்னோ) வலைப்பின்னல் நமக்குப் புலப்படும். பெண்ணுடலைப் பண்டமாக்கிச் செய்யப்படும் இவ்வியாபார வலைப்பின்னல் கால, தேச, கலாச்சார எல்லைகளைத் தாண்டியிருக்கிறது; கோடிகள் கொழிக்கும் துறையாகவும் இன்று வளர்ந்து நிற்கிறது. பல்வேறு பண்பாடுகளில் வளர்ந்த மக்களை அப்பண்பாட்டு எல்லைகளைக் கடந்தும் அச்சமூகங்கள் உருவாக்கிய அறத்தை மீறியும் இந்தச் சந்தை ஈர்க்கிறது. சக மாணவிகள் குளிப்பதைப் படமெடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பும் உத்வேகத்தையும் தன் வாழ்க்கைத் துணையாக வர இருப்பவரைப் படமெடுத்து வலைதளங்களில் உலவவிடும் வேட்கையை அந்த இளைஞனுக்கும் அந்தச் சந்தை வழங்கிவிடுகிறது. பொள்ளாச்சியில் இதன் கொடுவீச்சை நாம்கண்டோம். சில ஆண்டுகளுக்கு முன் பள்ளிப்பாளையத்தில் வட்டிப்பணம் கொடுக்கச் சென்றிருந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதைப் படமெடுத்து வெளியிட்டதையும் அதைக் கண்டித்த அந்நகரத்தின் பொதுவுடமை இயக்கத் தோழர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டதையும் கண்டோம். வட்டித்தொழிலும் பாலினப் படத் தொழிலும் இணைகையில் அது மனிதப் படுகொலைகளையும் நிகழ்த்தும் என்பது கண்கூடு.
விற்கப்படும் விழுமியங்கள்: ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ என்றார் ஔவையார். வாக்கு மீறாதிருத்தல், நம்பிக்கையைச் சிதைக்காதிருத்தல் எனப் பொருள் கொள்ளலாம். தமிழருக்கு வலியுறுத்தப்பட்ட இந்த அறம், இன்று வெகு சாதாரணமாக மீறப்படுகிறது. நம் சமூகம் போற்றி வளர்த்த விழுமியங்கள் எல்லாம், இச்சந்தை உலகில் சிதைந்துகொண்டிருப்பதன் வெளிப்பாடாகவே முதல் இரண்டு நிகழ்வுகளையும் பார்க்க வேண்டும். பழைய சமூகத்தின் ஆரோக்கியமற்ற விழுமியங்களும் சமத்துவமற்ற மதிப்பீடுகளும் மாற்றப்பட வேண்டும்தான். ஆனால், இந்தச் சந்தை தீர்மானிக்கும் ‘கட்டற்ற’ லாபத்தை நோக்கிய விழுமியங்கள் இவை. நம் குழந்தைகளின் மனங்களில் அவை விதைக்கப்படுகின்றன என்கிற அபாயத்தைச் சுட்டுவனவாகவே முதல் இரு நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அவசரத் தேவை: மூன்றாவது சம்பவம் ஓர் அதிர்ச்சி வைத்தியம் போன்றதுதான். ஐரோப்பிய நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றும் ‘இயற்கையியம்’, இப்பெண்மணியால் பாலின சமத்துவத்துக்கான ஒரு போராட்ட வடிவமாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆடைகள் என்னும் மூடாக்குகள் இன்றி இயற்கையோடு இயைந்து வாழ விரும்புவோர் உலகெங்கும் இருக்கிறார்கள். அதற்கான நடைமுறைகளையும் வரையறைகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். ‘பெண்கள் இயல்பாக வாழ்வதற்கு அனுமதிக்கப்படாத’ இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற முயற்சிகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு, அந்த ஒளிப்படங்களுக்கு வந்துள்ள பின்னூட்டங்களே சாட்சி. பெண்ணுடல் சார்ந்து நம் மரபான கருத்துக்கள் ஆட்டம் கண்டுவிட்டதாக இப்போதே கூறமுடியாவிட்டாலும், ஆரோக்கியமான விவாதங்களுக்குள் நம் சமூகம் காலெடுத்து வைத்தே ஆக வேண்டிய நெருக்கடி நெருங்கியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
ச.தமிழ்ச்செல்வன்
எழுத்தாளர் - பண்பாட்டுச்
செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com