அமிதாப் பச்சன் 80: முன்னுதாரணமற்ற முன்மாதிரி!

அமிதாப் பச்சன் 80: முன்னுதாரணமற்ற முன்மாதிரி!
Updated on
2 min read

ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட திரைப் பயணத்தில் சரியான நேரத்தில் தன்னை மறுகண்டுபிடிப்பு செய்துகொண்டதன் மூலம் எண்பது வயதிலும் குன்றாப் புகழொளியுடன் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பிரகாசிப்பவர் அமிதாப் பச்சன்.

‘ஜஞ்ஜீர்’ (1973), ‘மஜ்பூர்’ (1974), ‘தீவார்’ (1975), ‘ஷோலே’ (1975), ‘இமான் தரம்’ (1977), ‘த்ரிஷூல்’ (1979), ‘டான்’ (1980) என எழுபதுகளில் பல திரைப்படங்களில் அன்றைய இளைஞர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த ‘கோபக்கார இளைஞன்’ கதாபாத்திரங்களில் நடித்து உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார் அமிதாப். ஒரு கட்டத்தில் பாலிவுட் நட்சத்திரத் தரவரிசையின் முதல் பத்து இடங்களில் அமிதாப் இருக்கிறார் என்று சக நடிகர்களே புகழும் அளவுக்கு அவருடைய செல்வாக்கு உயர்ந்திருந்தது.

அதன் பிறகு உயிரைப் பறிக்கவிருந்த படப்பிடிப்பு விபத்து, அரசியல் நுழைவு, சர்ச்சைகள் ஆகியவற்றிலிருந்து அவர் மீண்டார். அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனம் தயாரித்த திரைப்படங்களும், பிற வணிக முயற்சிகளும் அவருக்குப் பெரும் கடன் சுமையை ஏற்படுத்தின. இதனால் தன் வீட்டை அடமானம் வைக்கும் அளவுக்குச் சென்ற அமிதாப் மீண்டும் நடிக்கத் தொடங்கியபோது, வழக்கமான நாயகனாக நடிப்பதற்கான காலம் முடிந்துவிட்டதை விரைவில் உணர்ந்துகொண்டார். அதுவே அவருடைய கலைப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தைச் சிறந்ததாக கருதுவதற்குக் காரணமாக அமைகிறது.

முத்திரை பதித்த இரண்டாம் கட்டம்: அமிதாப்பின் நீண்ட கால நண்பர் யஷ் சோப்ரா தயாரிப்பில் அவருடைய மகன் ஆதித்ய சோப்ரா இயக்கிய ‘மொஹப்பதீன்’ (2000) திரைப்படத்தில் நாயகனை எதிர்க்கும் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றிபெற்று அமிதாப்பின் திரைப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தை இனிதே தொடங்கிவைத்தது. அதே ஆண்டில் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்னும் புதிய அவதாரத்தை எடுத்தார். அந்த நிகழ்ச்சியின் முதல் சீஸனே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நன்கு பேசத் தெரிந்த அமிதாப் திரையில் பிரம்மாண்டமாகத் தோன்றி அண்ணாந்து பார்க்கவைத்த நட்சத்திரம் என்பதிலிருந்து, வீட்டு வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு பேசும் கனிவும் கண்ணியமும் மிக்க மூத்த விருந்தினராகக் கச்சிதமாக உருமாறினார். தற்போது இந்த நிகழ்ச்சியின் 14ஆவது சீசனைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார் அமிதாப். இடையில் சில சீஸன்களை ஷாருக் கான் உள்ளிட்ட பிற பிரபலங்கள் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதம் இந்தியர்கள் பலர் அவரைத் தமது குடும்பத்தின் மூத்த உறுப்பினராக, வழிகாட்டும் உறவினராக, கனிவுடன் ஆறுதல் சொல்லும் சிநேகிதராக உணரவைத்தன. பெரும்பாலான சமீபத்திய திரைப்படங்களிலும் இந்தப் பிம்பத்தையே அவர் பிரதிபலித்துவருகிறார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இந்தியாவிலேயே அதிகபட்சமாக ‘அக்னிபாத்’ (1990), ‘பிளாக்’ (2005), ‘பா’ (2009), ‘பிகு’ (2015) ஆகிய படங்களுக்காக நான்கு முறை பெற்றிருக்கிறார் அமிதாப். இந்தப் பட்டியலில் உள்ள ஆண்டுகளிலிருந்தே அவருடைய திரைப் பயணத்தின் இரண்டாம் கட்டம் மிகவும் சிறப்பானதாக, முதல் கட்டத்தைவிட மேன்மையானதாக அமைந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். சஞ்சய் லீலா பன்சாலி, ஆர்.பால்கி, ஷூஜித் சர்க்கார், நாகராஜ் மஞ்சுளே எனத் திறமைவாந்த இயக்குநர்களின் படங்களில் அவருக்கு வெகு சிறப்பான கதாபாத்திரங்கள் அமைந்தன. அதற்குக் காரணம், ஒரு நடிகராக இந்தக் கதாபாத்திரங்களை முழு மனத்துடன் ஏற்று தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருப்பதுதான்.

அர்ப்பணிப்பும் தொழில்நேர்த்தியும்: இப்போதும் முதல் படத்தில் நடிக்கும் இளைஞனைப் போல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒத்திகை உள்ளிட்ட முன்தயாரிப்புகளை முனைப்புடன் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்காக பாலிவுட் இயக்குநர்கள் அமிதாப்பைக் கொண்டாடுகிறார்கள். நேரம் தவறாமையைத் தீவிரமாகப் பின்பற்றுபவர் அமிதாப். இயக்குநர் எத்தனை ரீடேக் கேட்டாலும் முகம் சுளிக்காமல் ஒத்துழைப்பவர் என்னும் பெயரைப் பெற்றுள்ளார். இவ்வளவு சிறப்புகளுடன் தொடர்ந்து திரைப்படங்களில் அமிதாப் நடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த மாதம் வெளியான ‘பிரம்மாஸ்திரா- முதல் பாகம்’, கடந்த வாரம் வெளியான ‘குட்பை’, வெளியாகக் காத்திருக்கும் பல படங்கள் என அவர் தொடர்ந்து வெற்றிகரமாக நடித்துக்கொண்டிருக்கிறார். எண்ணற்ற விளம்பரங்களிலும் கோவிட் விழிப்புணர்வு உள்ளிட்ட அரசின் பிரச்சார இயக்கங்களிலும் பங்கேற்கிறார். இவற்றின் மூலமாக இந்தியர்களின் மரியாதைக்குரிய, மனதுக்கு நெருக்கமான ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார். ராஜ் கபூர், திலீப் குமார் என இந்திய சினிமாவின் முகங்களாகச் சர்வதேச அளவில் முன்னிறுத்தப்படக்கூடிய கலைஞர்களின் பட்டியலில் கட்டாயம் இடம்பெறத்தக்கவர் அமிதாப். அதே நேரம் எண்பது வயது முதியவருக்கான மரியாதையைத் தக்கவைத்துக்கொண்டே, இருபது வயது இளைஞனின் துடிப்புடனும் தீவிரத்துடனும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் அவர் நிச்சயமாக முன்னுதாரணமற்ற முன்மாதிரிதான்.

அக்டோபர் 11: அமிதாப் பச்சனின் 80ஆம் பிறந்தநாள்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in