

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் தத்துவவாதிகளை உருவாக்கி, உலகச் சிந்தனைக்குப் பிரான்ஸ் வளம் சேர்த்துள்ளது. அவர்களுள் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் அறிவியல் ஆய்வுகளை (Science studies) மேற்கொண்டவர்களுள் முக்கியமானவர் புரூனோ லதூர். அறிவியல் உலகம் எப்படி இயங்குகிறது, எப்படித் தரவுகளைப் பரிசீலித்துக் கோட்பாடுகளை உருவாக்குகிறது என்பதை ஆராய்வதே அறிவியல் ஆய்வுகள்.
இந்தத் திசையில் தன் ஆய்வுகளைத் தொடங்கிய லதூர், அறிவியல் உலகம் சமூக ரீதியாகவே, அதாவது மனிதர்களின்கூட்டியக்கத்தில், அவர்களின் அக உலகத் தேர்வுகளின் மூலமாகவே ‘புற உண்மைகள்’ என்று கூறப்படுவனவற்றை நிறுவுகிறது என்று கூறினார். உல்கர் ஸ்டீவ் என்பவருடன் இணைந்து அவர் எழுதிய ‘Laboratory Life: The Construction of Scientific Facts’ (1979/1986) நூல் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியது. இது அறிவியலாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அறிவியலின் சமூகக் கட்டுமானம் (Social construction of science) குறித்த மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது. லதூரின் நிலைப்பாடு புற யதார்த்தம் என எதுவுமே கிடையாது என்பதல்ல. மாற்றாகப்புற யதார்த்தத்தை மனிதர்கள் தங்கள் சமூகச் செயல்பாடுகளுக்குத் தக்கவே கட்டமைத்துப் புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான்.
இதைத் தொடர்ந்த லதூரின் சிந்தனை அறிவியல், தொழில்நுட்பம் வாழ்வை எப்படி மாற்றியமைக்கிறது, எப்படி நவீன அரசியலும் நவீன அறிவியலும் இணைகோடுகளாகப் பயணிக்கின்றன என்பதையெல்லாம் ஆராயத் தொடங்கியது. தொழில்நுட்பம் குறித்த தோரோ, காந்தி உள்ளிட்டவர்களின் வாழ்வியல் சார்ந்த விமர்சனமாக இல்லாமல், எப்படி அறிவியல் நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் வாழ்வைத் தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கின்றன என்பது இவரது ஆய்வுகளின் அடித்தளமாக இருந்தது. லூயி பஸ்தேர் குறித்து, பாரிஸின் மெட்ரோ ரயில் குறித்து அவர் தீவிர சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.
இதற்கு அடுத்த கட்டத்தில் அவர் நவீனமயமாதல் என்பதன் கருத்தாக்கப் பின்புலம் என்ன என்பதை ஆராய்ந்தார். ‘நாம் ஒருக்காலமும் நவீனமாக இருந்ததில்லை’ (We Have Never Been Modern) என்ற நூல் அவருடைய மிகச் சிறந்த பங்களிப்பு. இந்நூலில், இயற்கை என்பதையும் மானுட இயக்கம் என்பதையும் வேறுபடுத்திக் காண்பது என்கிற அடிப்படையிலேயே நவீன காலம் கட்டமைக்கப்பட்டது என்பதுதான்.
இந்த நவீன கால அமைப்பு விதிகள் செயல்படக் கடவுள் என்ற கருத்தை விலக்கிவைத்துவிட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இறையியலைப் பொறுத்தவரை முதலில் இயற்கையே கடவுளாக, மனிதர்கள் அதன் ஆளுகைக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். பின்னர் இயற்கை, மானுடம் ஆகிய இரண்டையும் கடவுள் படைத்தவரானார் (பெரும்பாலும் ஆண்பால்தான்). பின்னர் மனிதர்கள் கடவுளின் செல்லக் குழந்தைகள்; தனித்துவமிக்கப் படைப்பானார்கள். இயற்கை மனிதனுக்காகவே படைக்கப்பட்டதானது. மனிதனது தன்னுணர்வே, ஆன்மாவே, கடவுளின் அம்சமாகக் கருதப்பட்டு, இயற்கை மனிதனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்ததாகமாறியது. அதன்பின் நவீன காலத்தின் நுழைவாயிலில் மானுட சிந்தனையே கடவுளையும் இயற்கையையும் குறித்துச் சிந்திக்கிறது என்ற நிலை உருவாகி, கடவுளே ஒருபுறம் இருந்தாலும் மானுடம் தனக்குத்தானே எஜமானன் என்ற மானுடவாதம் வலுப்பெற்றது; கடவுளிடம் மனிதன் சுதந்திரவாத உரிமம் பெற்றவன் என்று கருதப்பட்டது (ஆண்பால் பயன்பாடு தேர்வுசெய்யப்பட்டது). இந்த மானுடவாதத்தின் விளைவாகத்தான் நவீன கால சிந்தனைக்கட்டமைப்பு உருவானது. ஆனால், அது கூறும்படியாக ஒரு காலத்திலும் மானுடம் தனித்து இயங்கவில்லை. அது இயற்கையின் அங்கமாகவே இருக்கிறது என்பதைத்தான் புரூனோ லதூர் ‘நாம் ஒரு காலத்திலும் நவீனமாக இல்லை’ என்று கூறுகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தச் சிந்தனை ஏன் தேவைப்படுகிறதென்றால், சுற்றுச்சூழல் மனிதர்களின் உற்பத்தி-நுகர்வுப் பெருக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுவதுதான் காரணம். ஆந்த்ரபோசீன் என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிற, மானுட செயல்களினால் உலகின் தட்பவெப்பம், சுற்றுச்சூழல் நிர்ணயிக்கப்படும் காலகட்டம் உருவாகிவிட்டது. தொடர்ந்து புவி வெப்பமடைந்தால் மனிதகுலம் உட்பட இப்போதுள்ள உயிரினங்கள் அனைத்தும் அழிந்துபோகும் என்று அறிவியலே கூறுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றால், இயற்கையையும் மனிதர்களையும் பிரித்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்பதே கடந்த இருபதாண்டுகளாக புரூனோ லதூரின் சிந்தனையாக, எழுத்துக்களாக, செயல்பாடுகளாக விளங்கி வந்துள்ளது.
அவருடைய முக்கியமான அறிவுரை, சுற்றுச்சூழல் இயக்கங்கள் ‘சூழலைக் காப்பாற்ற வேண்டும்; மழைக் காடுகளைக் காப்பாற்ற வேண்டும்; மரங்களைக் காப்பாற்ற வேண்டும்; பல்லுயிர்ச் சூழலைக் காப்பாற்ற வேண்டும்; துருவக் கரடிகளைக் காப்பாற்ற வேண்டும்’ என்றெல்லாம் பேசுவதை நிறுத்திவிட்டு, மானுடர் தங்களை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்று பேச வேண்டும் என்பதுதான். அதாவது, மானுடர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டே சுற்றுச்சூழலை, மழைக்காடுகளை, மரங்களை, பல்லுயிர்ச் சூழலை, துருவக்கரடிகளைக் காப்பற்ற வேண்டுமே தவிர, அவை மீது இரக்கப்பட்டு அதைச் செய்ய வேண்டியதில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று சொல்கிறார். மானுடரையும், இயற்கையையும் வேறுபடுத்தும் சொல்லாடலைக் கைவிடாமல், இயற்கையின் அரசியல் (Politics of Nature) உருவாக முடியாது என்பதே அவரது முக்கியச் செய்தி எனலாம். அந்தச் செய்தியை முன்னெடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.