

இசை அறிவில் பரம ஏழை நான். இசை ரசனையில் என்னைச் செல்வந்தனாக்கியவர்களில் ஒருவர் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர். முத்துசாமி தீட்சிதரின் ‘வாதாபி கணபதிம்’மும் தியாகராஜ சுவாமிகளின் ‘பண்டுரீதி’யும் இசையமுதை அள்ளித் தந்தாலும், ஊத்துக்காட்டாரின் ‘பால் வடியும் முகம்’ தமிழ்ச் சுவையையும் சேர்த்துப் புகட்டும் சிறப்பைக் கொண்டது.
பல்லவி, சரணம் எனப் புதிய கிருதி வடிவத்தை உருவாக்கிய தமிழ் இசை முன்னோடி முத்துத் தாண்டவர் வரிசையில் இவரை வைத்துப் பார்க்கலாம். ‘இது ஒரு திறமோ கண்ணா’ இவரது முதல் கிருதி எனக் கருதப்படுகிறது. கானடா ராகத்தில் இவர் இயற்றி மகாராஜபுரம் சந்தானமும் பித்துக்குளி முருகதாஸும் பாடிப் புகழ்பெற்ற ‘அலைபாயுதே கண்ணா’ பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் வழி வெகுஜனக் கவனத்தைப் பெற்றது. காலத்தில் தியாகராஜருக்கும் முற்பட்ட ஊத்துக்காட்டார் சம்ஸ்கிருதத்திலும் சாகித்யங்கள் எழுதியிருக்கிறார். அவரைப் போல் தெலுங்கில் கிருதிகள் எழுதியதில்லை என்பதாலேயே ஊத்துக்காட்டார் புகழ்பெறாமல் போய்விட்டார் என ஆதங்கப்படுகிறார், தமிழ் இசை வரலாற்றை ஆராய்ந்த மு.அருணாசலம். இசையில் பல சாதனைகள் புரிந்த தியாகராஜர்வழி வந்தவர்களும் அவரைப் பின்பற்றித் தெலுங்கையே பிடித்துக்கொண்டார்கள்; தமிழைக் கைவிட்டுவிட்டார்கள் என இதற்கான காரணத்தையும் அருணாசலம் தனது ஆய்வில் சொல்கிறார். தெலுங்குக் கீர்த்தனைகளின் புகழால் இசை மரபில் சுர சங்கீதம் பெரும் விளைவை ஏற்படுத்தியது. இதனால் ‘பாவ’ சங்கீதம் பாதிக்கப்பட்டது எனத் தாகூரின் மேற்கோளுடன் இதை விளக்குகிறார் அருணாசலம். கண்ணன் மீதான மிதமிஞ்சிய அன்பில் தமிழில் பாடல்கள் பாடிய ஊத்துக்காட்டாரின் இசையைப் ‘பாவ’ சங்கீதத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவரது பாடல்களுக்கு அந்தக் காலத்தில் கவனம் கிடைக்கவில்லை. தஞ்சை நாகசுவரக் கலைஞர் ருத்திரபசுபதி, பக்தி ‘பாவம்’ ததும்பும் ‘தாயே யசோதா...’ பாடலைப் பாடி ஊத்துக்காட்டாரின் புகழ் பரவக் காரணமானார் எனச் சொல்லப்படுகிறது.
‘நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்’ என்பது போன்ற எளிய புழங்குமொழிப் பயன்பாடு ஊத்துக்காட்டாரின் பாடல்களில் விசேஷமானது. ‘தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே’ என்கிற இவரது கவிதைக் காட்சி, காதலின் உன்மத்தத்தை விளம்புகிறது. செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த, அருணா சாய்ராம் பாடிப் புகழ்பெற்ற ‘மாடு மேய்க்கும் கண்ணே’ பாடலில் உள்ள நாட்டார் வடிவமும் வசீகரிக்கக்கூடியது. பாரதியின் கண்ணன் பாடல்களுக்கு ஊத்துக்காட்டார் முன்மாதிரியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ‘தின்னப் பழம் கொண்டு தருவான்/ பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்’ என்கிற பாரதியின் வரியில், ‘தோலை அரிந்து கனி தூர எறிந்து/வெறுந் தோலைத் துணிந்தொருவன் தந்தானல்லவோ’ என்கிற ஊத்துக்காட்டாரின் பாதிப்பை உணர முடியும். ஆனால், பாரதியின் பாடல்களின் உள்ள புத்திக்கூர்மை ஊத்துக்காட்டார் பாடல்களுக்கு இல்லை. இவை முழுவதும் பக்தியின் பேதைமை நிலையில் எழுதப்பட்டவை. அந்த நிஷ்களங்கமும் அன்பும்தான் ஊத்துக்காட்டார் பாடல்களில் ஈர்க்கக்கூடிய அம்சம். முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தப் பாடல்களுக்கு நவீன காலத்தில் கிடைத்திருக்கும் வரவேற்பை இந்தப் பின்னணியில் அணுகலாம்.
அக்டோபர் 16 : ஊத்துக்காட்டார் பிறந்த நாள்