

வில்லுப்பாட்டு என்றதும் சட்டென்று நம் நினைவுக்கு வரும் பெயர் ‘சுப்பு ஆறுமுகம்’. அந்த அளவுக்கு அந்தக் கலைக்காகச் சேவையாற்றியவர் சுப்பு ஆறுமுகம். திருநெல்வேலி அருகே புதுக்குளம் கிராமத்தில் 28.06.1928 அன்று பிறந்தஅவர், 16 வயதிலேயே ‘குமரன் பாட்டு’ என்ற புத்தகத்தை எழுதினார். சுப்பு ஆறுமுகத்தின் திறனைக் கண்டுகொண்ட ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திரைத் துறைக்கு அவரை அழைத்துவந்தார். 1948இல் தொடங்கிய சுப்பு ஆறுமுகத்தின் திரைப் பயணமும், அவரது வில்லுப்பாட்டு இசைப் பயணமும் பின்னிப் பிணைந்தவை.
என்.எஸ்.கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‘கல்கி’ எழுதிய காந்தியின் சுயசரிதை நூலைச் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டாக எழுதினார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கதையை வில்லுப்பாட்டாக சுப்பு ஆறுமுகம் நிகழ்த்திவந்தார். திருவையாறில் தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் அவருடைய கதையை வில்லுப்பாட்டாக நிகழ்த்தினார். அந்த விதத்தில் தியாகப்பிரம்ம விழாவில் வில்லிசையின் வழியே தமிழிசையை ஒலிக்கவைத்த மகத்துவச் சாதனையாளர் சுப்பு ஆறுமுகம். தொடர்ந்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள், வானொலி ஒலிபரப்புகள், திரைப்படங்கள் என சுப்பு ஆறுமுகத்தின் கலைச் செயல்பாடுகள் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றன. ஆயிரக்கணக்கான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எனப் பலவிதங்களில் ஏராளமான திரைப்படங்களில் பங்களித்துள்ளார். நடிகர் நாகேஷின் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளை எழுதியுள்ளார்.
தமிழக அரசின் ‘கலைமாமணி’, மத்திய அரசின் ‘சங்கீத நாடக அகாடமி விருது’, ‘இந்து தமிழ் திசை’யின் ‘தமிழ்த்திரு விருது’ (2017) என்று சுப்பு ஆறுமுகம் பெற்ற விருதுகள் ஏராளம். சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டபோது அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஆசுகவியாய் அந்த இடத்திலேயே அப்துல் கலாமைப் பற்றி வில்லுப்பாட்டு பாடினார். தன் மகள் பாரதி திருமகன், மூன்றாம் தலைமுறைப் பேரன் கலைமகன் ஆகியோர் உதவியுடன் தொண்ணூறாவது வயதிலும் தளராமல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்திவந்தார். அவரது மறைவு தமிழ்க் கலைத் துறைக்குப் பேரிழப்பு.